பிட்லீ

பிட்லீ

‘96’ படப் புகழ் கௌரி ஜி.கிஷனின் ‘மகிழினி’ தனியிசைப் பாடல், 5 மில்லியன் ஹிட்டடித்திருக்கிறது. “இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லும் கௌரி, பொங்கலுக்கு அமேசான் ப்ரைமில் வெளியாகும் ‘புத்தம் புது காலை விடியாதா’ என்கிற தமிழ் ஆந்தாலஜி படத்தில் போலீஸாக நடித்திருக்கிறாராம். இப்போதே பொங்கல் கொண்டாட்டத்தில் இருக்கிறார் அம்மிணி.

பொங்கல் அனைவருக்கும் தித்திக்கட்டும் சகோதரியே..!

சிம்பு நடிக்க கௌதம் மேனன் இயக்கிவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகிறார் சித்தி இதானி. மும்பை மாடலான இவர், தெலுங்கு இறக்குமதி. முதலில் இவரை ஒப்பந்தம் செய்தது இயக்குநர் சசியாம். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக, சசி இயக்கத்தில் சைலன்ட்டாக ஒரு படத்தில் நடித்துகொண்டிருக்கிறார் இதானி.

கௌதம் மேனன்கூட நடிப்பீங்களா மேடம்?

மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் படத்தில், கடல் கன்னியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா. இந்தியாவின் முதலாவது கடல் கன்னி படம் என இதுபற்றி பெருமையாகப் பேசிவருகிறார் ஆண்ட்ரியா. சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகளும் இப்படத்தில் நடிக்கிறார்களாம். இந்தப் படத்துக்காக ஸ்பெஷல் பயிற்சி எடுத்துக்கொண்டு நீந்தப் போகிறாராம் ஆண்ட்ரியா பொண்ணு!

தண்ணீல நீந்துறதுனாதான் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே!

பி.எஸ்.மித்திரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தில் கார்த்தி இரண்டு தோற்றங்களில் நடிப்பதுதான். தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பகிரும் ஸ்டில்ஸ் மற்றும் காணொலிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. “கார்த்தி, காவல் அதிகாரியாகவும் சிறைப் பறவையாகவும் இருவேடங்களில் நடிக்கிறாரா?” என துருவுகிறார்கள் நெட்டிசன்கள்.

அதெல்லாம் சரி... காலண்டர் ஏதும் ஃபிரேம்ல வருதான்னு ஒருக்கா செக் பண்ணிடுங்கய்யா!

பாரதிராஜாவின் உதவியாளர் ஜி.ஆர்.எஸ், தான் இயக்கியிருக்கும் ‘மருத’ படத்தில் ‘செய்முறை’ எனும் தென் மாவட்ட கலாச்சார வழக்கத்தின் இரண்டு பக்கங்களையும் துணிந்து எடுத்துக்காட்டி யிருக்கிறாராம். ட்ரைலர் 9 மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்ட நிலையில், படம் பொங்கல் ரிலீஸாம். பாரதிராஜாவின் பெயர் சொல்லும் கலைவாரிசு என்று கோலிவுட்டில் ஜி.ஆர்.எஸ் பற்றி சிலாகித்துப் பேசுகிறார்கள்.

இன்னொரு, கிழக்குச் சீமையா இருக்குமோ?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in