'சந்திரமுகி 2’ சூப்பர் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

'சந்திரமுகி 2’ சூப்பர் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் ‘சந்திரமுகி2’ படம் குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

கடந்த 2005-ல் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி’. படம் வெளியாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.

இப்படத்தை பி.வாசு இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடிகர் வடிவேலுவு- ரஜினி கூட்டணியில் நகைச்சுவைக்கு இன்று வரை நல்ல வரவேற்பு இருக்கிறது.

முதல் பாகத்தை அடுத்து இந்த இரண்டாம் பாகத்திலும் வடிவேலு நடிக்கிறார். இப்போது நடிகர் ராகவா லாரன்ஸ் படம் குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘உங்கள் அனைவருடனும் நான் மகிழ்ச்சியான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ‘சந்திரமுகி2’ படத்திற்காக எனது உடலை நான் முழுவதுமாக மாற்றி இருக்கிறேன். இந்த மாற்றத்தை எனக்கு கொண்டு வந்த எனது ட்ரைய்னர் சிவா மாஸ்டருக்கு நன்றி.

அதே போல நான் செய்து வரும் பல உதவிகளுக்கும் நல்ல உள்ளங்கள் நிறைய பேர் துணை நிற்கிறீர்கள். அதற்கும் நன்றி. நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான், நான் நிறைய படங்கள் இப்போது நடித்து வருகிறேன். இனி மக்களுக்கு உதவுவதில் முழு பொறுப்பையும் நானே எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், நீங்கள் ‘லாரன்ஸ் ட்ரஸ்ட்’க்கு உதவ வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். உங்கள் அனைவரது அன்பு மட்டுமே வேண்டும்’ என அதில் தெரிவித்து இருக்கிறார்

‘சந்திரமுகி2’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஜூலையில் முடிவடைந்தது. முதல் கட்ட படப்பிடிப்பின் பெரும்பகுதி மைசூரில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்தான அறிவிப்பு இன்னும் வரவில்லை. மேலும், படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்தும் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in