பிக்பாஸ் ராஜூ சின்னத்திரையை விட்டு விலகுகிறாரா?

பிக்பாஸ் ராஜூ
பிக்பாஸ் ராஜூ

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னரான ராஜூ பெரிய திரையில் இனி கவனம் செலுத்த உள்ளார்.

உலக அளவில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்தின் ஐந்தாவது சீசனின் வின்னரான ராஜூ முன்பு அதிகம் சீரியலில் கவனம் செலுத்தி வந்தார். 'பாரதி கண்ணம்மா', 'நாம் இருவர் நமக்கு இருவர்' உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதிலும் குறிப்பாக 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது இவருக்கு பிக்பாஸ் வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் நகைச்சுவைக்கு என ஒரு நபரை அவர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி இந்த ஐந்தாவது சீசனில் ராஜூ உள்ளே போனார்.

அவரது குணாதிசியம், நகைச்சுவை உணர்வு, பிரச்சினைகளை கையாளும் விதம், அவர் உள்ளே சில சூழ்நிலைகளுக்கு ரியாக்ட் செய்து பயன்படுத்திய வார்த்தைகள் வெளியில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் இன்னும் பரவலாக அறிமுகமானார்.

பிக்பாஸ் ராஜூ
பிக்பாஸ் ராஜூ

மேலும் உள்ளே குடும்ப உறுப்பினர்கள் வந்தபோது கூட தன் மனைவியிடம், வெளியே தனக்கான நடிப்பு வாய்ப்பு எப்படி இருக்கும், வாய்ப்பு தேடி அலைய வேண்டியது இல்லையே என்றெல்லாம் கேட்டிருந்தார்.

இப்போது ராஜூவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ஏராளமான படங்கள் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் நடித்திருப்பவருக்கு இப்போது பொன்ராம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் வந்துள்ளது. இவருக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கலாம். இதனால் ராஜூ நடித்து வந்த 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இவரது கதாப்பாத்திரத்திற்கு வேறு யாராவதோ அல்லது அந்த கதாப்பாத்திரத்திற்கான ட்ராக்கோ மாறும் என்கிறார்கள்.

படங்களில் இனி முழு கவனம் செலுத்த இருப்பதால் சீரியலுக்கு ராஜூ குட்பை சொல்ல இருக்கிறார் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in