பிக்பாஸ் அல்டிமேட்: சிலம்பரசனின் முதல் நாள் எப்படி இருந்தது?

பிக்பாஸ் அல்டிமேட்: சிலம்பரசனின் முதல் நாள் எப்படி இருந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி வடிவமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24x7 என டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே கமல்ஹாசனும் பிக்பாஸின் ஓடிடி வடிவத்தையும் தொகுத்து வழங்கினார். ஆனால், கடந்த வாரம் 'விக்ரம்' படப்பிடிப்பு தேதிகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விலகுவதாக அறிவித்தார். கமல்ஹாசனுக்கு பதில் நடிகர் சிலம்பரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான புரோமோ வெளிவந்ததில் இருந்தே சிம்பு ரசிகர்கள் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்பதற்கு ஆர்வம் தெரிவித்து வந்தனர். நேற்று சிலம்பரசன் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

நிகழ்ச்சிக்குள் வந்ததுமே மேடைக்கு போகாமல் முதலில் போட்டியாளர்களை தனித்தனியாக சந்தித்தார் சிம்பு. ஆக்டிவிட்டி ஏரியாவுக்குள் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக உள்ளே வர சிலம்பரசனை பார்த்ததும் மகிழ்ச்சி கலந்த சர்ப்ரைஸ் மொமண்ட் அது.

அபிராமி, வனிதா, சுருதி, பாலா என ஒவ்வொருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, நிரூப், தாடி பாலாஜி உள்ளிட்டோர் சிலம்பரசன் வரப்போவதை தாங்கள் முன்னரே எதிர்ப்பார்த்திருந்த விஷயத்தையும் சொன்னார்கள்.

ஒவ்வொருவரின் விளையாட்டை பற்றியும் அவர்கள் என்ன மாதிரி இனி விளையாட வேண்டும் என்பது குறித்தும் சிலம்பரசன் அவர்களிடம் சொன்னார். பின்பே பிக்பாஸ் மேடைக்கு சிம்பு எண்ட்ரி கொடுத்தார்.

கமல்ஹாசன் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்பதை சொன்ன சிம்பு, அவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் தான் தீவிர ரசிகன் என்பதையும் கூறினார். பின்பு பார்வையாளர்களிடம் பேசிய சிம்பு, அடுத்து அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து பேசினார்.

இதுமட்டுமல்லாமல், 'கலக்க போவது யாரு' சதீஷ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சிக்குள் நுழைந்தனர்.

ஏஞ்சல் vs அரக்கி டாஸ்க் குறித்து போட்டியாளர்களிடம் சிம்பு பேசினார். பின்பு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளும் முதல் எபிசோட் என்பதால் இந்த வாரம் நோ எவிக்‌ஷன் என்பதையும் தெரிவித்தார்.

முதல் நாள் என்பதால் ஜாலியாக, நிகழ்ச்சிக்குள் தன்னையும் பொருத்தி கொள்வதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார் சிம்பு. இனி வரும் நாட்களில் எப்படி நிகழ்ச்சியை எடுத்து போவார், ஸ்ட்ரிட் வாத்தியாராக போட்டியாளர்களிடம் முகம் காட்டுவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in