
நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பாடல் குறித்து அதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்தக் கதை மூன்று பாகங்களாக வெளிவர இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷின் நாற்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூலை 28ம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
தற்போது இந்தப் படத்தின் முதல் பாடல் குறித்தான அப்டேட்டை அதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ’நான் காயங்கள் ஏற்படுத்துவதற்கு முன்பு என்னை பரிசோதித்துக் கொள்வேன். என் பெயரை பார்த்து பயப்படக் கற்றுக் கொள். இனிமேல், உன் கண்கள் அதைப் பார்க்காது’ என்ற அர்த்தத்தில் இரு வரிகளை ஆங்கிலத்தில் போட்டு பின்னர், ‘நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்...கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ எனத் தெரிவித்து பாடல் வந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ரசிகர்கள் வரும் அக்டோபர் 2ம் தேதி படத்தின் முதல் சிங்கிளை எதிர்பாக்கலாமா என்றும் பாடல் வரிகளே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்து வருகின்றனர்.