புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அவர்களுக்கான மருத்துவ சேவையில் ஈடுபட்டிருப்போர் என 4,500 பேருக்கு லியோ திரைப்படத்தின் டிக்கெட்டுகளை வழங்கி பில்ரோத் மருத்துவமனை சாதனை படைத்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’லியோ’. ரஜினிகாந்த் திரைப்படங்கள் போன்றே விஜய்க்கும் மாஸ் ஓபனிங் வாய்ப்பது வழக்கம் என்பதால், அவரது திரைப்படங்கள் வெளியாகும்போது குடும்பமாகவும், குழுவாகவும் பார்ப்பது அதிகரித்து வருகிறது.
நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிர்வகிப்போரில் தங்கள் ஊழியர்களை உற்சாகமூட்ட விரும்புவோர், மொத்தமாக சினிமா டிக்கெட்டுகளை பெற்று பரிசாக வழங்குவதுண்டு. இது மட்டுமன்றி விடுப்பில் தாராளம் காட்டுவதும் நடக்கும். ரஜினி வரிசையில் விஜய் திரைப்படங்களுக்கும் இவை நிகழ்ந்து வருகின்றன.
புற்றுநோய் சிகிச்சையில் பிரபலமான பில்ரோத் மருத்துவமனை, புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு பரிசாக தற்போது லியோ டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது. கூடவே புற்று நோய்க்கு எதிரான சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் லியோ டிக்கெடுக்களை வாரி வழங்கியுள்ளது. டிக்கெட்டுகளுடன் உணவுக்கான கூப்பன்களும் வழங்கப்பட்டுள்ளன.
பிங்க் அக்டோபர் என்ற பெயரில் அக்டோபர் மாதம் நெடுக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நீடிப்பது வழக்கம். அந்த வகையிலும் புற்றுநோய்க்கு எதிரான கவன ஈர்ப்பாகவும் பில்ரோத் மருத்துவமனை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நிதர்சன வாழ்வின் அழுத்தங்கள், துயரங்கள், வதைகளில் இருந்து மீட்பதில் பொழுதுபோக்கு சினிமாக்களுக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக மாஸ் ஹீரோவின் ஜனரஞ்சகமான திரைப்படத்தை, அது வெளியான சில தினங்களில், திரையரங்கில் கூடி ரசிக்க 4500 பேர் தயாராகி உள்ளனர். பில்ரோத் மருத்துவமனையின் முன்னுதாரண நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகளும் எழுந்துள்ளன.