பிக்பாஸ் 6: வீட்டின் மாற்றங்கள் என்ன... போட்டியாளர்கள் யார், யார்?

பிக்பாஸ் 6: வீட்டின் மாற்றங்கள் என்ன... போட்டியாளர்கள் யார், யார்?

பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், இந்த சீசனில் வீடு எப்படி இருக்கிறது, கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசனை இந்த மாதம் 9-ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. ஐந்து சீசன்களை தொடர்ந்து ஆறாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தேர்வு என்பது மிக முக்கியமானது. அவர்கள்தான் நிகழ்ச்சியின் கன்டென்ட் எனும்போது போட்டியாளர்கள் தேர்வில் நிகழ்ச்சி தயாரிப்புத் தரப்பு மிக கவனமாக இருப்பார்கள்.

இதுவரை நடந்த ஐந்து சீசன்களிலும் போட்டியாளர்கள் எண்ணிக்கை 16 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், தமிழில் இதுவரை எந்தவொரு பிக்பாஸ் சீசனிலும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் அதாவது கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் பிரபலங்களுடன் பொது மக்களும் இணைகிறார்கள். ‘பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவது ஏன் என பொதுமக்கள் அனுப்பும் செல்ஃபி வீடியோக்களில் இருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அவர்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறது பிக்பாஸ் குழு.

அந்த வகையில், இந்த முறை சூப்பர் மாடல் ஷெரினா, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி, ஏடிகே உள்ளிட்ட பலர் பொது மக்கள் பிரிவில் இருந்து கலந்து கொள்கின்றனர். இதுதவிர்த்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், சின்னத்திரை நடிகை ரக்‌ஷிதா, அசீம், விஜே மகேஸ்வரி, ஆயிஷா, ஜிபி முத்து, சமீபத்தில் திருமணமானத் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் - மகாலஷ்மி ஜோடி எனப் பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் எதிர்ப்பார்க்கும்படியான ‘கன்டென்ட்’டுக்கு பஞ்சமில்லாத பலரும் இந்த முறை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

போட்டியாளர்கள் போலவே, ஒவ்வொரு சீசனிலும் மக்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் வீடுதான். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விதமான தீம்மை அடிப்படையாகக் கொண்டு பிக்பாஸ் வீட்டை வடிவமைப்பார்கள். அந்த வகையில் கடந்த ஐந்தாவது சீசனில், ஐம்பூதங்கள் என்ற அடிப்படையிலும் வீட்டின் வாயிலிலே 5 என்ற எண் வடிவத்தில் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்து இருந்தார்கள். டார்க் வண்ணங்கள் நிறைந்தது, தமிழர்கள் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் என ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு தீம்.

அந்த வகையில், இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கிறது கோல்டன் கலர் தீம். இதுதவிர, ரோஸ், நீல வண்ணம் என மைல்ட் கலர்களிலேயே அலங்கரித்து இருக்கிறார்கள். ஆறாவது சீசனை குறிக்கும் வகையில், ஆறு என்ற எண்ணின் வடிவமைப்பு வீட்டின் முகப்பிலேயே இருக்கிறது. போன சில சீசன்களில் இல்லாமல் இருந்த நீச்சல் குளம் இந்த முறை தண்ணீர் நிரப்பி இருக்கிறார்கள். தனி அறை, பாதாள ஜெயில் என கடந்த சீசன்களில் இருந்த ஜெயில் இந்த முறை கிளிக்கூண்டு வடிவத்தில் அமைந்திருக்கிறார்கள்.

டைனிங் ஏரியா, ஆண் பெண் இருவருக்கும் தடுப்பில்லாத படுக்கை அறை, பாத்ரூமிற்கு இரண்டு வழிகள் என போன சீசனில் இருந்ததே இந்த சீசனிலும் தொடர்ந்திருக்கிறது. 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் யார் யார் என்ற அறிமுக எபிசோட் இந்த வாரம் ஞாயிறன்று மாலை 6 மணியில் இருந்து தொடங்க இருக்கிறது.

இதுமட்டுமில்லாமல், இந்த முறை எடிட்டட் வெர்ஷன் தொலைக்காட்சியில் இரவு 9.30- 10.30 மணி வரையிலும், வார இறுதியில் கமல்ஹாசன் வரும் நிகழ்ச்சி இரவு 9.30 – 11 மணி வரையிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுதவிர்த்து அன்கட் வெர்ஷனாக 24 மணி நேர ஒளிபரப்பும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in