‘இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு’ - ‘சர்தார்’ வாய்ப்பு குறித்த சந்தேகம் தீர்த்த ராஜு பாய்!

‘இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு’  -  ‘சர்தார்’ வாய்ப்பு குறித்த சந்தேகம் தீர்த்த ராஜு பாய்!

‘இரும்புத்திரை', 'ஹீரோ' படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் 'சர்தார்'. இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்துவருகிறது. ஜூலை முதல் வாரத்திலிருந்து படம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வர ஆரம்பிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த வருடம் தீபாவளி வெளியீடாக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் 'பிக் பாஸ்' தமிழ் ஐந்தாவது சீஸனின் வெற்றியாளரான ராஜு ஜெயமோகனும் இருக்கிறார் எனும் தகவல் விக்கிப்பீடியா பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. ரசிகர் ஒருவர், இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் ராஜுவையும் டேக் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்த ட்வீட்டைப் பகிர்ந்திருக்கும் ராஜு, 'மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் 'சர்தார்' படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்றுதான் விருப்பப்படுகிறேன். ஆனால், விக்கிப்பீடியா தந்துள்ள இந்தத் தகவல் உண்மையில்லை. நான் இந்தப் படத்தில் இல்லை. ஆனா இதெல்லாம் கேக்கவும் பாக்கவும் நல்லா இருக்கு' என அதில் கூறியிருக்கிறார். அந்தப் பதிவில் இயக்குநர் மித்ரனை டேக் செய்து 'சர்தார்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடித்து வெளியே வந்ததும் சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ராஜு. அப்படத்தில் அவரது கதாபாத்திரமும் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு முழு கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ள ராஜு, சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் தொடர்கிறார்.

ராஜு பாய் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ராஜு, விஜய் டிவியின் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in