தென்னிந்திய படங்களை தயாரிப்பது ஏன்?

போனி கபூர் சொல்லும் ரகசியம்
தென்னிந்திய படங்களை தயாரிப்பது ஏன்?

தென்னிந்திய திரைப்படங்களை தயாரிப்பதற்கான காரணம் என்ன என்று தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இந்தி தயாரிப்பாளர் போனி கபூர். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவர், இப்போது தமிழ், தெலுங்கில் படங்களை தயாரித்து வருகிறார். தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி படங்களை தயாரித்துள்ள போனி கபூர், அடுத்தும் அஜித் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தெலுங்கு படங்களையும் தயாரிக்கும் அவர், மேலும் சில படங்களை தயாரிக்க இருக்கிறார்.

இந்நிலையில், தென்னிந்தியத் திரைப்படங்களை தயாரிப்பது ஏன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய திரைப்படங்கள், இந்தியத் தன்மையுடன் உருவாக்கப்படுகின்றன. அதனால்தான் டப்பிங் படங்கள் கூட வட இந்தியாவிலும் வெற்றி பெறுகின்றன. அதோடு தென்னிந்திய படங்களில் ஆக்‌ஷன், குடும்பம், நகைச்சுவை, சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது. அது ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்கிறது. அதாவது பாலிவுட் தயாரிப்பாளர்கள், மெக்டோனால்ட்ஸ், கேஎப்சி, பிட்ஸாவை வழங்குகிறார்கள். அங்கு நீங்கள் ஆர்டர் செய்வதை மட்டுமே பெற முடியும். ஆனால், தென்னிந்திய சினிமா, ரொட்டியுடன் சோறு, கோழிக்கறி, குழம்பு, கூட்டுப் பொரியல் என வழங்குகிறது.

ரசிகர்கள் தங்கள் படங்களில் இப்போது எல்லாவற்றையும் விரும்புகிறார்கள். அதற்காக தென்னிந்திய இயக்குநர்களை பாராட்டுகிறேன். அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு போன்ற நடிகர்கள் நடித்த படங்களின் டப்பிங் உரிமை ரூ.15 முதல், ரூ.20, ரூ.25 கோடி வரை சேனல்களில் விற்கப்படுகின்றன. இந்திப் படங்கள் கூட இந்தளவுக்கு விற்கப்படுவதில்லை. அதனால்தான் தென்னிந்திய திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in