கர்ப்பிணியாக நாடுகடத்தப்பட்ட புரட்சிப் பெண் ‘ஓல்கா’ - பிரேசில் திரை விழா

கர்ப்பிணியாக நாடுகடத்தப்பட்ட புரட்சிப் பெண் ‘ஓல்கா’ - பிரேசில் திரை விழா
‘ஓல்கா’ திரைப்படம்

சர்வதேச சினிமா காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை யுத்தத் திரைப்படங்கள். இவற்றில், நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் சேர்ந்து மிரட்டிய ‘இரத்தத்திலகம்’ பாணியிலான தாய்நாட்டைக் காக்க உயிர்நீத்தலை விதந்தோதும் சினிமாக்கள் தனி ரகம்.

ஹாலிவுட்டிலும் இதே பாணியிலான, ‘பேர்ள் ஹார்பர்’, ’சேவிங்க் பிரைவேட் ரியன்’ உள்ளிட்ட தேசபக்தி புகழ்பாடும் யுத்தத் திரைப்படங்கள் வந்துள்ளன. நாடி நரம்புகள் புடைக்க அவற்றை பார்த்து ரசிக்கவும் உலகெங்கிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

மறுமுனையில் யுதத்தின் பல்வேறு முகங்களை நுட்பமாகக் காட்சிப்படுத்திய திரைப்படங்களும் உள்ளன. முன்பின் தெரியாத மனிதர்களையும் மூர்க்கமாகத் தாக்கி கொல்லச் சொல்லும் கொடூர நிகழ்வே யுத்தம் என ஹாசியமும் வேதனையும் முயங்க உணர்த்தும், சாப்ளினின் ‘கிரேட் டிக்டேட்டர்’, ‘நோ மேன்ஸ் லாண்டு’ போன்ற படங்கள் 2-ம் வகை. இவை அன்றி, யுத்த களத்தைக் காட்டாமலேயே போரின் கோர முகத்தைப் பார்வையாளரின் ஆழ்மனதில் பதித்த, ‘53 வார்ஸ்’, ’லாஃப் ஆர் டை’ போன்ற படங்களும் வரத் தொடங்கியுள்ளன.

இந்தப் பின்னணியில், உலகப் போர்கள் என்றதுமே அமெரிக்க, ஐரோப்பியத் திரைப்படங்கள்தாம் ஆஸ்கர் வரை கவனம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவ்விரு கண்டங்களைத் தாண்டி பிற நாடுகளிலும் அதிசிறந்த யுத்தத் திரைப்படங்கள் உலகப் போர் குறித்து வெளிவந்துள்ளன. அவ்வாறு 2004-ல் பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ‘ஓல்கா’.

ரஷ்யாவிலும் பிரேசிலிலும் கம்யூனிச கொள்கையை நிலைநாட்டப் போராடிய பெண் ஓல்கா பெனாரியோ. இவரது வாழ்க்கை சரித்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இளம்பருவத்திலேயே கம்யூனிச கொள்கையுடன் தன்னைப் பிணைந்து கொண்டார் ஓல்கா. ஒரு கட்டத்தில் உள்நாட்டில் உயிருக்கு ஆபத்து ஏற்பட ரஷ்யாவுக்குத் தப்பிச்சென்று அங்கு ராணுவப் பயிற்சி பெற்றார்.

ரஷ்யாவுக்கு ரகசிய உளவாளியாகவும் செயல்பட்டு தனது விசுவாசத்தைக் காட்டினார். மீண்டும் சொந்த நாடு திரும்பியவர், பிரேசிலின் புகழ்வாய்ந்த கம்யூனிசத் தலைவரான லூயிஸ் கார்லோஸ் பிரஸ்டஸுடன் கைகோர்த்தார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து திருமணப் பந்தத்துக்குள் நுழைந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக 1935-ல் பிரேசில் கெடியோ வர்கசின் சர்வாதிகார ஆட்சிக்குள் அகப்படுகிறது.

7 மாத கர்ப்பிணியான ஓல்கா கைது செய்யப்பட்டுப் போர் கைதியாக, ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார். யூதக் குலத்தைச் சேர்ந்த ஓல்கா, நாஜி சித்திரவதை முகாமில் அடைக்கப்படுகிறார். ஓல்காவும் அவரது குழந்தையும் என்னவானார்கள் என்பதை காதலும், புரட்சிக்கான உத்வேகமும், துரோகமும், குரோதமும், போராட்டமும் நிறைந்த திரைக்காவியமாக பேசுகிறது ’ஓல்கா’.

சிறந்த அயல்நாட்டுத் திரைப்படப் பிரிவில், ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட இந்தப் படம் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரேசில் வழங்கும் தேசிய விருதுகள், சர்வதேச திரைப்பட விழாக்கள் வழங்கும் விருதுகள் என 16 விருதுகளை வென்றுள்ளது. ’ஓல்கா’ திரைப்படம் உட்பட அதிசிறந்த 5 பிரேசில் திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்படவிருக்கின்றன.

சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள பிரேசில் தூதரகத்துடன் இணைந்து இன்று (அக். 4), நாளை (அக். 5), அக். 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் பிரேசில் திரை விழாவை நடத்தவிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்தில் மாலை 6 மணி முதல் திரையிடல் நடைபெறவிருக்கிறது.

தொடர்புக்கு: 9840151956 / 8939022618

பிரேசில் திரை விழா அக், 2021

1. ஓல்கா - அரசியல் வரலாற்று மைய திரைப்படம் – 141 நிமிடங்கள் -அக்டோபர் 4, மாலை 6

2. டிம் மெய்யா - இசை மற்றும் பண்பாட்டு அரசியல் மைய திரைப்படம் - 140 நிமிடங்கள் -அக்டோபர் 5, மாலை 6

3. எலீஸ் - இசை மற்றும் பண்பாட்டு அரசியல் மைய திரைப்படம் - 110 நிமிடங்கள் - அக்டோபர் 6, மாலை 6

4. ரொமான்ஸ் - தம்பதிகளாக மாறும் நடிகர்களின் வாழ்க்கைக் கதை - 105 நிமிடங்கள் - அக்டோபர் 8, மாலை 5.30

5. ட்ராப்பிகாலியா - அரசியல் புரட்சி மைய ஆவணப்படம் - 87 நிமிடங்கள் - அக்டோபர் 8, மாலை 7:15

Related Stories

No stories found.