இறந்து போன தனது மகள் பிறந்த நாளான இன்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகி சித்ரா பகிர்ந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாடகியான கே.எஸ்.சித்ரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமி, வங்காளம் உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார். ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் சித்ரா பெற்றுள்ளார். அத்துடன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.
இசைக்குயில் எனவும், சின்னக்குயில் சித்ரா என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். கடந்த 1988-ம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், 2011-ம் ஆண்டு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சித்ராவின் மகள் நந்தனா உயிரிழந்தார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஒவ்வொரு ஆண்டும் தனது மகளின் பிறந்த நாள் அன்று சமூக ஊடகத்தில் பாடகி சித்ரா பதிவை வெளியிடுவார். அந்த வகையில் இன்று நந்தனாவின் பிறந்த நாள். இதனைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பாடகி சித்ரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். நெகிழ்ச்சியான இந்த பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது.