பிட்லீ

மறுக்க மாட்டார் மந்தனா!
ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

’புஷ்பா’ படத்தில் சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா...’ கன்னாபின்னா ஹிட்டுக்குப் பிறகு, தெலுங்கில் ஹீரோயின்களை குத்துப் பாடலுக்கு ஆட வைப்பது இன்னும் அதிகரித்திருக்கிறது. ’புஷ்பா’ நாயகி, ராஷ்மிகா மந்தனாவும் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவை வைத்து புரி ஜெகநாத் இயக்கும் ‘ஜன கண மன’ படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயின். இந்தப் படத்தில் ராஷ்மிகாவை ஒரு பாடலுக்கு ஆட கேட்டிருக்கிறாராம் புரி. ஏற்கெனவே விஜய் தேவரகொண்டா - மந்தனா ஜோடி தெலுங்கில் ஹிட்டடித்த ஜோடி என்பதால் நிச்சயம் இந்த அழைப்பைத் தட்டமாட்டார் மந்தனா என்கிறார்கள்.

உங்களுக்கும் ஒரே பாட்டு... ஓகோன்னு வாழ்க்கை அமையட்டும்!

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ படங்களில் நடித்த மெஹ்ரீன், தெலுங்கில் வெங்கடேஷ், தமன்னாவுடன் ‘எஃப் 3’ என்ற காமெடி படத்திலும் நடித்திருந்தார். படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி தனது நெருங்கிய தோழர் என்பதால் படத்தில் தனக்கு அதிக காட்சிகள் இருக்கும் என்று நம்பினாராம். ஆனால், அப்படியான முக்கியத்துவம் எதுவும் படத்தில் இல்லையாம். இதனால் இன்னொரு நாயகியான தமன்னாவுக்கும் மெஹ்ரீனுக்குமே முட்டிக் கொண்டதாம். படப்பிடிப்பில் இருவரும் பாராமுகமாகவே இருந்த கதையெல்லாம் இப்போது வெளிவந்திருக்கிறது. இதனால், இனிமேல் டபுள் ஹீரோயின் கதைகளை கண்டுகொள்ளப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம் மெஹ்ரீன்.

படமே காமெடி படம் தானேம்மா..!

தமிழில், ‘கொடி’, ‘தள்ளிப்போகாதே’ படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், இப்போது தெலுங்கில் பிசி. அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘பட்டர்ஃப்ளை’ என்ற த்ரில்லர் படத்தில் பூமிகாவுடன் நடித்திருக்கிறார். “சின்ன வயசுல பூமிகா படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். இப்ப அவங்க கூடவே நடிச்சதுல ரொம்ப சந்தோஷம். சீனியர் நடிகையான அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்க முடிஞ்சுது” என்கிற அனுபமாவுக்கு தமிழில் ஏனோ வாய்ப்புகள் அனுகூலமாகவில்லை.

நம்மாளுங்களுக்கு இன்னும் அனுவோட அருமை தெரியலையா... இல்ல முன்னமே தெரிஞ்சுருச்சா?

மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் முன்னாள் ஹீரோயின் கனிகா, கடந்த வாரம் தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதாவது தனக்குத் தானே வாழ்த்துச் சொல்லி வித்தியாசமாகக் கொண்டாடினார். “நான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, என் எண்ணங்களில் தெளிவுடன் வாழ்க்கையை முழுமையாக வாழ, 40-களுக்கு என்னை வரவேற்கிறேன். நான் ரெடி” என்று தெரிவித்திருக்கிறார் கனிகா. இதைப் பார்த்துவிட்டு அவரது சமூக வலைதளப் பக்கத்தை வாழ்த்துகளால் நிரப்பிவிட்டார்கள் ரசிகர்கள்.

கவலைப்படாதீங்க கனிகா... காலம் கனியும்!

நடிகை எமி ஜாக்சனுக்கும் தொழிலதிபர் ஜார்ஜ் பனாயிடோவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நிச்சயமானது. அதே ஆண்டு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்ட எமி, பின்னர் ஜார்ஜைப் பிரிந்து எட் வெஸ்ட்விக் என்ற நடிகரை காதலிப்பதாக செய்திகள் வெளியாயின. இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் வேகமாக பரவின. இதுபற்றி இருவரும் ஏதும் சொல்லவில்லை. இந்நிலையில், லண்டனில் நடந்த தேசிய திரைப்பட விருது நிகழ்ச்சியின் ரெட் கார்பெட்டில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

எமிமா... இப்புடி பண்றீங்களேம்மா..?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in