பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: என்னதான் செய்கிறது அவருக்கு?

பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:  என்னதான் செய்கிறது அவருக்கு?

இயக்குநர் பாரதிராஜா மீண்டும் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவரான இயக்குநரின் பாரதிராஜாவின் திரைப்படங்கள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. கதை, காட்சியமைப்பு, நடிகர், நடிகையர் தேர்வு என பாரதிராஜா எடுத்துக் கொள்ளும் சிரத்தை அவருக்குப் பல்வேறு விருதுகளை அள்ளித்தந்துள்ளது. தற்போது அவருக்கு 81 வயதாகிறது.

நடிகர் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் பாரதிராஜா நடித்திருந்தார். அவரின் நடிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக் குவிந்தது. இந்த நிலையில், ஆக.24-ம் தேதி அவருக்கு திடீர் என உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த ,மருத்துவர்கள், இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி போன்ற பிரச்சினைகள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு தொடர் சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும், அவர் உடல்நலனில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா சேர்க்கப்பட்டார். அங்கு கொடுக்கப்பட்ட உயர்தர சிகிச்சைகள் மூலம் விரைவாகவே பாரதிராஜா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பத்து நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பாரதிராஜா பின்னர், பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை நீலாங்கரையில் உள்ள, தன்னுடைய வீட்டில் பாரதிராஜா ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், இவரை முதல்வர் ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் மீண்டும் இயக்குநர் பாரதிராஜாவிற்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகக் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இயக்குநர் பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in