கொள்ளையன் என நினைத்து இயக்குநரை கைது செய்த போலீஸ்
ரியான் கூக்லர்

கொள்ளையன் என நினைத்து இயக்குநரை கைது செய்த போலீஸ்

வங்கிக் கொள்ளையன் என நினைத்து பிரபல இயக்குநரை போலீஸார் கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் சட்விக் போஸ்மேன், மைக்கேல் பி ஜோர்டான், லுபிதா நியாங்கோ, மார்டின் ஃபிரீமேன் உட்பட பலர் நடித்த ஹாலிவுட் படம், ’பிளாக் பாந்தர்’. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பல்வேறு விருதுகளைப்பெற்ற இந்தப் படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்று விருதுகளை பெற்றது. இந்தப் படத்தை ரியான் கூக்லர் (Ryan Coogler) இயக்கி இருந்தார்.

இதற்கு முன், ஃபுரூட்வலே ஸ்டேஷன், கிரீட் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது, ’பிளாக் பான்தர்: வகாண்டா ஃபாரெவர்’ என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கியுள்ளார். இது நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

ரியான் கூக்லர்
ரியான் கூக்லர்

இந்நிலையில் இயக்குநர் ரியான் கூக்லர், அட்லாண்டாவில் உள்ள, அமெரிக்கன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றார். தொப்பி, கூலிங் கிளாஸ், முகக்கவசம் அணிந்திருந்த அவர், 12 ஆயிரம் டாலர் எடுப்பதற்கான ஸ்லிப்பை, காசாளரிடம் கொடுத்தார். அதன் பின்பக்கத்தில், என் கணக்கில் இருந்து 12 ஆயிரம் டாலர் வேண்டும். அதை வேறு எங்காவது வைத்து எண்ணிக் கொடுங்கள். நான் எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன்’ என்று எழுதியிருந்தார்.

 ரியான் கூக்லர்
ரியான் கூக்லர்

அந்த காசாளர் இதைக் கொள்ளை முயற்சி என நினைத்து தனது மேலதிகாரியிடம் சொன்னார். அவர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் சொல்ல, அவர்கள் விரைந்து வந்தனர். வெளியே நின்ற சொகுசு காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் வங்கிக்குள் சென்ற தனது நண்பருக்காக, காத்திருப்பதாகக் கூறினர். சந்தேகம் வலுவடைந்ததை அடுத்து கூக்லரை கைது செய்து, விலங்கு மாட்டி வெளியே அழைத்து வந்த போலீஸார், அவர் நண்பர்களையும் பிடித்தனர்.

விசாரணைக்குப் பிறகுதான் அவர் இயக்குநர் என்று தெரிந்தது. வங்கிக் கணக்கு அவர் கணக்குதான் என்று உறுதி செய்ததை அடுத்தும் போலீஸார் விடுவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை ரியான் கூக்லர் உறுதிப்படுத்தியுள்ளார். ’இதுபோன்ற சம்பவம் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது. இதற்காக அமெரிக்கன் வங்கி எனக்கு திருப்தியளிக்கும் வகையில் சமரசம் செய்ததால் அந்தப் பிரச்சினையை விட்டுவிட்டேன்’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in