கஸ்தூரிக்கு ‘அல்வா’ கொடுத்த அமாவாசையை மறக்கமுடியுமா?

மணிவண்ணனின் ‘அமைதிப்படை’ கிளப்பிய அதிரடிப் புயல்!
கஸ்தூரிக்கு ‘அல்வா’ கொடுத்த அமாவாசையை மறக்கமுடியுமா?

இன்றைக்கு எவரேனும் நம்மிடம் பொய் சொல்கிறாரென்றால், ‘உருட்டு உருட்டு’ என்போம். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய ‘லவ் டுடே’ படத்தில் கூட நாயகி போனில் சில விஷயங்களைச் சொல்ல, ‘’உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு..’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார் நாயகன். அப்போது மொத்தத் தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரித்தது.

அந்தக் காலத்தில், இப்படி ஏமாற்றுபவர்களை ‘என்ன காதுல பூ சுத்துறியா?’ என்று கேட்பார்கள். பிறகு சினிமா என்பது நம் வாழ்வில் இரண்டறக் கலந்ததற்குப் பிறகு, ‘சரியான ரீல் பார்ட்டிடா அவன்’ என்றெல்லாம் பொய்யர்களை விமர்சிக்கத் தொடங்கினார்கள். சினிமாவின் நுட்பங்களை ஓரளவுக்கு அனுமானிக்கத் தெரிந்த காலகட்டத்தில், ’இந்தக் காட்சியில் இந்த நடிகருக்கு டூப் போடப்பட்டிருக்கிறது’ என்பதெல்லாம் தெரிந்த போது, ‘’செம டூப் பார்ட்டிடா’’ என்று கிண்டல் செய்தார்கள்.

சினிமா பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிய அடுத்தடுத்த காலகட்டங்களில், பொய் சொல்பவர்களைச் சொல்ல புதிதுபுதிதாக வார்த்தைகள் வந்துவிட்டன. அவற்றில் மக்கள் மனதில் நிரந்தரமாக இடம்பிடித்தவற்றில் ’’அட... நல்லா அல்வா கொடுக்கறியே...!’’ என்பதும் ஒன்றாகிப் போனது.

இனிக்க இனிக்க இருக்கிற அல்வாவை, இன்னும் நான்கைந்து விள்ளல் சாப்பிடலாமே என்று நாம் அனைவருமே ஆசைப்படுகிற அல்வாவை, ஏமாற்றுவதற்கான குறியீடாக திரையில் காட்டிய படத்தை, அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். படத்தின் பெயரில் இருப்பது, படம் முழுக்க இருக்காது. அந்தப் படத்தின் பெயர்... ‘அமைதிப்படை’. படம் தொடங்கியது முதல், முடிகிற வரை நம்மால் அமைதியாக உம்மென்று உட்கார்ந்து படம் பார்க்கமுடியாது.

ஒவ்வொரு காட்சிக்கும் வெடித்துச் சிரித்தோம். சிரித்து ரசித்தோம்! இது... மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் உருவாகிப் பட்டையைக் கிளப்பிய அமைதிப்படை.

போலீஸில் பணிபுரியும் தங்கவேலு சொந்த கிராமத்துக்கு வருகிறார். அவருக்கு பெண் பார்த்திருக்கிறார்கள். எல்லோரும் பெண் பார்க்கப் போகிறார்கள். ரஞ்சிதாவைத்தான் பெண் பார்க்க வந்திருக்கிறார் சத்யராஜ். ஆனால் எல்லோரும் பெண்ணைப் பார்த்திருக்க, சத்யராஜ் மட்டும் பார்க்காமல் விட்டுவிடுகிறார். பிறகு ரஞ்சிதாவைப் பார்க்கப் போகிறார். அடிக்கடி பார்க்கச் செல்கிறார். இதையடுத்து நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது எதிர்பார்ப்புகள் குறித்து பேசப்படுகிறது. ‘’கட்டுன புடவையோட அனுப்பிவைங்க. அதுபோதும்’’ என்கிறார் சத்யராஜ்.

