விஜயகாந்தின் முதல் 100 நாள் படம் : ’அண்ணா சொன்னார்... அறிஞர் அண்ணா சொன்னார்!’

- எஸ்.ஏ.சந்திரசேகர் கட்டிய ‘சட்டம் ஒரு இருட்டறை!’
'சட்டம் ஒரு இருட்டறை’
'சட்டம் ஒரு இருட்டறை’

அரசியல் சமூக அவலப் படங்களை எடுப்பதில் தனி முத்திரை பதித்தவர்கள் தமிழிலும் உண்டு. அந்த வகையில், சட்டத்தை வைத்துக்கொண்டு படம் பண்ணிய இயக்குநர் எனும் பெருமைக்கு உரியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அதேசமயத்தில்... சட்டநுணுக்கங்கள் கொண்ட படத்தில், பாசம் இருக்கும். காமெடி இருக்கும். க்ரைம் கலந்திருப்பார். காதலும் சேர்த்திருப்பார். அரசியல் முகமூடியையும் கிழிப்பார். சமூகப் பிரச்சினைகளையும் குத்திக்காட்டுவார். அத்தனையையும் ஒவ்வொரு படத்துக்குள்ளும் நுழைத்துக் குழைத்துக் கொடுப்பதில் வல்லவர் எஸ்.ஏ.சி.

இவர் எடுத்த பல படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கின்றன. தமிழில் இருந்து பல மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. இவருக்கென ஒரு ஸ்டைல், இவருக்கென ஒரு பாணி, இவர் படத்துக்கென சில இயல்புகள் என வைத்துக்கொண்டு புகுந்து விளையாடிய மிகச்சிறந்த கதாசிரியர், அற்புதமான ரைட்டர், தெளிவான திரைக்கதை பண்ணுவதில் ரசனைக்காரர். எல்லாவற்றுக்கும் மேலாக அட்டகாசமாக இயக்கக்கூடியவர்! அப்பேர்ப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் ’சட்டம் ஒரு இருட்டறை’ என்று சொன்னது நினைவிருக்கிறதுதானே!

எடுத்துக்கொண்ட கதை சற்றே பழசுதான் என்றாலும் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் எல்லா சென்டர்களிலும் வெற்றி பெற்ற படம் என சாதனை படைத்தது. இன்றைக்கும் இந்தப் படத்தைப் பார்த்தால், அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும். இப்போதும் கூட ரீமேக் செய்யலாம்; எப்போதும் கூட ரீமேக் செய்யலாம்!

பெரிய தொழிலதிபரை மூன்று கெட்டவர்கள் இணைந்து கொன்றுவிட, அதைப் பார்த்துவிட்ட ஒருவர், சாட்சி சொல்கிறார். அதனால் மூவருக்கும் 12 வருட தண்டனை கிடைக்கிறது. ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் மூன்று பேரும் ஜெயிலில் இருந்து வெளியே வந்து, சாட்சி சொன்னவரைக் கொல்கிறார்கள். அவரின் மூத்தமகளைக் கற்பழித்துக் கொல்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்ணுக்கு முன்னே பார்த்துக்கொண்டு, அம்மாவுடனும் இன்னொரு அக்காவுடனும் இருந்தபடி கதறித்துடிக்கிறான் சிறுவன். இந்தச் சிறுவன்தான் ஹீரோ என்பதை, பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும்தானே!

ஆனால், பொத்தாம்பொதுவாக, சட்டப்படி சொல்லமுடியாமல் போகும். சட்டப் பாயின்ட்டுகளையெல்லாம் துணைக்கு வைத்துக்கொண்டு வாதப்பிரதிவாதங்கள் செய்தும் பலனில்லாமல் போகும். அப்படிப்பட்ட இந்தக் கதையை வைத்துக்கொண்டு, அழகாக ஒரு ’ரூட்’ போட்டு, திரைக்கதையுமாக்கி படமெடுத்ததுதான் எஸ்.ஏ.சி-யின் வெற்றி ஃபார்முலா.

போலீஸ் ஸ்டேஷனுக்கு குழந்தைகளுடன் சென்று, கொன்ற விவரங்களைச் சொல்லுவார்கள். ஆனாலும் பயனில்லை. ’’உள்ளே ஜெயில்ல இருக்கற மூணு பேரும் எப்படிப்பா கொன்னுருக்கமுடியும்’’ என்று போலீஸாரே கேட்பார்கள். நொந்து போன அந்தக் குடும்பம், தலை குனிந்து வீடு திரும்பும். அந்தச் சிறுவன் இளைஞனாவான். கொலை செய்யும் எண்ணமும் வளர்ந்து விஸ்வரூபமெடுத்திருக்கும்.

