‘கேட்ச்சிங் கில்லர்ஸ்’ - சீரியல் கொலையாளிகளின் உண்மைக் கதைகள்

‘கேட்ச்சிங் கில்லர்ஸ்’ - சீரியல் கொலையாளிகளின் உண்மைக் கதைகள்

‘சீரியல் கில்லர்’... இந்த வார்த்தை இன்று திரைப்படங்களிலும், துப்பறியும் நாவல்களிலும் மலிந்துவிட்ட ஒன்று. பார்வையாளர்களை பயத்தில் உறையச்செய்யும் பல சீரியல் கொலைகாரர்களை நாம் திரையில் பார்த்திருப்போம். திரையில் பார்ப்பதற்கே பயமாக இருக்கும் சீரியல் கொலையாளிகளை, நிஜ வாழ்வில் எதிர்கொண்டவர்களின் அனுபவம் எப்படி இருக்கும், சீரியல் கொலையாளிகளைத் துப்பறிந்து பிடித்த காவல் துறை அதிகாரிகளின் அனுபவக் கதைகளும் எப்படி இருக்கும் என்பதைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கேட்ச்சிங் கில்லர்ஸ்’.

பொதுவாக ஒரு கொலை நடக்கிறது என்றால் கொலை செய்யப்பட்டவர்களுக்கு எதிரிகள் யார், என்ன காரணத்தால் கொலை நடந்திருக்கும் என்ற கோணத்தில்தான் விசாரணை நடக்கும். சீரியல் கொலையாளிகள் செய்யும் கொலைகள் அனைத்தும் காரணமற்ற கொலைகள். அதைச் செய்தவர் யார் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. உதாரணத்துக்கு, ஒரு கொலையாளி சென்னையிலிருந்து பேருந்தில் ஆந்திரா சென்று அங்கு சாலையில் இருக்கும் முன்பின் தெரியாத ஒருவரை இரவு கொலை செய்துவிட்டு, அடுத்தநாளே சென்னை திரும்பிவிட்டார் என்றால், ஆந்திரா போலீஸ் கொலையாளியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. இதுபோன்று, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பிய 3 கொலையாளிகளைப் பற்றி 4 எபிசோடுகளில் விவரிக்கிறது ‘கேட்ச்சிங் கில்லர்ஸ்’ டாக்குமென்ட்ரி தொடர்.

‘தி க்ரீன் ரிவர் கில்லர்’, ‘மேன் ஹன்டர்’, ‘ஹேப்பி ஃபேஸ் கில்லர்’ என்று 3 சீரியல் கொலைகாரர்கள் சம்பந்தப்பட்ட கொலைகளை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிருபர்கள் ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது காவல் துறை ஒரு குற்றத்தைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக ‘தி க்ரீன் ரிவர் கில்லர்’ வழக்கில் 20 ஆண்டுகள் கழித்து குற்றவாளியைக் கைது செய்ததைச் சொல்லும்போது, அந்தக் காவல் அதிகாரி உடைந்து அழுவதைப் பார்க்கும்போது இந்தக் கொலைகள் அவர்களையும் எப்படிப் பாதித்திருக்கிறது என்பதை இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தத் தொடர். அடையாளம் கண்டுபிடிக்க முடியாத கொலை செய்யப்பட்ட பெண்மணியின் பெயரை, அறிவியல் வளர்ச்சியின் மூலம் 30 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடித்து அவரது எலும்பையும், உடைமைகளையும் அவரது குடும்பத்திடம் சேர்ப்பதை 30 ஆண்டுகள் ஆனாலும் கொண்ட நோக்கத்தில் தொய்வில்லாமல் பணியாற்றியுள்ளார் ஒரு காவல் அதிகாரி.

இறுதியாகக் காட்டப்படும் ‘ஹேப்பி ஃபேஸ் கில்லர்’ வழக்கில், போலீஸ் எவ்வளவு அசட்டையாக இருந்துள்ளது என்பதைச் சமரசமின்றி பதிவுசெய்துள்ளது இத்தொடர். ‘ஹேப்பி ஃபேஸ் கில்லர்’ பற்றிய கடைசி 2 எபிசோடுகள் சினிமாவில் கூட பார்க்க முடியாத திருப்பத்தோடு நிகழ்ந்துள்ளது.

க்ரைம் நாவல்கள், திரைப்படங்கள் உங்களுக்குப் பிடிக்குமென்றால் இத்தொடரை ஒருமுறை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in