
நடிகர் வடிவேலு மெய்யாலுமே இம்சை அரசனாகி படுத்தி எடுப்பதால், ’சந்திரமுகி - 2’ படக்குழுவே ’லகலக’ என்றிருக்கிறது.
ஷங்கர் தயாரிப்பிலான இம்சை அரசன் இரண்டாம் பாகம் உட்பட பல்வேறு விவகாரங்களில் சிக்கி கட்டம்கட்டப்பட்டதில், தொடர்ந்தார்போல சில வருடங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போனார் வடிவேலு. பிரச்சினைகள் சுமுகமாகி மீண்டும் தலைகாட்டத் தொடங்கியவர், பழைய வடிவேலுவை திரையில் முன்னிறுத்த முடியாது தவித்து வருகிறார். வடிவேலு திரைப்படங்கள் வெளியாகாத போதும், பழைய காமெடி காட்சிகள் முதல் மீம்ஸ் வரை ரசிகர்கள் அவரை கொண்டாடியே வந்தனர். ஆனபோதும், மறுபிரவேசத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை திருப்தி செய்ய முடியாது தவித்து வருகிறார். இதற்கு முழுநீள கதாபாத்திரத்தில் வடிவேலு தோன்றிய ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் வெளியான சடுதியில் வால் சுருட்டியதே உதாரணம்.
அடுத்தபடியாக அவர் நடிக்கும் திரைப்படங்களில் இருந்தும் வடிவேலுக்கு எதிரான புகார்களே குவிந்து வருகின்றன. லாரன்ஸ் ராகவா நடிக்க பி.வாசு இயக்கும் சந்திரமுகி -2 படக்குழுவினர், இதனை பாட்டாகவே படித்து வருகின்றனர். முதலில், ஒழுங்கான நேரத்தில் படப்பிடிப்புக்கு வடிவேலு வருவதில்லை என படக்குழுவினர் புலம்பும் அளவுக்கு அவருடைய நடவடிக்கை இருந்தது. அடுத்தபடியாக, படப்பிடிப்புக்கு வந்ததும், ’என்னுடைய காட்சிகளை முதலில் எடுங்கள்’ என்று படுத்த ஆரம்பித்திருக்கிறார் என புகார் வாசிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இயக்குநர் பி.வாசு பொறுமை இழந்து காரசாரமாகும் அளவுக்கு வடிவேலு நடந்துகொண்டதாகவும் குறைபடுகிறார்கள்.
’வடிவேலுக்கு என்னாச்சு, அவரா இப்படி நடந்துகொள்கிறார்..’ என்றெல்லாம் அவரின் கோலிவுட் நலம்விரும்பிகளே புலம்ப ஆரம்பித்திருக்கின்றனர். இதனால், வடிவேலுவை முன்னிறுத்தி கதை நெய்து வைத்திருந்த பலரும் தயங்கி வருகின்றனராம். மக்கள் இன்னமும் வடிவேலுவை கொண்டாடி வருவதன் மத்தியில், அவர் எதிர்கொண்டிருக்கும் தடுமாற்றம் கவலைக்குரியது. மக்களின் கவலைகளை மறக்கடிக்கும் நகைச்சுவை கலைஞன் விரைவில் தனது இயல்புக்கு திரும்பட்டும்!