’அட... வரதட்சணை அதுஇதுன்னு எதுவும் கேக்காம இருக்காரே...’ என கிசுகிசுவெனப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது ஒருவர், ’’குறை இருக்குங்கறதாலதான் ஒண்ணும் வேணானு சொல்றீங்களா?’’ என்று கேட்டுவிடுவார். இந்தப் பேச்சு சமாதானமாக நான்கு பேர் பேச, ‘என்ன குறை என்ன குறை’ என்று பெரும்பாலானோர் ஊதிப்பெரிதாக்க... ’’மாப்ளைக்கு அவங்க அப்பன் பேரு தெரியாதுல்ல’’ என்று சொல்ல, ஆவேசத்திலும் அவமானத்திலும் எல்லோரையும் அடித்து உதைத்து தன் கோபம் தணித்துக் கொள்கிறார் தங்கவேலு. இந்தக் கதாபாத்திரம்தான் நாயகன். அவர்தான் சத்யராஜ்.

அதே கோபத்துடன் வீட்டுக்கு வருகிறார். அம்மாவின் படத்தை ஆவேசத்துடன் பார்க்கிறார். அம்மாவின் படத்தைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார். அவருடைய தாத்தா எஸ்.எஸ்.சந்திரன், அவரை அமைதிப்படுத்துகிறார்.

அங்கே தொடங்குகிறது ஒரு ஃப்ளாஷ்பேக்.

தாயம்மா. அவர்தான் போலீஸ் சத்யராஜின் அம்மா. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் கஸ்தூரி. பேரழகுடன் அந்தக் கிராமத்தில் வலம் வருகிறாள். அவளின் அழகில் பொறாமை கொள்ளும் தோழிகள், ‘’பாரேன்... இவ இருக்கற அழகுக்கு அப்படியே நேர்மாறா அமாவாசை மாதிரி இருட்டா இருக்கற ஒருத்தன் வரப்போறான்’’ என்று கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்கள்.

அந்த ஊரில் உள்ள அரசியல்வாதி மணிவண்ணன். கோயிலில் சிதறுகாய் உடைக்கிறார்கள். அந்தத் சிதறிய துண்டுத்துண்டு தேங்காய்களைப் பொறுக்கிறான் ஒருவன். அவனுடைய பெயர் அமாவாசை. இதுவும் ஒரு சத்யராஜ். அமாவாசையின் செயல்களையெல்லாம் பார்த்துவிட்டு, மணிவண்னன் அவரை அழைப்பார். ‘’ஏம்பா ஏழடிக்கு கையும் காலும் வைச்சிகிட்டு, நல்லாத்தானேப்பா இருக்கே, அப்புறம் ஏன் இப்படிலாம் பொறுக்குறே’’ என்று பேச்சு கொடுக்க, அதன் பிறகு அமாவாசை பேசுகிற பேச்சைக் கேட்டு அரசியல்வாதி மணிவண்ணன் வெலவெலத்துப் போகிறார். அமாவாசையின் பேச்சில், அமிஞ்சிக்கரை தொடங்கி அமெரிக்கா வரை உலக விஷயங்கள் மொத்தமும் பேச, யார்தான் மலைக்கமாட்டார்கள்? ’’நீ எங்கிட்ட வேலைக்கு வந்துருய்யா’’ என்று சத்யராஜை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் மணிவண்ணன்.

இந்தச் சமயத்தில்தான், தாயம்மாவை சந்திக்கிறார் அமாவாசை. அவளுடைய அழகில் மயங்குகிறாள். காதல் எனும் வலையை வீசுகிற அமாவாசையிடம் பெளர்ணமி நிலவென இருக்கும் கஸ்தூரி தன் மனதைக் கொடுக்கிறார். ஒவ்வொரு முறை சந்திக்கும்போது, தித்திக்கத் தித்திக்கப் பேசுகிற அமாவாசை, ஒருநாள் ‘அல்வா’வை வாங்கி வந்து கொடுக்கிறார். அந்த ‘அல்வா’வுக்குள் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாமல், தன் காதலன் ஆசையும் அன்புமாக வாங்கிக் கொடுத்த அல்வாவை, தாயம்மா சாப்பிட, அவள் மயங்க... பிறகென்ன... இந்த அமாவாசை, தாயம்மாவின் வாழ்க்கையையே அமாவாசையாக்க.. கதறித் துடிக்கிறார் தாயம்மா.

