பிட்லீ

சமந்தாவை பின்னுக்குத் தள்ளிய பூஜா!
பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா தான் இப்போது டாப். அவரது சம்பளம் ‘10 சி’ என்கிறார்கள். நயனுக்கு அடுத்த இடத்தில் சமந்தா இருந்தார். இவரது சம்பளம் ’3 சி’. ஆனால், அந்த இடத்தை இப்போது பூஜா ஹெக்டே எட்டிப் பிடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ’ஜேஜிஎம்’ படத்துக்கு பூஜாவின் சம்பளம் மொத்தமாக ‘5 சி’ என்கிறார்கள்.

ஆனாலும் நீங்க நயனை தொடமுடியாது அம்மிணி!

சிம்புவுடன் ’மஹா’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஹன்சிகா, ராஜேஷ்.எம் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படம் ஒன்றில் நடிக்கிறார். ’கலாப காதலன்’ இகோர் இயக்கும் இந்தப் படத்தில், ஹன்சிகா ஃபேஷன் டிசைனராம். த்ரில்லர் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்காக ஹன்சிகா சில பல ஹோம் வொர்க்குகளையும் செய்துவருகிறாராம்.

அப்ப, படம் எக்ஸ்ட்ரா மிரட்டலா இருக்குமே..!

பாலிவுட் ஸ்டாரான கியாரா அத்வானியிடம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், கியாராவின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் அடித்த கமென்ட்தான் பாலிவுட்டில் இப்போது ஒரே பேச்சாக இருக்கிறது. ’ஆலியா பட், கரீனா கபூர் ஆகியோரின் கலவைதான் கியாரா’ என ஒருவர் சொல்ல, மற்றொருவர் ’தீபிகா படுகோன், ஈஷா தியோலின் மிக்சர்’ என்று பகிர, இல்லவே இல்லை, ’ஈஷா தியோல் மட்டுமே தான்’ என்றிருக்கிறார் இன்னொருவர். இந்த கமென்ட்களால் கியாராவே கொஞ்சம் கிறுகிறுத்துத்தான் போயிருப்பார்.

கியாராவே கியார் ஆகிட்டாங்களா..?

சாய் பல்லவி தமிழை விட, தெலுங்கில் தனது இடத்தை அழுத்தமாக தக்கவைத்திருக்கிறார். அங்கு அவரையும் அவர் நடனத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சாய் பல்லவியின் ‘விரத பர்வம்’ தமிழ், தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இதில் ராணா ஹீரோ. அண்மையில் வெளியான இதன் டீசரில் சாய் பல்லவிதான் மிரட்டுகிறார். 90-களில் நடக்கும் கதையான இதில் நக்சலைட்டாக நடித்திருக்கும் ராணா, “இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை; சாய் பல்லவிதான்” என்று பெருமையடிக்கிறார்.

இதுல உள்குத்து ஏதும் இல்லியே ராஜா..?

’புஷ்பா’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ரசிகர்களைக் குவித்து வரும் ராஷ்மிகா, இப்போது ரன்பீர் சிங்குடன் ’அனிமல்’ என்ற படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். இவரைவிட ’புஷ்பா’வால் சமந்தாவுக்குத்தான் வடக்கத்தி ரசிகர்கள் மத்தியில் ஏக மவுஸ். காரணம், ’ஊ சொல்றியா?’ என்ற அந்த ஒற்றைப் பாடல். இதனால் பாலிவுட்டில் இப்போது இருவருக்கும் செம போட்டி ராஷ்மிகா, ரன்பீர் சிங் படத்தில் நடிக்கிறார் என்றால், சமந்தா, ரன்வீர் சிங்குடன் நடிப்பதாக தகவல்.

ஒரே படம்... ஓஹோன்னு வாழ்க்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in