இயல்பான நடிப்பால் ஈர்க்கும் பிரியா பவானி சங்கர்!

பிறந்தநாள் கொண்டாடும் நட்சத்திரம்
இயல்பான நடிப்பால் ஈர்க்கும் பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் பலர். ஹாலிவுட்டில் கிளின்ட் ஈஸ்ட்வுட், பாலிவுட்டில் ஷாருக் கான், கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் எனப் பல உதாரணர்கள் உண்டு. அப்படியான நட்சத்திரங்களில் ஒருவரான பிரியா பவானி சங்கருக்கு இன்று (டிச.31) பிறந்தநாள்.

'புதிய தலைமுறை' சேனலில், செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்த பிரியா பவானி சங்கர், விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ நெடுந்தொடரில் நடித்தார். ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பின்னர் ‘மேயாத மான்’ (2017) படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்த பவானி சங்கர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ (2018), எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘மான்ஸ்டர்’ போன்ற படங்கள் அவருக்கு நற்பெயர் பெற்றுத் தந்தன.

‘களத்தில் சந்திப்போம்’, ‘கசட தபற’, ‘மாஃபியா’, ‘ப்ளட் மணி’ போன்ற படங்களில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கருக்கு, சமீபத்தில் வெளியான ‘ஓ மணப்பெண்ணே’ படம் மேலும் புகழ் சேர்த்தது. தற்போது, ‘இந்தியன் 2’, ‘குருதி ஆட்டம்’, ‘ருத்ரன்’, ‘பொம்மை’, ‘ஹாஸ்டல்’ போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்துவதுடன், ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இயல்பாக நடிக்கும் நடிகை எனப் பெயர் பெற்றிருக்கும் பிரியா பவானி சங்கர், மென்மேலும் புகழ்பெற வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in