பிட்லீ

சுதந்திரப் பறவையாய்ச் சுற்றும் அமலா பால்!
அமலா பால்
அமலா பால்

அமலா பால் நடித்த, ’அதோ அந்த பறவை போல’ படம் ரிலீஸ் தேதி தெரியாமல் ஆண்டுக் கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. இடையில் மலையாளத்தில் அமலா பால் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது வேறு படங்கள் இல்லாததால் நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிட்ட அமலா பால், அது தொடர்பான படங்களைச் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட கேப்ஷனில், ’இந்த நேரத்தில் நீங்கள் இரண்டு சாலைகளில் செல்லலாம். ஒன்று, வழக்கமாக செல்லும் அதே சாலை. இன்னொன்று, புதிய உலகத்தின் தொடக்கத்தைக் காட்டும் சாலை. எதை முடிவு செய்தாலும் உங்கள் உள்ளுணர்வு வழிநடத்தட்டும். உங்கள் நம்பிக்கை ஊக்குவிக்கட்டும்’ என்று தெரிவித்திருக்கிறார் அமலா பால்.

அடடா... அமலாவும் கருத்துச் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களே..!

இரண்டு வருடங்களாகப் பேசப்பட்டு வந்த திருமண பேச்சுக்கு ஒருவழியாக சுபம் போட்டிருக்கிறது ரன்பீர் கபூர்- அலியா பட் காதல் ஜோடி. ஏப்ரல் 17-ம் தேதி திருமணம் என்பதை இரண்டு தரப்பிலுமிருந்து உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இருவருமே பாலிவுட்டின் பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கல்யாணம் பிரம்மாண்டமாக நடக்கும் என்று எதிர்பார்த்தால், இல்லையாம். நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்து திருமணத்தை முடிக்கப் போகிறார்களாம்.

பணக்காரங்க நல்லா செலவழிங்கய்யா... சேத்து வெக்காதீங்க!

‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘மாறன்’ என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும் மாளவிகா மோகனனுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் இன்னும் அமையவில்லையாம். ஆனாலும், “தொடர்ந்து லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே பலர் வருகிற வாய்ப்பை எல்லாம் ஏற்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படி எல்லாம் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையில்லை. அதனால் தேர்ந்த கதைகளில் மட்டும் நடிக்கிறேன். என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி நான் நிராகரித்த சில படங்களும் ஹிட்டாகி இருக்கின்றன. அதுபற்றி எனக்கு கவலை எனக்கு இல்லை” என்கிறார்.

நம்பிக்கை... அதானே வாழ்க்கை!

வெப்சீரிஸ், சினிமா என பிசியாக இருக்கும் ஹூமா குரேஷி நடிகைகளின் சம்பள விஷயம் பற்றி பேசியிருக்கிறார். “சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் நடிகைகளுக்கு ஒருபோதும் கிடைக்காது. சினிமாவில் மட்டும்தான் இப்படி என்றால் பொதுவாழ்க்கையிலும் பெண்களுக்கான அங்கீகாரம் உடனடியாக கிடைப்பதில்லை. இந்த நிலை எப்போது தான் மாறுமோ?” என்று ஆதங்கக் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஹூமா.

நம்ம ’தல’-க்கு சமமா சம்பளம் கேட்குறாரோ?!

மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வனி’ல் பூங்குழலியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு விஷ்ணு விஷாலின் ’கட்டா குஸ்தி’யிலும் சிறப்பான கேரக்டர் அமைந்திருக்கிறதாம். ”அது பற்றி இப்பவே சொல்லவே மாட்டேன். ஆனா, இதுவரைக்கு நான் நடிச்சதுல இருந்து மாறுபட்ட கேரக்டர். சும்மா வந்து போற கேரக்டரா இருக்காதுன்னு மட்டும் அடிச்சுச் சொல்வேன்” என்கிறார்.

அப்ப... பொன்னியின் செல்வன்ல?!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in