தாயம்மா, தாயாகப் போகிறாள். இதையெல்லாம் சொல்லிக் கெஞ்சினாலும் அமாவாசை மசியவில்லை. ஏதேதோ காரணங்கள் சொல்லி ஏமாற்றிக்கொண்டே இருக்க, செய்வதறியாது கைபிசைந்து தவிப்பதைத் தவிர, தாயம்மாவால் வேறெதுவும் செய்யமுடியவில்லை.

இந்தக் கட்டத்தில் மணிவண்ணனுக்கு இந்த முறை தேர்தலில் நிற்க, ‘சீட்’ மறுக்கப்படுகிறது. இதில் கொதித்துப் போகும் மணிவண்ணன், தன்னுடன் இருக்கும் அமாவாசையை சுயேச்சை வேட்பாளராக நிறுத்திக் களம் காண்கிறார். தனக்கு சீட் தராத கட்சியைப் பழிவாங்க நினைத்த மணிவண்ணனுக்கு இந்த அமாவாசையின் சூழ்ச்சிகள் ஏதும் புரியவே இல்லை. வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் எண்ணிக்கை அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வித்தியாசம் கூடிக்கொண்டே போகிறது. மணிவண்ணனுக்கு எதிரே சிகரெட் பிடிக்காத சத்யராஜ், வெளியே சென்று சிகரெட் பிடிக்கிறார்.மீண்டும் உள்ளே நுழைகிறார். வாக்கு வித்தியாசம் அமாவாசைக்கு அதிகம் கிடைத்து முன்னேறிக்கொண்டே போக... மணிவண்ணனுக்கு எதிரே சிகரெட் பிடிக்கிறார் அமாவாசை. நாற்காலியின் முனையில் லேசாக அமருகிறார். இன்னும் இன்னுமாக எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாற்காலியில் சற்றே நகர்ந்து உட்காருகிறார். இன்னும் அதிக வாக்கு வித்தியாசம் என அறிவிக்க, நன்றாகச் சாய்ந்து உட்காருகிறார். மிகப்பெரிய வித்தியாசம் சொல்லுகிற வேளையில், கால்மேல்கால் போட்டுக்கொண்டு, ஸ்டைலாக உட்காருகிறார். ‘’என்ன அமாவாசை இது?’’ என்று மணிவண்ணன் நொந்துபோய் பார்க்க... ‘’சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ.’’ என்று எகத்தாளத்துடன் அலட்டலாகச் சொல்ல, குறுகித் தவிக்கும் மணிவண்ணனை விடுங்கள்! அரசியலின் அப்பட்டத்தை பொளேரென்று அறைந்து சொன்ன காட்சியாகத்தான் இதைப் பார்த்து விசிலடித்தார்கள் ரசிகர்கள்!

இதையடுத்து வளர்ச்சி... சூழ்ச்சி... அரசியல் என்று காட்சிகள் வந்துகொண்டே இருக்கும். வசனங்கள் தெறித்துக் கொண்டே இருக்கும். சத்யராஜின் நக்கலும் நையாண்டியும் கூடிக்கொண்டே போகும். சத்யராஜின் குசும்பு, குறும்பு காமெடிகளுக்கெல்லாம் வித்திட்டவரே மணிவண்ணன் தான்! இதை பல மேடைகளில் சொல்லி நெகிழ்ந்திருக்கிறார் சத்யராஜ். மணிவண்ணனின் அல்லுசில்லு அரசியல் வசனங்களை, தன் டயலாக் டெலிவரியால் பகடி செய்து நார்நாராக்கியிருப்பார் சத்யராஜ்!

