‘பாரதி கண்ணம்மா’: சாதி வெறியையும், மென் காதலையும் பேசிய சேரன் காவியம்!

'பாரதி கண்ணம்மா’வில் சேரன், பார்த்திபன், மீனா
'பாரதி கண்ணம்மா’வில் சேரன், பார்த்திபன், மீனா

சாதி வெறியை கதையின் மையமாக பேசிய படங்கள் பல வந்திருக்கின்றன. அதிலும் முகத்தில் அறைவது போல் சொல்லிய படங்கள், மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கின்றன. சாதி வெறியுடன் பிரிக்க முடியாத காதலையும், பேச முடியாத அதன் வலிகளையும் சொன்ன படங்களில், தனித்து வெளிப்பட்டவர் இயக்குநர் சேரன். தனித்துவமான படமாகத் திகழ்ந்தவள், 'பாரதி கண்ணம்மா!’

மகாகவி பாரதியையும் அவன் பாடிய கண்ணம்மாவையும் யாரால் மறக்க முடியும்? அப்படி நம்மால் மறக்கவே முடியாதவர்கள்தான் இந்தக் கதையில் வருகிற பாரதியும் கண்ணம்மாவும். நாயகனின் பெயர் பாரதி. நாயகியின் பெயர் கண்ணம்மா. பாரதி கண்ணம்மா. ஆமாம், இது சேரனின் ’பாரதி கண்ணம்மா’.

முடி திருத்தும் தொழிலாளியின் வீட்டுக்கு வழக்கம்போல் நெல் மூட்டைகளை அனுப்புகிறார் ஊரின் அம்பலக்காரர். ஆனால் அவரே முடி திருத்திக்கொள்கிறார். துணி வெளுக்கும் தொழிலாளியின் வீட்டுக்கு நெல் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அவரே தன்னுடைய துணியை துவைத்துக்கொள்கிறார். இப்படியாகக் கிளம்புகிறவர், ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறார். அந்த ரயிலில் இருந்து யார் வரப்போகிறார்கள், யாருடைய வருகைக்காக இந்தப் பெரியவர் காத்திருக்கிறார்? அங்கு ரயில்வே ஸ்டேஷனில் அவர் காத்திருக்கும் வேளையில், அப்படியே காலத்தின் பின்னோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது ஃப்ளாஷ்பேக்.

அந்த அம்பலக்காரர் விஜயகுமார். ஊர்ப்பெரியவர். அவரின் மகள் மீனா. அவர்தான் கண்ணம்மா. அவர் வீட்டுப் பணியாட்களில் ஒருவர் பார்த்திபன். இவர்தான் பாரதி.

அம்பலக்காரரின் சாதியைச் சேர்ந்த ஒருவன், தலித் இனப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள, அதன் பஞ்சாயத்துடன் கதை தொடங்குகிறது. ‘’அந்தப் பெண்ணோட கால்ல விழுந்து மன்னிப்பு கேளுடா’’ என்று தீர்ப்பு சொல்கிறார் விஜயகுமார்.

வழியில் பள்ளிக்குச் சென்ற மகள் மீனா, பெரியவளாகிவிட்டதைச் சொல்கிறார்கள் கூட வந்தவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மீனாவின் மனதை அடுத்தடுத்த காட்சிகள் வழியே நமக்குக் கடத்துகிறார் இயக்குநர். பார்த்திபனை விரும்புகிறார் மீனா. அம்பலக்காரரின் மகள் மீது தான் வைத்திருக்கும் அன்பை, அவள் காதலாக நினைத்துக் கொண்டாளே என்று மருகித் தவிக்கிறார் பார்த்திபன். அதேசமயம், அவருக்குள்ளும் காதலை ஒளித்து வைத்திருக்கிறார்.

பார்த்திபனுக்கு ஒரு தங்கச்சி. பெயர் பேச்சி. தங்கச்சி பேச்சியாக இந்து. வயலில் வேலை பார்க்கும் இந்து, அங்கே ஆய்வுக்காக வந்திருக்கும் ராஜாவை விரும்புகிறார். ராஜாவும் காதலிக்கிறார்.

இங்கே, தன் காதலை பார்த்திபனிடம் சொல்கிறார் மீனா. ’’இதெல்லாம் தப்பு. கூடாது. சேரவும் முடியாது’’ என மறுக்கிறார். இப்படி ஒவ்வொரு தருணங்களிலும் தன் காதலை அவரிடம் மீனா உணர்த்த்திக்கொண்டே, வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். பார்த்திபன் அதை ஒவ்வொரு விதமாகச் சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி மறுத்துக் கொண்டே இருக்கிறார்.

