‘பதான்’ திரைப்படத்துக்கு மீண்டும் கத்தரி: தணிக்கை வாரியம் முடிவு

பதான் படத்தில் ஷாருக் - தீபிகா
பதான் படத்தில் ஷாருக் - தீபிகா

‘பதான்’ திரைப்படத்தின் பாடல் சர்ச்சைக்கு ஆளானதை அடுத்து, அந்த திரைப்படத்தை மீண்டும் தணிக்கைக்கு ஆளாக்க சென்சார் போர்டு முடிவு செய்துள்ளது.

பாலிவுட் பாஷாவான ஷாருக்கானின் அடுத்த திரைப்படம் 5 வருட இடைவெளியில் வெளியாக இருக்கிறது. ஜனவரி 25 அன்று வெளியாகும் ’பதான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்துக்கான ரசிக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், விளம்பர முகமாகவும் பதான் திரைப்படத்திலிருந்து ’பேஷரம் ரங்’ என்ற பாடல் அண்மையில் வெளியானது. இதில் தீபிகா படுகோன் அரைகுறை ஆடைகளுடன் தோன்றிய காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக கவர்ச்சி காட்சிகளுக்கான பிகினியை காவி நிறத்தில் வடிவமைத்திருந்ததும் சர்ச்சையை உருவாக்கியது. இதன் மூலம் இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக பதானுக்கும், அதில் நடித்த ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருக்கு எதிர்ப்புகள் எழுந்தன.

பல்வேறு மாநிலங்களிலும் காவல் நிலையங்களில் புகார்கள், நீதிமன்றங்களில் வழக்கு பதிவு ஆகியவை அதிகரித்தன. இந்துக்களுக்கான விஷ்வ ஹிந்து பரிஷத் முதல் இஸ்லாமியர்களின் உலாமாக்கள் வரை படத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தினர். பாஜக ஆளும் மாநிலங்களிலும் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகள் கலந்தாலோசிக்கப்பட்டன.

பதான் படத்தில் பாடல் காட்சியால் படக்குழுவினருக்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அப்பால், திரைப்படத்தை தணிக்கை செய்தோரும் விமர்சனங்களுக்கு ஆளானார்கள். இதனையடுத்து தணிக்கை வாரியத்தின் தலைவரான பிரசூன் ஜோஷி, பதான் திரைப்படத்தை மீண்டும் பரிசீலிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

’படைப்பு உரிமையை வெளிப்படுத்துவது என்பது எவ்வகையிலும் பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தாது அமைவது அவசியம்’ என்பதை வலியுறுத்தியுள்ள ஜோஷி, தணிக்கை வாரியத்தின் பார்வை மற்றும் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின்னரே, பதான் திரைப்படம் திரையரங்குகளுக்கு செல்லும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சர்ச்சைக்குரிய பாடல் மட்டுமன்றி பல்வேறு காட்சிகளிலும் தணிக்கை வாரியத்தின் கத்தரி பாயும் என்று தெரிகிறது. பதான் திரைப்படத்தை முன்னிட்டு எழுந்த சர்ச்சையை, படத்துக்கான இலவச விளம்பரமாக எடுத்துக்கொண்ட படக்குழு, தற்போது மீண்டும் தணிக்கைக்கு ஆட்பட வேண்டியதால் புதிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மறுபக்கம், குறிப்பிட்ட தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதன் அடிப்படையில் தணிக்கை முடித்த ஒரு திரைப்படத்தை மீள் தணிக்கை செய்வது மோசமான முன்னுதாரணமாக மாறும் என்ற படைப்பாளர்களின் உரிமைக் குரல்களும் வலுத்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in