
நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை தான் தயாரிப்பதாக வெளியான தகவல் குறித்து போனிகபூர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் அவரது 169வது திரைப்படம் குறித்து அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவிப்பானது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியிருக்கும் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி169 திரைப்படம் குறித்த தகவல் வெளியானது.
ஆனால் இந்த செய்தியின் சூடு ஆறுவதற்குள் ரஜினியின் 170வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியம் தந்தது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில், ரஜினியின் 170வது திரைப்படம் முடிவாகி இருப்பதாக தகவல்கள் பரவின.
ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாகவும் திரைபடங்களின் வர்த்தகம் கருதியும், முந்தைய திரைப்படம் வெளியான பிறகே அடுத்த திரைப்படம் குறித்து அறிவித்து வருவதை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார்.
அதேபோல, தயாரிப்பாளர் போனிகபூரும் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படத்தின் பான் இந்தியா வெளியீட்டில் மும்முரமாக இருக்கிறார். மேலும் அஜித்தின் அடுத்த திரைப்படத்துக்கான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இவற்றுக்கு மத்தியில் ரஜினி - போனிகபூர் இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் கடந்த 2 தினங்களாக உலா வருகின்றன. ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் போனிகபூர் இது குறித்து இன்று விளக்கமளித்தார்.
அதில் ’ரஜினி எனது பல வருட நண்பர். நாங்கள் அடிக்கடி சந்தித்து கருத்துகளை பரிமாறிக் கொள்கிறோம். நாங்கள் இணைந்து பணியாற்றும் ஒரு படத்தை இறுதி செய்வதாக இருப்பின், அதை நானே முதலில் அறிவிப்பேன். இது போன்ற கசியும் யோசனைகள் நீங்கள் பெற வேண்டியதில்லை’ என்று தன்னை பின்பற்றுவோருக்கு விளக்கமளித்துள்ளார்.