‘பிணவறைகளுக்குச் சென்று பார்வையிட்ட அமலா பால்’ - ‘கடாவர்’ இயக்குநர் சொன்ன பகீர் தகவல்!

‘பிணவறைகளுக்குச் சென்று பார்வையிட்ட அமலா பால்’ -   ‘கடாவர்’ இயக்குநர் சொன்ன பகீர் தகவல்!

‘அமலா பால் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் நடிகை அமலாபால் முதன்முதலாகத் தயாரித்திருக்கும் 'கடாவர்' திரைப்படம் ஆகஸ்ட் 12-ல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் அமலா பாலுடன் ஹரீஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமலா பால், “கரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு முதன்முறையாக இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கிறேன். அபிலாஷ் பிள்ளை பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ். பணிக்கரும் என்னைச் சந்தித்து 'கடாவர்' படத்தின் கதையை கூறினர். என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதைப் பார்த்ததும் படத்தை நானே தயாரிக்க முடிவெடுத்தேன். இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக திகழ்ந்த என்னுடைய தாயார் மற்றும் சகோதரருக்கு நன்றி. நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டபோது பல வடிவங்களில் தடைகள் உருவாகின. கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசிர்வாதத்தாலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ‘கடாவர்’ படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது. பல ‘மெடிக்கல் க்ரைம்’ திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல் துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விசயங்களும் நேர்த்தியாக இருக்கும். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த 'கடாவர்' திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

இப்படத்துக்குக் கதை எழுதிய அபிலாஷ் பிள்ளை பேசுகையில், ”நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினாலும், என்னுடைய கனவு சினிமா தான். 2010- களில் என்னுடைய சகோதரர் இறந்தார். அவரது உடல், உடற்கூறாய்வு செய்வதற்காக பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்வையிட்ட போது தான் இப்படத்திற்கான கதை கரு உருவானது. அதன் பிறகு இயக்குநர் அனூப் எஸ் பணிக்கருடன் இணைந்து ஓராண்டு திரைக்கதையை எழுதினோம். பிறகு இந்த கதையை அமலா பால் தயாரிக்க விருப்பம் தெரிவித்த போது, எங்களுக்கு இருந்த கவலை அகன்றது. அவர் பல தடைகளைக் கடந்து இப்படத்தை உருவாக்கினார்'' என்றார்.

இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர்
இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர்

இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் பேசுகையில், “பல்வேறு தயாரிப்பாளர்களைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னபோது ஒவ்வொருவரும் பல ஆலோசனைகளை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தைத் திசைதிருப்பவே முயற்சித்தார்கள். இதனால் சோர்வு ஏற்பட்டது. இந்த தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலா பாலைச் சந்தித்தோம். அவரிடம் கதையைக் கூறியதும், 'பிடித்திருக்கிறது. நடிக்கிறேன்' என்றார். அதன் பிறகு தயாரிப்பாளரைத் தேடினோம். அமலாபால் நாயகி என்றதும் அவர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இந்த படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமலபால் நம்பிக்கை அளித்தார். அந்தத் தருணம் முதல் இந்த தருணம் வரை அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தருகிறார். 2018-ல் இதற்கான பணிகளைத் தொடங்கினோம். இடையில் கரோனா பரவல் காரணமாக படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றது. இருப்பினும் படத்தின் பணிகளை நிறைவு செய்தோம்” என்றார்.

மேலும், “காவல் துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் பத்ராவாக நடிகை அமலாபால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம்பெற்றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். அவரது கதாபாத்திரம் திரையில் நேர்த்தியாக தோன்றுவதற்கு, அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியும் ஒரு காரணம்” என்று அனூப் எஸ். பணிக்கர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in