பிட்லீ

பிட்லீ

'வலிமை' படத்தில் தனது கேரக்டர் குறித்து நாயகி ஹுமா குரேஷி உச்சி குளிர பேசிவருகிறார். “பில்லா 2- விலேயே நானும் அஜித் சாரும் இணைந்து நடித்திருக்க வேண்டியது. அப்போது தட்டிப்போன வாய்ப்பு, 'வலிமை'யில் அமைந்ததில் மகிழ்ச்சி. போலீஸ் கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. 'வலிமை'யில் அந்த வாய்ப்பு அமைந்ததால் வெளுத்து வாங்கி இருக்கிறேன். பிப்ரவரி 24-ல் எனது நிஜ 'வலிமை'யும் எனது ரசிகர்களுக்குத் தெரியப்போகிறது” என்கிறார் ஹுமா.

இது அஜித்குமார் படமா, இல்ல... அஜித் ஹுமா படமா?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வில்லி வேடத்தில், பாண்டிய நாட்டு நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். இதற்கிடையில், 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் அவருடைய 169-வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராயுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் ஆங்கில திரைக்கதை பிரதி ஒன்று ராய்க்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். பொறுமையாக ஆற அமர வாசித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறாராம் உலக அழகி!

பிடிக்கலன்னு சொல்லிடுங்க மேம்... சின்னஞ் சிறுசுக யாராச்சும் நடிக்கட்டும்!

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 14-ல் வெளியாகிறது. இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே ஆடியிருக்கும் 'அரபிக் குத்து' பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. வெளியான 2 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து வரவேற்பை பெற்றிருந்தது. இதைப் பெருமையுடன் தனது ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார் பூஜா. ஆனாலும், 'பீஸ்ட்' படத்துக்குப் பின்னால் தமிழிலிருந்து அவருக்கு அழைப்பு ஏதும் இல்லை. இந்தப் படத்துக்குப் பிறகும் பழையபடி அக்கட தேசம்தான் அம்மிணியின் அடைக்கல தேசம்போலும்!

எதோ ஒண்ணு குறையுதுன்னு தமிழ் ரசிகன் ஃபீல் பண்ணுறான்...

தன்னை வலைதளப் போராளியாக வரித்துக் கொள்ளும் கங்கனா ரனாவத், கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு பிரபலங்களைத் தன்னுடைய பதிவுகள் மூலம் அதிரடியாகத் தாக்கியிருக்கிறார். முதலாமவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. “இந்திய அரசை சங்கடப்படுத்தும் விதமாக, டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் கவலையளிப்பதாக கருத்துச் சொன்னீர்கள். இப்போது கரோனா கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி உங்கள் நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடியதும், குடும்பத்துடன் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டீர்கள். கர்மா உங்களைத் திருப்பித் தாக்குகிறது” என்று போட்டுத் தாக்கினார் கங்கனா. அடுத்ததாக அவர் பாய்ந்தது தீபிகா படுகோன் மீது. தீபிகா நடித்த ‘கெஹ்ரையான்’ படத்தை ‘குப்பை’ என விமர்சித்ததுடன், “நியூ ஏஜ், நவீனத் திரைப்படம் என்கிற பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம். தரமற்றத் திரைப்படங்கள் எப்போதும் தரமற்றவைதான். எந்த வகையான ஆபாசத்தை காட்டியும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது” என்று கடுமையாகச் சாடினார் கங்கனா.

இந்தம்மா வாய்க்கு ஒரு மூடி போட முடியாதா?

சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, ஜெயம் ரவியுடன் ‘பூமி’ படங்களில் நடித்த நிதி அகர்வால், தெலுங்கு சினிமாவில் தனக்கு வலுவான அடித்தளம் அமைத்துவிட்டு திரும்பி வந்திருக்கிறார். அங்கே பவன் கல்யாண் ஜோடியாக ’ஹரி ஹர வீர மல்லூ’ படத்தில் நடித்து முடித்துவிட்டு, தமிழில், மகிழ்திருமேனி இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்துகொண்டிருக்க்கிறார் நிதி. “எனக்கு கதையைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இப்போதைக்கு மாஸ் ஹீரோக்களின் படங்களில் ஆடிப் பாடி நடிக்கும் கமர்ஷியல் ஹீரோயின் வேடங்கள் கிடைத்தால் போதும்” என்கிறாராம் நிதி.

எவ்வளவு ஈஸியாச் சொல்றாங்க பாருங்க மக்களே...

Related Stories

No stories found.