திரைப்பட புரமோஷனுக்காக நடுரோட்டில் இப்படிச் செய்வதா?- நடிகர் மீது வழக்கு!

திரைப்பட புரமோஷனுக்காக நடுரோட்டில் இப்படிச் செய்வதா?- நடிகர் மீது வழக்கு!

படத்தின் புரமோஷனுக்காக, நடுரோட்டில் குறும்புச் செயலில் ஈடுபட்ட நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சென். இவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் நடித்துள்ள ’அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’ என்ற படம் வரும் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது. ரொமான்டிக் காமெடி படமான இதை வித்யா சாகர் சின்டா இயக்கியுள்ளார்.

இதில் ரஷ்கர் தில்லான், ரித்திகா நாயக் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான சாலையில், நேற்று ஒரு கார் வந்துகொண்டிருந்தது. அதில் நடிகர் விஷ்வக் சென் மற்றும் அவர் நண்பர்கள் இருந்தனர். அப்போது திடீரென சாலைக்குள் புகுந்த ரசிகர் ஒருவர், பெட்ரோல் கேனை கையில் வைத்தபடி காரை மறித்தார். பிறகு ’அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’ படத்தின் ஹீரோவைச் சந்திக்க வேண்டும். இல்லை என்றால், இங்கேயே பெட்ரோலை ஊற்றி தீக்குளிப்பேன் என்று கூறுகிறார்.

விஷ்வக் சென்
விஷ்வக் சென்

இதையடுத்து காரில் இருந்து இறங்கிய விஷ்வக் சென் நண்பர்கள் அவரைத் தடுக்கின்றனர். அவர் அந்த ஹீரோவை நான் பார்த்தால் தான் போவேன் என்று படுத்துக் கொள்கிறார். அந்தக் காரிலிருந்து இறங்கும் நடிகர் விஷ்வக் சென், அந்த ரசிகரிடம் பேசி கையில் இருக்கும் கேனை பிடுங்குகிறார். ஆனால், அவர் அதை தலையில் ஊற்றி தீ வைக்கப்போவதாக மிரட்டுகிறார்.

இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்றவர்கள் இதை வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். பிறகுதான், படத்தின் விளம்பரத்துக்காக தண்ணீர் கேனுடன் அவர்கள் இப்படி நடந்து கொண்டது தெரியவந்தது.

இதனால், பட புரமோஷனுக்காக நடுரோட்டில் இப்படியா செய்வது? என்று சமூக வலைதளங்களில் விஷ்வக் சென்-ஐ நெட்டிசன்ஸ் சரமாரியாக விளாசி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் அருண்குமார் என்பவர், பொது இடங்களில் அனுமதியின்றி அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக நடிகர் விஷ்வக் சென் மீது, மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.