பிட்லீ

நயனை ஆச்சரியப்படவைத்த கதை!
நயன்தாரா
நயன்தாரா

திருமணத்துக்குப் பின் நடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை நயன்தாரா விதித்திருப்பதாகச் சொல்கிறார்கள். பெண்மையப் படங்களுக்கு முன்பைவிட அதிமுக்கியத்துவம் கொடுக்க முடிவெடுத்திருக்கும் நயன்தாராவை, திருமணத்துக்கு முன்பு கேட்ட கதைகளில் ஒன்று ரொம்பவே ஆச்சரியப்பட வைத்ததாம். அந்தக் கதையை பான் இந்தியா படமாக தயாரித்து நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் நயன். இதனிடையே, ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

அதுசரி, கல்யாணப் படத்தை எப்ப ரிலீஸ் பண்ணப் போறீங்க?

பிரபாசுடன் ’புராஜெக்ட் கே’ படத்தில் நடித்துவரும் தீபிகா படுகோனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென ஹார்ட் பீட் அதிகமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு சகஜமாகி மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தாராம். பொதுவாக, உடல் நலக்குறைவு என்றாலே குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது லீவ் சொல்லிவிடுவார்கள் நடிகைகள். ஆனால், தீபிகா அப்படிச் செய்யவில்லை. காரணம், அமிதாப். இந்தப் படத்தில் அமிதாப்புடன் தீபிகா நடிக்கும் காட்சிகளை படமாக்கியபோதுதான் ஹார்ட் பீட் பிரச்சினை வந்ததாம் தீபிகாவுக்கு. என்றாலும் சீனியரை காக்கவைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான், உடனடியாக ஷூட்டிங்கில் கலந்துகொண்டாராம் தீபிகா.

பொண்ணுக்கு ரொம்பத் தங்க மனசு!

இந்தி நடிகையான ஊர்வதி ராவ்டேலா, ’தி லெஜண்ட்’ மூலம் தமிழுக்கு வருகிறார். சுசி கணேசனின் ’திருட்டுப் பயலே 2’ படத்தின் இந்தி ரீமேக்கில் இவர்தான் ஹீரோயின். பான் இந்தியா நடிகையாகும் தனது கனவு ’லெஜண்ட்’ மூலம் நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி என்று சொல்லும் ஊர்வசி ராவ்டேலா, “எல்லோருக்குமே ஒரு கனவு இருக்கும். அது நிறைவேறினா பெரிய மகிழ்ச்சிதானே. அப்படித்தான் எனக்கும். பான் இந்தியா நடிகையா ஆகணும்னு நினைச்சேன். அது பூர்த்தியாகி இருக்கு. இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரிக்குத்தான் நன்றி சொல்லணும்” என்கிறார்.

அப்டீன்னா... நம்மூருப் படங்கள்ல நடிக்கமாட்டீங்களா?

பிரிட்டீஷ் வரவான நிகிஷா படேல் தமிழில், ‘என்னமோ ஏதோ’, ‘கரையோரம்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். எனினும் டாப் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைக்காததால், “போங்கப்பா நீங்களும் உங்க சினிமாவும்” என்று அலுத்துக் கொண்டு பிரிட்டீஷுக்கே பறந்தார். அவரது நடிப்பில் உருவான ’ஆயிரம் ஜென்மங்கள்’ இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அது ரிலீஸானால் மீண்டும் வாய்ப்புகள் வரலாம் என நம்புகிறாராம் நிகிஷா.

எதுக்கும் நம்ம லெஜண்டை அப்ரோச் பண்ணிப்பாருங்களேம்மா..!

தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கும் மம்தா மோகன்தாஸ், நவம்பரில் படத் தயாரிப்பைத் தொடங்குகிறார். “என் தயாரிப்பில் நான் நடிக்க மாட்டேன்” என்று முதலில் கூறியவர் இப்போது தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதுமுக இயக்குநர் இயக்கும் தனது கம்பெனியின் முதல் படம் சம்பந்தப்பட்ட விவரங்களை இப்போதைக்கு வெளியில் சொல்லமாட்டாராம். பெண்மைய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம் மம்தா.

ஆட்ட மேச்சது மாதிரியும் ஆச்சு... அண்ணனுக்குப் பொண்ணப் பாத்த மாதிரியும் ஆச்சும்பாங்களே...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in