நடுவே, ஒரு கூட்டம் ஊருக்குள் புகுந்து ஒரு வீட்டுக்குத் தீ வைக்கிறது. அந்த வேலையைச் செய்வது ரஞ்சித் மற்றும் அவரின் தோழர்கள். சிலபல வருடங்களுக்கு முன்பு, தலித் சமூகத்தைச் சார்ந்த ரஞ்சித், உயர் சாதிப் பெண்ணைக் காதலிக்க, இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள். அவர்களைப் பிடித்து இழுத்து வந்து, பஞ்சாயத்தில் வெளுத்தெடுக்கிறார்கள். பிறகு ரஞ்சித்தை ஊருக்குள்ளேயே வரக்கூடாது என அடித்துத் துரத்துகிறார்கள். அந்த ரஞ்சித், ஊரையும் வெறுக்கிறார். மேல் சாதி வர்க்கத்தையும் வெறுக்கிறார். பழி தீர்க்கத் தருணம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

’’ராஜா நம்ம சாதி. எனவே படித்த ராஜாவை, தன் மகள் மீனாவுக்கு மணம் முடிக்கலாம்’’ என முடிவெடுக்கிறார் விஜயகுமார். அவரிடம் விஷயத்தைச் சொல்கிறார். ஆனால் ராஜாவோ, ‘’பாரதியின் தங்கை பேச்சியை விரும்புகிறேன். நீங்கதான் எங்களுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்’’ என்று கெஞ்சுகிறார். இதைக் கேட்டு கொந்தளித்து ஆவேசமாகிறார் ஊர்ப்பெரியவர் விஜயகுமார். ‘’அவங்க என்ன சாதி, நாம என்ன சாதி’’ என்கிறார். இதையெல்லாம் வாசலில் இருந்து பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கும் பார்த்திபன், அப்படியே வீட்டுக்குள் இருந்து பார்த்தபடி இருக்கிற மீனாவை, ஒரு பார்வை பார்க்கிறார். அந்தப் பார்வைப் பரிமாறல்களுக்குள்தான் பொதிந்து கிடக்கிறது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி வெறியும், காதலின் இயலாமையும்!

அதன் பிறகு, இன்னொரு மாப்பிள்ளைத் தேர்வு. பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. அப்போது புடவைத் தலைப்பை எடுத்து அடுப்பில் பற்றவைத்துக்கொண்டு கையைச் சுட்டுக்கொள்கிறார் மீனா. அபசகுனம் என்று மாப்பிள்ளை வீடு கிளம்பிவிடுகிறது. இதையடுத்து, ஒவ்வொரு முறையும் பார்த்திபனிடம் போராடி தோற்றுக்கொண்டே இருக்கிறார் மீனா.

மனதில் உள்ளதையெல்லாம் கடிதமாக எழுதுகிறார். அப்படி அழுதபடியே எழுதும்போது, பாரதியின் பெயர் கண்ணீரில் கரைந்து, அழிகிறது. ஆனால் மீதமுள்ள காதல் வரிகள் அப்படியே இருக்கின்றன. அந்த சமயம் பார்த்து, அந்த நோட்டுப் புத்தகத்தை விஜயகுமார் கேட்க, பயந்து தவித்து நடுங்கியபடி கொடுக்கிறார் மீனா. அந்தக் கடிதத்தைப் பார்த்துவிடுகிறார் விஜயகுமார். ஆனால், அது பார்த்திபனுக்கு எழுதப்பட்ட கடிதம் என்பது விஜயகுமாருக்குத் தெரியாது.

கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். சாதி வெறியின் உச்சத்துக்கே சென்று பூமிக்கும் வானுக்குமாக கூத்தாடுகிறார். வீட்டையே அதகளம் பண்ணுகிறார். அப்போது அங்கே வந்த பார்த்திபனிடம், ‘’நம்ம கண்ணம்மாவோட மனசை எவனோ கலைச்சிருக்கான். அவன் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டு, அவனை வெட்டுடா’’ என்று அரிவாளைத் தூக்கிப் போடுகிறார்.

இப்படியான எல்லாமே உணர்வுரீதியான, வர்க்கரீதியான போராட்டங்கள். ஒவ்வொருவர் மன உணர்வுகளின் கொந்தளிப்புகள். இறுதியில், வேறொரு திருமண ஏற்பாடு. இந்தமுறை விடிந்தால் திருமணம் எனும் நிலையும் வந்துவிடுகிறது. கல்யாணத்துக்கு முந்தைய நாளின் இரவில் கூட, பார்த்திபனிடம் கெஞ்சுகிறார் மீனா. ’’எங்கியாவது போயிடலாம். என்னைக் கூட்டிட்டுப் போ’’ என்று மன்றாடுகிறார்.

