
``தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது'' என்று தமிழகத்தின் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழகம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இதற்கு தமிழகத்தை ஆளும் திமுக சார்பில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்துமே கண்டனம் தெரிவித்துள்ளன. எல்லாவற்றிலும் திமுகவுக்கு எதிர் நிற்கும் அதிமுகவும் கூட தமிழ்நாடு என்பதிலேயே உறுதியாக இருப்போம் என்று தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசன் இது குறித்த தனது கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் தனது கருத்தை கண்டனமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்த அவரது பதிவில், “ ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதிபோல நடந்து கொள்கிறார். இந்த தேர்தலில் அவருடைய எஜமானர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அதனால் அவரை பயம் பற்றிக் கொண்டிருக்கிறது. தற்போதைய யுத்தம் என்பது பிரிவினைவாதத்திற்கும், வெறுப்புப் பேச்சிற்கும் எதிரானது. ஆளுநர் பதவி விலக வேண்டும். அவரின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.