ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரியாக பாலிவுட் நடிகர் ரண்வீர்சிங்!

ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரியாக பாலிவுட் நடிகர் ரண்வீர்சிங்!

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் 'வேள்பாரி' நாவலை பான் இந்தியா படமாக இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடிப்பார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த கேரக்டரில் பாலிவுட் நடிகர் ரண்வீர்சிங் நடிக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய நூல்கள் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. அவர் எழுதிய 'காவல்கோட்டம்' நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இக்கதை வசந்தபாலன் இயக்கத்தின் 'அரவான்' என்ற பெயரில் திரைப்படமானது. இதனைத் தொடர்ந்து வார இதழில் அவர் தொடராக எழுதிய 'வேள்பாரி' நாவல், இலக்கிய வட்டாரத்திலும் வாசகர்கள் மத்தியிலும் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்த கதைக்கு மலேசியா அரசின் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 'வேள்பாரி' நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் பலர் விரும்பினர். நடிகர் தனுஷ் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இந்த கதையை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாகவும், வேள்பாரி மன்னன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியானது.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அவ்விழாவில் நடிகர் சூர்யா பேசிய போது எழுத்தாளர் சு. வெங்கடேசனுடன் இணைந்து ஒரு ஸ்வாரஸ்யமான பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகும் என கூறியிருந்தார். அந்த விழாவில் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சு. வெங்கடேசன் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, வேள்பாரியாக நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரியாக பிரபல இந்தி நடிகர் ரண்வீர்சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பேச்சுவார்த்தையில் இயக்குநர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். மூன்று பாகங்கள் கொண்டதாக பான் இந்தியா படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் வேள்பாரி உருவாகவுள்ளது. மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' போல தனது 'வேள்பாரி' படத்தை எடுப்பதற்காக அனைத்து நடவடிக்கையிலும் இயக்குநர் ஷங்கர் இறங்கியுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in