தமிழில் ஜான்வி கபூர்? தந்தை போனி கபூர் விளக்கம்!

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்று எழுந்த செய்திகளுக்கு, அவரது தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த நட்சத்திரம் ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் 2 மகள்களில் மூத்தவர் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி வழியில் இந்த புதல்வியும் பாலிவுட்டில் கொடி பறக்கவிட்டு வருகிறார். இளம் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சித் தாரகையாகவும் புகழ் பெற்றிருக்கிறார்.

ஸ்ரீதேவி காலம் முதலே தமிழ் திரைப்படங்களை இந்தியில் மறு ஆக்கம் செய்யும் பணியில் போனி கபூர் ஆர்வம் காட்டி வந்தார். பின்னர் கோலிவுட்டிலும் தடம் பதித்தார். அஜித் உடன் இணைந்து ஹாட்ரிக் வெற்றி தந்தார். இதனால் தல ரசிகர்கள் மத்தியிலும் போனி கபூர் பிரபலமானார். இந்த வகையில் அஜித்துக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சமூக ஊடகங்கள் வாயிலாக போனி கபூரிடம் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இது தவிர தமிழ் மகள் ஸ்ரீதேவியை கொண்டாடிய கோலிவுட், அவரது வாரிசு ஜான்வி கபூருக்காகவும் இருகரம் விரித்து காத்திருக்க ஆரம்பித்தது. அதற்கேற்ப தமிழ், மலையாளம் என வெற்றி பெற்ற திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அவற்றின் இந்தி பதிப்பில் ஜான்வி கபூர் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’வில் ஜான்வி நடித்தார். ஆனபோதும் அவரது நேரடி தமிழ் படத்துக்கு ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர்.

மகள்களுடன் போனி கபூர்
மகள்களுடன் போனி கபூர்

அவ்வப்போது அதற்கேற்ப ஊகங்களும் றெக்கையடிப்பது உண்டு. அண்மையிலும் லிங்குசாமி இயக்கத்திலான புதிய திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிப்பதாக பேச்சு அடிப்பட்டது. கார்த்தி, தமன்னா நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ’பையா’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் பாகமாக பையா -2 திரைப்படத்தை ஆர்யாவை நாயகனாக்கி லிங்குசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.

இது பெரியளவில் பேசப்படவும் செய்தது. காரணம, பல்வேறு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சார்பில் இதற்கு முன்னதாக ஜான்வி கபூரின் தமிழ் அறிமுகத்துக்காக கோரியபோது போனி கபூர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். தற்போது அவர்கள் தரப்பில் போனிகபூரை நெருக்க, அவரும் ஜான்வி கபூரின் தமிழ் அறிமுகம் தொடர்பாக பொதுவெளியிலும் தெளிவுபடுத்தி உள்ளார். அதன்படி ’இந்த நிமிடம் வரை ஜான்வி கபூர் தமிழ் திரைப்படங்கள் எதற்கும் ஒப்பந்தமாகவில்லை. தயவு செய்து தவறான வதந்திகளை தவிர்க்கவும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in