பிட்லீ

கீர்த்திக்கு இன்னும் சாதிக்க வேண்டுமாம்!
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

உதயநிதியுடன் ’மாமன்னன்’ படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் நானியுடன் ‘தசரா’, சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் சாதிக்க வேண்டுமாம். “தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி என்றாலும் சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கிறது. எதை செய்தாலும் திருப்தி குறைவாகவே இருக்கிறது. போதாது என்று நினைக்கும்போதுதான் முன்னேற முயற்சிக்கிறோம் என்பார்கள். அதுதான் எனக்கும் இருக்கிறது’’ என்கிறார் கீர்த்தி.

அதுதான் கடைத் திறப்புவிழாவுக்கெல்லாம் போயி படை திரட்டுறீங்களோ..?

பெரும்பாலான நடிகைகள், தாய்மை அடைந்ததுமே வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவார்கள். தற்போது தாய்மையடைந்திருக்கும் நடிகை ஆலியாவிடம் நீங்கள் எப்படி என்று கேட்டால், “நீங்கள் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருந்தால், ஓய்வெடுக்க வேண்டிய அவசியமில்லை. நடித்துக் கொண்டிருப்பது எனக்கு அமைதியைத் தருகிறது. நடிப்புதான் என் ஆன்மா. அது என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. அதனால் நூறு வயது வரை நடித்துக்கொண்டிருக்க ஆசைப்படுகிறேன்’’ என்கிறார்.

அம்புட்டெல்லாம் ஆசப்படாதீங்க தாயீ..!

நடிகைகள் தொடர்பான பெயர் குழப்பம் அனைத்து 'வுட்'களிலும் இருக்கிறது. சமீபத்தில் இப்படியொரு பெயர் சிக்கலில் மாட்டியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில், ‘விக்ரம் வேதா’, ‘காற்று வெளியிடை’, ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஷ்ரத்தாவின் பெயரை பலர் மாற்றி எழுதுகிறார்களாம். அதாவது, ஷ்ரத்தா என்ற பெயருடன், கபூர், தாஸ் என்ற இந்தி நடிகைகளின் பெயரைச் சேர்த்து எழுதுகிறார்களாம். இந்தப் பஞ்சாயத்தைத் தவிர்க்க தனது பெயரை இன்ஸ்டாகிராமில், ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என்று மாற்றியிருக்கிறார். ரமா, அவரது அம்மாவின் பெயராம்!

யப்பேய்... இனியாச்சும் அம்மிணி பேர ஒழுங்கா எழுதுங்கப்பே!

சமீபத்தில் கேரளாவுக்கு ஷூட்டிங் சென்றிருந்த நடிகை நித்யா மேனனிடம், அருகில் உள்ள மீன்கடைக்காரருக்கு ரூ.75 லட்சம் லாட்டரியில் விழுந்திருப்பதாகத் தகவல் சொன்னார்களாம். உடனே அவரைப் பார்க்கக் கிளம்பிய மேனன், மீன் கடைக்காரரைச் சந்தித்துப் பேசிவிட்டு, “லாட்டரியில் விழுந்த பணத்தை என்ன பண்ணப்போறீங்க?” என்று கேட்டாராம். அதற்கு அந்த மனிதர், “நான் லாட்டரி வாங்கறதே இல்லைங்க. அதெல்லாம் வதந்தி; நம்பாதீங்க” என்று சொல்ல, குழம்பிப்போய் திரும்பினாராம் மேனன்.

அக்கம் பக்கத்துல நல்லா விசாரிச்சுட்டு கெளம்பீருக்கப்டாதாம்மா?

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ஷூட் முடிந்துவிட்டாலும் கிராஃபிக்ஸ் வேலைகள் முடியவில்லையாம். இதனிடையே, சமந்தாவுக்கு சில காட்சிகளில் திருப்தி இல்லை அதனால் அதையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று வதந்தி பரவ, வேகமாக மறுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ‘’படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. படத்தை தரமாகத் தரவேண்டும் என்று வேலைகளை செய்துவருகிறோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு.

அதானே... சமந்தா சமத்துப் பொண்ணாச்சே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in