‘அஜித் திரைப்படங்களின் அடுத்தக்கட்டம்’: போனிகபூர் புகழாரம்!

‘அஜித் திரைப்படங்களின் அடுத்தக்கட்டம்’: போனிகபூர் புகழாரம்!

அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் பிப்.24 அன்று உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இதனையொட்டி ஊடக சந்திப்பு மேற்கொண்ட தயாரிப்பாளர் போனிகபூர், வலிமை திரைப்படம் குறித்தும், அஜித் குமார் பற்றியும் சுவாரசியங்களை பகிர்ந்துகொண்டார்.

“தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் வலிமை திரைப்படம், அஜித்தின் இந்திய அளவிலான பிரமாண்ட வெளியீடுகளின் தொடக்கமாக இருக்கும்” என்று போனிகபூர் தெரிவித்துள்ளார். தமிழின் வெற்றிப்பட நாயகனாக வலம்வரும் அஜித் குமார், வலிமை திரைப்படத்தின் வாயிலாக இதர பான் இந்தியா நாயகர்களின் வரிசையில் சேருவார் என்று போனிகபூர் கணித்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.

மேலும், வலிமை திரைப்படம் குறுத்து போனிகபூர் கூறும்போது, ”இத்திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள், சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அஜித் குமார் மற்றும் பிற நடிகர்களின் அற்புதமான நடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.

ஒரு தயாரிப்பாளராக மூன்றாவது திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணையும் போனிகபூர், அஜித் குறித்தும் புகழாரம் தெரிவித்தார். ”அஜித் மிகவும் அடக்கமான நடிகர், ஒழுக்கம், தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அஜீத் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. படத்தின் ஆரம்பகட்ட பணிகளின்போது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த திரைப்படத்தினை வடிவமைக்க அவர் பெரும் ஆதரவாக இருந்தார்” என்று போனிகபூர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஒமைக்ரான் பரவலின் மத்தியில் பொங்கல் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டிருந்த வலிமை திரைப்படம் தள்ளிப்போனது. தொடர்ந்து, ஓடிடியில் வலிமை வெளியாகும் என்பதான ஊகங்கள் வலம் வந்தன. ஆனால் போனிகபூர் வலிமையின் திரையரங்கு வெளியீட்டில் தீர்மானமாக இருந்தார். இது குறித்து கூறுகையில், “ஒரு தயாரிப்பாளராக, வலிமை திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு என பரந்த சந்தையை திறந்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வலிமை திரைப்படம், திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது. இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும்” என்றார்.

இன்னும் ஒருசில தினங்களில் வலிமை வெளியாக உள்ள சூழலில் போனிகபூரின் அஜித் மற்றும் ’வலிமை’ புகழாரங்கள், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

Related Stories

No stories found.