அந்த இளைஞனின் அக்கா, போலீஸாக இருப்பாள். ’’எந்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு அவர்கள் தப்பித்தார்களோ, அதே சட்டத்தைக் கொண்டு அவர்களைக் கொல்லுவேன்’’ என்று சபதமிடுகிறான் நாயகன். ’’சட்டத்தை மீறி எதையும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அதைத் தடுப்பவளும் நானே; உன்னைச் சிறை பிடிப்பவளும் நானே...’’ என்று சூளுரைக்கிறாள் நாயகனின் சகோதரி! ஆக, தம்பி தன் கையால் பழி வாங்கத் துடிக்கிறான். அக்காவோ, சட்டப்படி தண்டிக்க முடிவு செய்கிறாள்.

ஒருபக்கம் வில்லன்களின் கூட்டத்தைப் பந்தாடவேண்டும். இன்னொரு பக்கம் போட்ட சபதம் நிறைவேற வேண்டும். நடுவே அக்காவே ’கட்டை’யைக் கொடுக்கிறாள். ஆனால், அத்தனையும் சமாளிப்பான் ஹீரோ. அதுவும் எப்படி? மூன்று கொலைகள். அந்த மூன்று கொலைகளையும் சட்ட மீறலாக, சாட்சிகள் ஏதுமின்றி, சொல்லப்போனால் சட்டத்தையே சாட்சிகளாக்கிக்கொண்டு துவம்சம் பண்ணும் ஹீரோவின் கதைதான் ’சட்டம் ஒரு இருட்டறை.’

படத்தின் நாயகன் விஜயகாந்த். ஏற்கெனவே அப்படியும் இப்படியுமாக விஜயகாந்துக்கு படங்கள் வந்திருந்தன. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஏற்கெனவே ஒரு படத்தை எடுத்து அதுசரியாகப் போகவில்லை. விஜயகாந்துக்கும் அப்படித்தான். இயக்குநருக்கும் இப்படித்தான். வந்த படங்கள் எதுவும் விஜயகாந்துக்கு ஓடவில்லை. இயக்குநருக்கு வந்த படமோ பேர் சொல்லவில்லை. ஆக, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜயகாந்துக்கும் வெற்றிக்கனியை வழங்கியதில், முதல் படம் முழுமையான படம் என்கிற பெருமையைப் பெறுகிறது ’சட்டம் ஒரு இருட்டறை.’

நூறுநாள் விழாவெல்லாம் கொண்டாடினார்கள். அதையடுத்து இருவருக்குமே ஏகப்பட்ட படங்கள் வரிசையாக ஒப்பந்தமாகின. இருவருமே ஜோடி போட்டு, நிறையவே படங்களைத் தந்தார்கள். அந்த வகையில் விஜயகாந்த் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிக முக்கியமான படம். இப்போது விஜய்யின் ரசிகர்களாக இருக்கிற எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அவர் மகன் தளபதி விஜய் ரசிகர்களுக்கும் கூட மிக மிக முக்கியமான படம்!

படத்தின் கதை ஷோபா சந்திரசேகர். படத்தில், விஜயகாந்தின் பெயர் விஜய். அதுமட்டுமா? விஜயகாந்துக்கு ஆரம்பக் காலங்களில் டப்பிங் குரல்தான் கொடுக்கப்பட்டது. ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலும் விஜயகாந்த் பேசியிருக்கமாட்டார். அவருக்கு டப்பிங் கொடுக்கப்பட்டது. விஜயகாந்துக்கு டப்பிங் குரல் கொடுத்தவர்... தளபதி விஜய்யின் தாய்மாமாவான பிரபல பாடகர் எஸ்.என்.சுரேந்தர்.

‘பகலில் ஒரு தாகம் இரவில் அது தீரும்’ என்று ஒரு கிளப் டான்ஸ் பாட்டு. நம்மை ஆடவைக்கும் இசையாக அமைந்தது. பூர்ணிமா (பூர்ணிமா ஜெயராம் அல்ல) தான் நாயகி. கிளப் டான்ஸர். விஜயகாந்தின் காதலியாகவும் ஜோடியாகவும் நடித்தார். சங்கிலிமுருகன், செளத்ரி முதலான மூன்றுபேர் வில்லன்கள். அவர்கள் மூவரையும் தனித்தனியே, எந்தச் சாட்சியமும் இல்லாமல் கொல்லும்விதம் ஒவ்வொன்றுமே கைத்தட்ட வைக்கும். அந்த உத்திக்குக் கிடைத்த பாராட்டுதான் படத்துக்கு மிகப்பெரிய பலம்!

