பிக்பாஸ் அல்டிமேட்: கதறி அழுத வனிதா; ஆறுதல் கூறிய பிக்பாஸ்!

பிக்பாஸ் அல்டிமேட்: கதறி அழுத வனிதா; ஆறுதல் கூறிய பிக்பாஸ்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா பிக்பாஸிடம் அழ, அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் பிக்பாஸ். என்ன நடந்தது?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு கமல்ஹாசன் விலக இருப்பதாக நேற்று அறிவித்தார். கரோனா சூழல் காரணமாக ‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு தேதிகள் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தன்னால் மற்றவர்களின் வேலைக்கும் சிக்கல் வருகிறது என தெரிவித்து பிக்பாஸ் அல்டிமேட் விட்டு விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன்.

நேற்று அதாவது பிப்ரவரி 20ம் தேதி ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் எபிசோடே கமல் கடைசியாக கலந்து கொள்வது எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்தார். நேற்று டபுள் எவிக்‌ஷனாக ஷாரிக் மற்றும் அபிநய் இருவரும் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். மேலும் கடந்த வார கேப்டனாக வனிதாவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்ற விசாரணை நடந்தது. இதில் கிட்டத்தட்ட போட்டியாளர்கள் அனைவருமே வனிதாவின் செயல்பாடுகள் கேப்டனாக சரியில்லை என்பதையே சொன்னார்கள். இதனையடுத்து வனிதா பிக்பாஸிடம் தனியாக சென்று அழுதிருக்கிறார்.

அங்கு அவர், ‘பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவருமே போலியாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறை மறைக்க இல்லாத ஒரு விஷயத்தை உருவாக்குகிறார்கள். குறிப்பாக கமல் சார் வரும் எபிசோடில் இதை சிறப்பாகவே செய்கிறார்கள். இவர்களுக்கு நான் தான் எளிமையான டார்கெட். இதெல்லாம் பார்க்கும் போது எரிச்சலாக வருகிறது. எது நடந்தாலும் வனிதா தான் என்று என்னையே சொல்கிறார்கள்.

தனியாக இருப்பது போல உணர்கிறேன். சிலரிடம் பேச எனக்கு பிடிக்கவே இல்லை. பிறகு எப்படி நண்பர்களாக இருப்பது? புரிந்தும் புரியாமலும் விளையாடி கொண்டிருக்கிறார்கள். எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. வெளியே என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அது குறித்தான தெளிவு வேண்டும். இவங்க கூட இருக்கவே வெறுப்பாக இருக்கிறது’ என பிக்பாஸிடம் அழுதிருக்கிறார் வனிதா.

வனிதாவின் புலம்பலை கேட்ட பிக்பாஸ் அவரிடம் ஆறுதல் கூறும் விதமாக, ‘வனிதா எவ்வளவு வலிமையான போட்டியாளர் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். இந்த விளையாட்டின் விதிமுறைகள் அப்படி என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். யார் என்ன சொன்னாலும் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். உங்கள் விளையாட்டை நிறைய பேர் பார்த்து வருகிறார்கள். அவர்கள் எதுவாக இருந்தாலும் முடிவு செய்யட்டும்’ என சொல்லி இருக்கிறார் பிக்பாஸ்.

வனிதாவின் செயல்பாடுகளில் இனிவரும் காலங்களில் எந்த மாதிரியான மாறுதல்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in