அரசியல் படங்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் அமைதிப்படையில் அநியாயத்துக்கு ரகளையாகவும், கேலியாகவும், அப்பட்டமாகவும் அடித்து துவைத்துக் காயப்போட்டிருப்பார் மணிவண்ணன்.

அவரின் வசனங்களுக்கு எப்போதுமே தனி ஈர்ப்பு உண்டு. இதிலும் அப்படித்தான்! அதேசமயம், பெண் குழந்தை ஒன்றுக்கு பெயர் வைக்கும் போது, அமாவாசை என்கிற நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ. வின் மனைவியான சுஜாதாவிடம் சொல்ல, சுஜாதா, அந்தக் குழந்தைக்கு... ’தாயம்மா’ என்று பெயர் வைக்கிறார். அதிர்ந்து போகிறார் சத்யராஜ், இப்படி திரைக்கதையில் பல விஷயங்களைக் கோத்து அழகிய மாலையாக்கியிருப்பார் மணிவண்ணன்.

அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கிற அடுத்தடுத்த மோதல்கள், சுவாரஸ்யம் குறையாமல் சொல்லப்பட்டிருக்கும். ’மிஸ்டர் பாரத்’ படத்தில் ரஜினியும் சத்யராஜும் செய்ததுதான். இதேபோல பல படங்கள் வந்திருக்கின்றனதான். ஆனால், அதற்குள் அரசியல் சமாச்சாரங்களைப் புகுத்தி, சமரசமே இல்லாமல் பகடி செய்ததுதான் ‘அமைதிப்படை’யின் தனித்துவம்!

இளையராஜாவின் இசை படத்தின் காட்சிகளை தூக்கி நிறுத்தியிருக்கும். ’’ஏண்டா மணியா. இந்தக் கால அரசியலை, சோஷலிஸம், ஜனநாயகம்னு ரெண்டே வார்த்தைல சொல்லிடுறானுங்க.ஜாதகத்தை வைச்சிட்டு இவ்ளோ நேரம் ஆக்குறாரே ஜோஸியரு’’ என்று அரசியல்வாதி சத்யராஜ் சொல்ல, ’’இனிமே உங்களுக்கு டைம் சரியில்ல’’ என்று ஜோதிடர் சொல்ல... அந்த ஜோஸியரைப் போட்டுத்தள்ளுகிற காட்சி மிரட்டலாக இருக்கும்.

கஸ்தூரி, சுஜாதா, ரஞ்சிதா என பலரும் சிறப்பாக நடித்தார்கள். ஆனால், படம் முழுக்க மணிவண்ணனும் சத்யராஜும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து ஸ்கோர் செய்துகொண்டே இருந்தார்கள். எப்போதும் பார்க்கலாம் என்பதான படம் அமைதிப்படை. எப்போதும் மறக்கமுடியாத படங்களில் இடம்பெற்றிருக்கும் படம் அமைதிப்படை. இயக்குநர் மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் உண்டான பல அசத்தலான படங்களில், முக்கியமானதொரு இடம் ’அமைதிப்படை’க்கு உண்டு.

சத்யராஜ் சொல்ல, ‘அல்வா’வும் அதில் கலக்க அபினும் வாங்கித் தரும் நடிகர் வாசு, இந்தப் படத்துக்குப் பிறகு ‘அல்வா’ வாசு என்றே அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு ‘அல்வா’ பொய்க்கும் ஏமாற்றுத்தனத்தும் உதாரணமாகிப் போனது!

1994ம் வருடம் ஜனவரி 14ம் தேதி பொங்கல் நாளில் வெளியானது ‘அமைதிப்படை’. மிகப்பெரிய வசூலைக் குவித்தது. பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. 29 வருடங்களுக்கு முன்பு, நமக்கு அமைதிப்படையைத் தந்த இயக்குநர் மணிவண்ணன், இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் அமைதிப்படையும் அதன் தாக்கமும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் சென்றுகொண்டே இருப்பதுதான், மணிவண்ணன் எனும் மகத்தான கலைஞனின் அசாத்தியத் திறமை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in