பயாஸ்கோப் -19 : சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படங்கள் - 4

எ ஹீரோ: ஒரு நாயகன் உதயமாகிறான்!
பயாஸ்கோப் -19 : சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படங்கள்  - 4
www.mehrnews.com

இரண்டு முறை ஆஸ்கர் விருதுபெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாதி. இவர் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக ஊடகத்திலும் உலவுவதில்லை. காரணம், அவை நேரத்தை கொல்லும், தவிர எதிர்மறைச் செய்திகள் அதிகம் புழங்கும் இடம். அதனால் ஒதுங்கி இருப்பதாகச் சொல்கிறார் அஸ்கர்.

தனது புதிய படமான ‘எ ஹீரோ’ மூலம் மெய்நிகர் உலகில் நிகழும் பொய்மைகளை கடுமையாக விமர்சித்துள்ளார் அஸ்கர். இந்தப் படத்தில், சமூக ஊடகங்களால் திடீர் புகழடைந்த மனிதர்களையும் அதே ஊடகங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் விருதினை வென்றது இப்படம். தனது சகலையிடம் வாங்கிய கடனை திருப்பித் தராத காரணத்தால் சிறையில் அடைக்கப்படுகிறான் ரஹீம் சுல்தானி (அமிர் ஜாடிடி). மனக் கசப்பு காரணமாக அவனை விவாகரத்து செய்துவிடுகிறாள் மனைவி. இதனால், திக்குவாய் பிரச்சினையால் கோர்வையாகப் பேச இயலாத பதின் வயது மகனுடன் சகோதரி வீட்டில் தங்குகிறான் ரஹீம்.

இந்நிலையில், தொடர் சிறைவாசத்துக்குப் பிறகு இரண்டு நாள் பரோலில் சிறையிலிருந்து வெளியே வருகிறான் ரஹீம். வந்ததும் அவன் முதலில் சந்திப்பது அவனது காதலியைத்தான். கடன்பட்ட பணத்தை எப்பாடுபட்டாவது திரும்பித் தந்துவிட்டால் பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறான் அவன். அதில் அவனுக்கு உதவியாக அவனது காதலி கைகோக்கிறாள்.

இடையில் கைப்பை ஒன்றை காதலி கண்டெடுக்கிறாள். அது நிறைய தங்க நாணயங்கள் இருக்கவே, அதை ரஹீமிடம் ஒப்படைக்கிறாள். ரஹீம் அதை விற்றுவிடலாம் என முடிவெடுக்கிறான். ஆனால், அன்றைய தேதியில் தங்கம் விலை மிகக் குறைவாக இருந்ததால் இருவரும் அந்த எண்ணத்தை கைவிடுகிறார்கள். கைப்பையை தன்பொறுப்பிலேயே எடுத்துச் செல்கிறான் ரஹீம்.

ஆனால், அந்த கைப்பையைப் பார்த்து அவனது சகோதரியே ரஹீமை சந்தேகப்படுகிறாள். அதனால், அந்தப் பையை தவறவிட்டவரிடமே கொடுத்துவிட முடிவெடுக்கிறான் ரஹீம். அதற்காக அந்த கைப்பை பற்றிய குறிப்புடன் நகரின் முக்கிய பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டுகிறான். அதில் தனது தொடர்பு எண்ணாக சிறையின் எண்ணை தந்து விடுகிறான். காவல் துறையினர் அவனது இந்த செய்கையைப் பாராட்டி மீடியாக்களில் அவனைப் பற்றி ஓகோவென புகழ்கிறார்கள். இதனால் ஒரே இரவில் கதாநாயக அந்தஸ்து பெறுகிறான் ரஹீம்.

தொலைக்காட்சில் அவனது பேட்டி வெளியானதிலிருந்து அவன் வாழும் இடத்தில் அதிகம் மதிக்கப்படுவனாகிறான் ரஹீம். சிறியவர் முதல் பெரியவர் வரை அவனை ரோல் மாடலாக கருதத் தொடங்குகின்றனர். இது அவனுக்கு பணம் கொடுத்த சகலைக்கு எரிச்சலை கிளப்ப, ”ரஹீம் செய்தது கடமை. ஒவ்வொரு மனிதரும் செய்திருக்க வேண்டிய விஷயம். இதில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை” என்கிறார்.

“சிறைக்காவலர்களிடம் ரஹீம் ஏதோ கோல்மால் செய்துதான் இத்தகைய புகழை சம்பாதித்துள்ளான். இவனைப் போன்ற மனிதர்கள் ஒருபோதும் நல்ல செயல்களை செய்திருக்கவே முடியாது, எனவே தீர விசாரிக்க வேண்டும்” எனவும் சகலை சொல்கிறார். ஆனால், சிறை அதிகாரி அதனை ஒப்புக் கொள்ளாமல் ரஹீமை முழுமையாக நம்புகிறார். அவனது கடனை அடைக்க ஒரு வழியையும் ஏற்படுத்தித் தருகிறார்.

அதன்படி, தொண்டு நிறுவனம் ஒன்றின் துணையோடு ரஹீமுக்குப் பாராட்டு விழா எடுத்து அதில் கிடைக்கும் உதவித் தொகையில் கடனைத் திருப்பித் தந்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள்.

அவ்வகையில் அந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைப்பெற்று நிறைய பணமும் வசூலாகிறது. ஓவியம் வரைவதில் திறமையுடைய ரஹீம், ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிட்டால் காதலியை கரம் பிடித்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணப்படலாம் என்று முடிவெடுக்கிறான்.

அதற்காக ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு சென்றபோது அதன் முதலாளி இவன் நேர்மை குறித்து பல சங்கடமான கேள்விகளை எழுப்புகிறான். மேலும், பணப் பையைப் பறிகொடுத்த பெண் வந்து பேசினால்தான் வேலை என்றும் கூறிவிடுகிறான். வேறுவழியின்றி தன் காதலியையே அந்த பெண்ணாக நடிக்க வைக்கிறான் ரஹீம். இதனால் இந்தப் பிரச்சினை வேறொரு சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கிறது.

சிறைக்குச் சென்ற அவமானக் கறை மெல்ல மறையத் தொடங்கும் பொழுதில் சிறு புள்ளியாகத் தொடங்கிய பிரச்சினை, தொடர் சங்கிலியாகி ஒரு கட்டத்தில் ரஹீம் விரித்த வலையொன்றில் அவனே விழுந்து தவிக்கும் நிலையை உருவாக்கிவிடுகிறது. அதற்கேற்ப, நிகழும் ஒவ்வொரு சம்பவமும் அவனுக்கு எதிராகத் திரும்புகிறது. அந்தச் சிக்கல்களிலிருந்து ரஹீம் எப்படி மீண்டு வருகிறான் என்பதை மீதிப்படம் சொல்கிறது.

"இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சில சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் சில அசாதரணமான காரியங்களை செய்துவிட, திடீரென்று புகழ் வெளிச்சம் புகையென அவர்களைச் சூழும். அதனால் அவர்கள் எல்லா நேரத்திலும் நல்லவர் என்கிற அந்த முகமூடி அணிந்தே வலம் வர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தவறுகளைச் செய்தால் தான் அவன் மனிதன். ஆக, இங்கு யாருமே புனிதர் இல்லை” இந்தப் படம் குறித்து இதன் இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாதி ஒரு பேட்டியில் இப்படி பதிவு செய்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in