ஆனால் விடிவதற்குள்ளாகவே மொத்த ஊரும் விழித்துக்கொள்கிறது. ‘அம்பலம் வீட்டுல சாவு’ என்று விஜயகுமார் வீடு நோக்கி ஊர் மக்கள் ஓடிவருகிறார்கள். அங்கே மீனா இறந்து கிடக்கிறார். கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்.

ஊரே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. மீனாவின் சடலத்துக்குக் கொள்ளி வைக்கிறார் விஜயகுமார். ஊரே திரண்டு நிற்கிறது. எல்லோரும் அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றிருக்க, ’கண்ணம்மா...’ என்று மிகப்பெரிய அலறல் குரல். எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

அப்போது, கத்திக்கொண்டும் அழுதுகொண்டும், ஆவேசத்துடன் எரிந்துகொண்டிருக்கும் சிதையை நோக்கி ஓடுகிறார் பார்த்திபன். அதுவரை மறைத்தும் ஒளித்தும் வைத்திருந்த தன் மொத்தக் காதலையும் ஊருக்கு உணர்த்துகிறார். இன்னும் உணர்ச்சிவசப்பட்டவராக, எரிந்துகொண்டிருக்கும் மீனாவின் சிதையில் விழுந்து எரிந்து சாம்பலாகிறார். சாவில் இருவரும் எரிந்து ஒன்று சேருகிறார்கள்... மரணத்துக்குப் பின்!

தன் வீட்டு வேலையாளும் தலித்துமான பார்த்திபனை நினைத்து உருகிக்கொண்டிருந்த மீனா, தன் மீது மரியாதையும் அன்பும் கொண்டு இதைச் சொல்லாமலேயே பூட்டி வைத்திருந்த பார்த்திபன்... சாதி வெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது அந்த மரணம்.

ப்ளாஷ்பேக் முடிகிறது. ரயில் நிலையம். காத்துக்கொண்டிருக்கிறார் விஜயகுமார். ரயில் வருகிறது. நிற்கிறது. அதில் இருந்து தன் இனத்தைச் சேர்ந்த ராஜாவும், அவர் மனைவியான பார்த்திபனின் தங்கை இந்துவும் குழந்தைகளுடன் வந்து இறங்குகிறார்கள். முன்பு ’ஐயா’ என்று விஜயகுமாரை அழைத்த இந்து, இப்போது ’அப்பா’ என்று அழைக்கிறார்.

படம் முடிகிறது. படம் விட்டு வெளியே வந்த பிறகும் கூட, பாரதி மற்றும் கண்ணம்மாவின் காதலும் காதலுக்குத் தடையாக இருக்கிற சாதி வெறியும், சாதி வெறியால், மரணித்துப் போன காதலர்களும் நம் மனதை என்னவோ செய்துகொண்டே இருந்தார்கள்.

பங்கஜ் புரொடக்‌ஷன்ஸ் ஹென்றியின் தயாரிப்பில் இயக்குநர் சேரன் இயக்கிய படம் இது. சேரனின் முதல் படைப்பு. ஒட்டுமொத்தத் திரையுலகினரும் சினிமா ரசிகர்களும் ’பாரதி கண்ணம்மா’வைப் பார்த்து வியந்தார்கள். நெகிழ்ந்தார்கள். ‘இப்படியொரு படமா?’ என மகிழ்ந்தார்கள். தன் முதல் படைப்பிலேயே உச்சம் தொட்டார் இயக்குநர் சேரன். பார்த்திபனின் பண்பட்ட நடிப்பு அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் நிறுத்தியது. மீனாவின் குரலும் குரல் வழியே உடைந்து வழிகிற காதலும் நம்மைக் கலங்கடித்துவிடும்.

கதையும், திரைக்கதையும் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருந்தன. அந்தக் கதைக்குள் காதலும் சாதியப் பாகுபாடுகளும் எந்தச் சினிமா ஜிகினாக்களும் இல்லாமல் மிக இயல்பாகச் சொல்லப்பட்டிருந்தன. கனமான கதைக்குள் நமக்கான ரிலாக்ஸ் வடிவேலு. பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷன் ஒர்க் அவுட்டான முதல் படமும் இதுதான். ’குண்டக்க மண்டக்க’, ’குத்துமதிப்பு’ என்று வார்த்தைகளில் மடக்கி மடக்கி, காமெடி செய்தது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்போதே வடிவேலுவுக்கு தனிப்பாடலும் இதில் கொடுக்கப்பட்டது.

