பிரம்மாண்டமாக உருவான ‘பிரம்மாஸ்திரம்’ - ராஜமெளலி பகிரும் ரகசியம்!

பிரம்மாண்டமாக உருவான ‘பிரம்மாஸ்திரம்’ - ராஜமெளலி பகிரும் ரகசியம்!

‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பிரம்மாண்டப் படைப்புகள் மூலம் இந்தியத் திரையுலகின் போக்கையே மாற்றியமைத்திருப்பவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. அவரது படங்களை ஹாலிவுட் பிரபலங்கள் புகழ்ந்து பேசிவரும் நிலையில், பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களைத் தென்னிந்தியாவில் பிரபலப்படுத்த அவரைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

அந்த வகையில், செப்டம்பர் 9-ல் வெளியாகவிருக்கும் ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் முதல் பாகத்துக்கான விளம்பரத்துக்காக ராஜமெளலியின் உதவியை நாடியிருக்கிறது

இதுதொடர்பாக எஸ்.எஸ்.ராஜமெளலி தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பேசியிருக்கும் காணொலிக்களை யூடியூபில் வெளியிட்டிருக்கிறது படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஸ்டுடியோஸ்.

“2016-ல் இயக்குநர் அயன் முகர்ஜியை முதன்முதலாகச் சந்தித்தபோது, ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அதைக் கேட்டதும் நான் மிகவும் ஆர்வமடைந்தேன். ஏனென்றால், இந்தக் கதை இந்தியப் புராணங்களைப் பற்றியது. பிரம்மாண்டமான கதை என்பதால் விஷூவல் எஃபெக்ட்ஸுக்கு நிறைய வாய்ப்பு இருக்கும் எனத் தோன்றியது. நாம் இதுவரைக்கும் மல்ட்டிவெர்ஸ், மெட்டாவெர்ஸ் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் நாம் பார்க்கப்போகும் அற்புதம், அஸ்திராவெர்ஸ்” என்று அந்தக் காணொலியில் அவர் கூறியிருக்கிறார்,

மேலும், “ஐம்பூதங்களையும் ஆட்சி செய்யும் பெரிய சக்தியான பிரம்ம சக்தியிலிருந்து வந்த ஆயுதங்கள் பற்றிய, அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டையிடும் வீரர்களைப் பற்றிய கதைதான் பிரம்மாஸ்திரா” என்று கூறியிருக்கும் ராஜமெளலி, இந்தியாவில் தயாரான இந்தப் படத்தை டிஸ்னி நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன், “மற்ற எல்லா சக்திகளைவிடவும் பெரிய சக்தி காதல்தான் என இயக்குநர் மிகச் சிறப்பாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்” என்று புகழ்ந்திருக்கிறார். இந்தக் காணொலியைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் வெளியிட்டிருக்கிறார். ‘இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சி’ என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் தமிழில் ‘பிரம்மாஸ்திரம்’ எனும் பெயரில் வெளியாகிறது. இதில் அமிதாப் பச்சன், ரண்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி.மணிகண்டன், பங்கஜ் குமார் உள்ளிட்ட 5 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரியும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் சைமன் ஃப்ராங்க்ளன் இப்படத்துக்குப் பின்னணி இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in