
பிறவியிலேயே நான்கு கை, நான்கு கால் கொண்ட சிறுமியின் அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழில் 'கள்ளழகர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சோனு சூட். தொடர்ந்து மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் நடித்து வரும் சோனு சூட், கரோனா காலகட்டத்தில் செய்த உதவிகள், இந்தியா முழுவதும் அவரது புகழைப் பரப்பின. வெளிநாட்டில் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலரை தனது சொந்த செலவில் விமானம் மூலம் அழைத்து வந்தது, பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது என அவர் செய்த மனிதாபிமான உதவிகள் பாராட்டப்பட்டன. அவர், தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில், நான்கு கை, நான்கு கால் கொண்ட சிறுமி ஒருவரின் அறுவை சிகிச்சைக்கு சோனு சூட் உதவி இருக்கிறார். பீகாரில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த, சாவ்முகி குமாரி (Chaumukhi Kumari) என்ற சிறுமி, பிறவியிலேயே நான்கு கால், நான்கு கைகளுடன் இருந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், அந்தச் சிறுமியை கண்டுபிடித்து, அறுவை சிகிச்சைக்கு நடிகர் சோனுசூட் உதவியுள்ளார். தற்போது அறுவை சிகிச்சை மூலம் அந்த சிறுமிக்கு அதிகப்படியாக இருந்த கை, கால் நீக்கப்பட்டுள்ளன.
சிறுமி நலமாக இருக்கிறார் என்றும் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் விரைவில் வீடு திரும்ப இருக்கிறார் என்றும் சோனு சூட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பலர் சோனு சூட்டைப் பாராட்டி வருகின்றனர். சிலர், ’இந்தப் பூமியின் சிறந்த மனிதர் நீங்கள்தான்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.