கிராமத்தின் ரம்மியத்தை, மொத்தமாய் அள்ளியெடுத்து குழைத்துக் கொடுத்திருந்த கிச்சாஸின் ஒளிப்பதிவு கவிதையெனப் பேசப்பட்டது. தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் எல்லாப் பாடல்களுமே ரசிக்கப்பட்டன; முணுமுணுப்புடன் கொண்டாடப்பட்டன.

’’யாரவன்’’ என்று மீனாவை உதைத்துக் கேட்டுக்கொண்டிருக்கும் போது, ’’பாரதியைக் கூப்புடுடா’’ என்பார் விஜயகுமார். உடனே, பார்த்திபன் வந்து நிற்பார். ஆவேசத்துடன் அரிவாளை எடுப்பார் விஜயகுமார். ’விஷயம் தெரிந்துவிட்டதோ’ என்று படம் பார்ப்பவர்களின் லப்டப் எகிறிக்கொண்டே இருக்கும். ‘’யாரோ நம்ம கண்ணம்மா மனசைக் கலைச்சிருக்கான். அவனை வெட்டுடா’’ என்பார்.

ஒருமுறை, பாறை ஒன்றில் பார்த்திபனும் மீனாவும் பேசிக்கொண்டிருக்க, வழக்கம் போல் காதலில் பிடிவாதமாக இருப்பார் மீனா. வழக்கம்போல் மறுத்துக்கொண்டே இருப்பார் பார்த்திபன். அங்கே விஜயகுமார் வருவார். அவர்கள் கலங்கி குறுகிப் போவார்கள். நாம் அடிவயிறு கலங்க, திடுக்கிட்டு பார்த்துக் கொண்டிருப்போம். ’‘கேட்டேன். பேசினதையெல்லாம் கேட்டேன். அவ என் பொண்ணாச்சே. பிடிவாதக்காரி. சொல்லமாட்டா. உனக்கு எம்மேல இருக்கற பாசம் கூட அவளுக்கு இல்லியே பாரதி’’ என்பார். தியேட்டரே அழுதுகொண்டே கரவொலி எழுப்பியது.

’’சாமில கூட பேதம் பாக்கற உலகம் இது. அய்யனார், கருப்பண்ணசாமின்னு கோயிலுக்கு வெளியே, ஊருக்கு வெளியே வைச்சிருக்காங்க’’ என்பன போன்ற வசனங்கள் நறுக் சுருக்கென தைக்கும்படி எழுதியிருந்தார் சேரன்.

இன்றைக்கு சாதி வெறி, ஆணவக்கொலை, ஆணவத்தால் காதல் மரித்தது குறித்தெல்லாம் எத்தனையோ படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் சாதி, சாதி வெறி, ஆணவம், விசுவாசம், அன்பு, மரியாதை, கூடவே காதல் என சகலத்தையும் உணர்த்தியதில், சேரனின் பாரதி கண்ணம்மாவின் காதலுக்கு அடர்த்தி அதிகம். ஆயுசும் அதிகம்! படத்தின் க்ளைமாக்ஸ் எவராலும் யூகிக்கமுடியாததும் ஜீரணிக்க முடியாததுமாக இருந்ததுதான், படம் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்துக்கும் பிரம்மாண்டமான வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

1997-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் நன்னாளில் திரைக்கு வந்தது ’பாரதி கண்ணம்மா’, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பார்த்தவர்கள் அனைவருக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 26 வருடங்களாகிவிட்டன. சேரனின் முதல் படைப்பாக வெளிவந்த ‘பாரதி கண்ணம்மா’ மிகப்பெரிய சேர ராஜ்ஜியத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்குவதற்கு அச்சாரம் போட்டது. விதையென ஊன்றி, வேர்விட்டுப் பரவி, பெருமரமென சேரனின் யதார்த்த திரையுலகம், தனித்த சாம்ராஜ்ஜியமாகவும் உருவாகியிருக்கிறது. அப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் சேரன்.

யதார்த்த சினிமாவை, ஒரு கவிதை அல்லது சிற்பம் போல வடித்தெடுத்த சேரனின் ‘பாரதி கண்ணம்மா’வை எத்தனை முறை பார்த்தாலும் மனசு கனமாகும்; ரணமாகும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in