குருவிக்கரம்பை சண்முகம்
குருவிக்கரம்பை சண்முகம்

பாக்யராஜின் பாட்டுக்காரர்: குயிலெனப் பாட்டுகள் தந்த குருவிக்கரம்பையார்!

- நினைவுநாள் சிறப்புப் பகிர்வு

குருநாதரிடம் தொழில் கற்றாலும் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு, வெற்றிக் கொடி நாட்டியவர்களில் தனித்த ராஜபாட்டை நடத்தியவர் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ். அவரின் கண்டுபிடிப்புகளில், முக்கியமான கவிஞராகத் திகழ்ந்தவர் குருவிக்கரம்பை சண்முகம்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, தன் ஆரம்பகால படங்களில் இளையராஜா, நிவாஸ் என தனக்கென ஒரு வட்டத்தை வைத்துக் கொண்டு ஜாலங்கள் செய்தார். அப்போது கண்ணதாசனையும், கங்கை அமரனையும் பாடல்கள் எழுதவைத்தார். பிறகு இளையராஜா, வைரமுத்து ஜோடி உருவானது. தொடர்ந்து அவர்களையும் ஒளிப்பதிவாளர் பி.கண்ணனையும் பயன்படுத்தினார்.

ஆனால், பாக்யராஜ், பாரதிராஜாவிடம் இருந்து வந்து, முதல் படத்துக்கு கங்கை அமரனை இசையமைக்க வைத்தார். ‘ஒரு கை ஓசை’ படத்துக்கு மெல்லிசை மன்னரிடம் சென்றார். ‘மெளன கீதங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ‘இன்று போய் நாளை வா’, விடியும் வரை காத்திரு’ படங்களுக்கு இளையராஜாவுடன் கைகோத்தார். கண்ணதாசன், கங்கை அமரன், முத்துலிங்கம் என்றெல்லாம் பாடல்கள் எழுதவைத்தவர், ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்கு மீண்டும் மெல்லிசை மன்னரை இசையமைக்கச் செய்தார். இந்தப் படத்தில்தான் குருவிக்கரம்பை சண்முகம் எனும் அற்புதமான பாடலாசிரியரை அறிமுகப்படுத்தினார்.

பேராவூரணிக்கு அருகில் இருக்கிற சிறிய கிராமம்தான் குருவிக்கரம்பை. இப்படியொரு ஊர் இருக்கிறது என்பது, ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவில் பலருக்கும் தெரியாது. அப்படி தன்னையும் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்ட ஊரையும் பிரபலமாக்கியவர் குருவிக்கரம்பை சண்முகம்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் மீதும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மீதும் மிகுந்த பற்றுகொண்டிருந்த சண்முகம், கவிதையில் தனித்துவத்துடன் திகழ்ந்தார். புதுப்புது சிந்தனைகளும் புதுப் புது வார்த்தைகளுமாக பதிப்பக வட்டாரத்தை ஈர்த்தார். படைப்பு உலகில், இவருக்கென வாசகர் வட்டமே உருவானது.

அந்தச் சமயத்தில்தான், குருவிக்கரம்பை சண்முகத்தின் கவிதைகள் பாக்யராஜின் கைகளில் கிடைத்தன. கவிதைகளில் சொக்கிப் போன பாக்யராஜ், உடனே அவரை அழைத்து, ஒவ்வொரு வரிகயையும் சொல்லிப் பாராட்டினார். அத்துடன், ‘’சினிமாவுக்கு பாட்டெழுத விருப்பம் இருக்குங்களா?’’ என்று கேட்டறிந்தார். அவர் சம்மதம் சொன்னதும், அப்போது எடுத்துக் கொண்டிருந்த 'அந்த 7 நாட்கள்’ படத்திலேயே பாடல் எழுத வைத்தார்.