விஜயகாந்தின் அக்காவாக, போலீஸ் கேரக்டரில் வசுமதி. அக்காவுக்கும் தம்பிக்கும் நடக்கிற சட்ட சண்டைகள் கலாட்டா ரகம். அதுவும் தம்பியிடம் அன்பாகப் பேச்சுக் கொடுத்தபடியே அந்தக் கொலையைப் பற்றிய விஷயங்களை டேப்ரிக்கார்டரில் தெரியாமல் பதிவு செய்வதும், சொல்லி முடித்தபிறகு டேப்ரிக்கார்டரைப் போட்டால், பேசியது எதுவும் பதிவாகாமல் ’ஏமாறச் சொன்னது நானா?’ பாடல் ஒலிபரப்பாவதும் தெறி ரகம்.

அன்றைக்கு விஜயகாந்தை விட பல படிகள் முன்னேறி உயரத்தில் இருந்தார் ரஜினிகாந்த். ஆனால், ரஜினிகாந்தின் இந்தித் திரையுலகின் ஆரம்ப வெற்றிக்கு, இந்தப் படம் மிக முக்கியக் காரணம். ஆமாம்... இங்கே விஜயகாந்த் நடித்த கேரக்டரில் அங்கே ரஜினி நடித்திருந்தார்.

‘சட்டம் ஒரு இருட்டறை அண்ணா சொன்னார், அறிஞர் அண்ணா சொன்னார்’ என்கிற பாட்டு, அப்போது எங்கு பார்த்தாலும் ஒலித்தன. படத்துக்கு இசை சங்கர் கணேஷ். படத்திலும் (சங்கர்) கணேஷ் நடித்திருப்பார். அந்தப் பாட்டுக்கு உள்ளே வருகிற காட்சிகள் பொளேர், சுளீர் ரகங்களாக இருந்தன. சமூக அவலங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சட்டத்தின் பாரபட்சங்களையும் சாமான்யர்களின் பார்வையில் இருந்தே படமாக்கி, திரி கொளுத்திப்போட்டிருப்பார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

’தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்/ இனிமையின் கவிதைகள் பிறந்தது/ இளமையின் நினைவுகள் பறந்தது என்ற பாடலை எஸ்.என்.சுரேந்தரும் எஸ்.ஜானகியும் பாடினார்கள். அழகிய மெலடிப் பாடலாக அமைந்த பாடலை எப்போதும் கேட்கலாம். வடலூரான் கம்பைன்ஸ் பேனரில் சிதம்பரம், படத்தைத் தயாரித்திருந்தார்.

சட்டம் ஒரு இருட்டறை... விஜயகாந்தையும் எஸ்.ஏ.சந்திரசேகரையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய மிக முக்கியமான படம். பின்னாளில், புரட்சிக்கலைஞர் என்றும் கேப்டன் என்றும் விஜயகாந்த் மிகப்பெரிய அளவில், மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகராக வளர்ந்தார். தமிழ்த் திரையுலகில், கிராமங்களில் உள்ள சிறிய தியேட்டர்களும் டூரிங் தியேட்டர்களும் கரன்ட் பில் கட்டுவதற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் மாதக்கடைசியில், எம்ஜிஆர் படத்தைத் திரையிட்டார்கள். அதையடுத்து விஜயகாந்த் படங்களைத் திரையிட்டு மிகப்பெரிய லாபத்தைக் கண்டார்கள்.

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது ‘சட்டம் ஒரு இருட்டறை’. படம் வெளியாகி, 42 ஆண்டுகளாகிவிட்டன. தமிழ் சினிமாவின் மெகா வெற்றியையும் வசூலையும் குவித்த வகையிலும், கேப்டன் விஜயகாந்தின் திரையுலக வாழ்வில், முதல் வெற்றிப்படமாகவும் முதல் நூறு நாள் படமாகவும் அமைந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மிகப்பெரிய ‘வேல்யூ’வை உயர்த்திக் கொடுத்த படமாகவும் திகழ்ந்து, அவர்களின் பக்கம் வெளிச்சம் பாய்ச்சியது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in