நடிகர் உபேந்திரா
நடிகர் உபேந்திரா

பிரபல நடிகர் மீது வன்கொடுமை வழக்கு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தலித் சமூகத்தினருக்கு எதிராக ஆட்சேபரமான கருத்துக்களைத் தெரிவித்த நடிகரும், அரசியல்வாதியான உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகர் உபேந்திரா. இவரது 'பிரஜாகியா' கட்சியின் ஆறாவது ஆண்டு விழாவை ஆக.12-ம் தேதி கொண்டாடினார். அப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிய உபேந்திரா, தலித் சமூகத்தினருக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தார். அவரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நடிகர் உபேந்திரா மீது உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநகரா உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் டயர்களை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் சமூக நலத்துறையின் உதவி இயக்குநர் ஒருவர், பெங்களூருவில் உள்ள காவல் நிலையத்தில் உபேந்திரா மீது புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு காவல் துணை ஆணையர் பி.கிருஷ்ணகாந்த் தெரிவித்தார். இந்த நிலையில், ஹல்சுரு கேட் காவல் நிலையத்தில் நடிகர் உபேந்திரா மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா முழுவதிலும் இருந்து நடிகர் உபேந்திராவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தை பருவத்தில் இருந்து கடுமையான பசி பட்டினியோடு வாடியவன் நான். பசி, அவமானம், அடக்குமுறையோடு வாழ்ந்தவன் ஒரு வகுப்பினரை இழிவாகப் பேசுவேனா? அப்படி பேசுவதனால் என்ன பயன்? ஒரு பழமொழியை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு தைரியம் இல்லையா" என பதிவிட்டுள்ளார். அத்துடன் அவரது சர்ச்சையான நேரலை வீடியோவும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in