மெட்டுக்குப் பாட்டு என்பது குருவிக்கரம்பை சண்முகத்துக்கு புதிதுதான். ஆனாலும், தமிழின் எல்லா வார்த்தைகளும் தமிழ்த்துறைத் தலைவருக்குள் நர்த்தனமாடியதில், மொழி வளமையுடன் காட்சிக்கும் கதைக்குமான வரிகளைக் கோத்து தன் பாடலை அரங்கேற்றினார். அதுதான்... ‘கவிதை அரங்கேறும் நேரம்’.

'பார்வை உன் பாதம் தேடி/ வரும் பாவை என் ஆசை கோடி/ இனி காமன் பல்லாக்கில் ஏறி/ நாம் கலப்போம் உல்லாச ஊரில்/ உன் அங்கம் தமிழோடு சொந்தம்/ அது என்றும் திகட்டாத சந்தம்’ எனும் வரிகளில் மொத்தத் தமிழ்த் திரையுலக ரசிகர்களுமே கட்டுண்டு போனார்கள்.

இதைத் தொடர்ந்து தன் படங்களில் குருவிக்கரம்பை சண்முகத்துக்கான வாய்ப்புகளை தொடர்ந்தார் பாக்யராஜ். ‘’கவிஞர் குருவிக்கரம்பை சாரோட வரிகள் புதுசா இருக்கும். அதுல புலமையும் இருக்கும். நவீனமும் இருக்கும். முதல் தடவை கேக்கும்போதே, அந்தப் பாட்டைக் கேக்கறவங்களுக்குப் பிடிச்சிப் போயிரும். எனக்கும் அப்படித்தான்’’ என்று இயக்குநர் பாக்யராஜ், குருவிக்கரம்பையின் எழுத்தாளுமை குறித்துப் பாராட்டியுள்ளார்.

அடுத்து ‘டார்லின் டார்லிங் டார்லிங்’ படத்துக்கு சங்கர் - கணேஷ் இசையமைத்தார்கள். இவர்களுடன் பாக்யராஜ் இணைவது இதுவே முதல் முறை. இந்தப் படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள். அதிலொரு பாடலை குருவிக்கரம்பை சண்முகம் எழுதினார்.

‘ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர்மேல் ஆடும் தீபங்கள்’ என்கிற பாடல். சோகமான பாடல். நம் மனதில் தனியிடம் பிடித்து உட்கார்ந்துகொண்ட பாடல்.

‘உள்ளக் கதவை நீ மெல்ல திறந்தால்/ அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்/ எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்/ கொத்தான முல்லை பித்தான என்னை/ எப்பொது முத்தாடுவாள்’ என்ற வரிகளை அப்போது முணுமுணுக்காத காதலர்களே இல்லை. இப்போதும் கூட, அந்தத் தாளமும் தாளத்துக்குக் கட்டுப்பட்டு மயக்கும் வரிகளும் நம்மை என்னவோ செய்யும்.

'தாவணிக் கனவுகள்’ என்ற படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட் அடித்தன. இளையராஜாவின் இசையில் குருவிக்கரம்பை சண்முகம், இசைஞானியின் டியூனுக்குத் தக்கபடி தேன் வார்த்தைகளால் அழகு கூட்டினார். ‘முத்தம் இடும் மாலை/ வேளை/ மூடு விழா நாடகமோ/ நித்தம் இதழ் தேடும்/ நேரம்/ நாணம் எனும் நோய் வருமோ’ என்று வெட்கத்தை நோய்க்கு இணையாகச் சொல்லியிருப்பார்.

‘பூமாலை சூடாது பாய் தேடக் கூடாது’ என்று நாயகி சொல்வாள். ‘எல்லை தனை தாண்டாது பிள்ளை என தாலாட்டு’ என்பான் நாயகன். ’மஞ்சள் தரும் நாள் கூறு வஞ்சம் இல்லை தாள் போடு/ காமன் கணை ஏவல் எனை காவல் மீறத் தூண்டுதே/ செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது’ என்று காதலும் காமமும் குழைத்து, ஒரு சினிமாப் பாடலுக்கு என்ன தேவையோ அதனுடன், தன் தமிழ் விளையாட்டையும் சங்கமித்தார் குருவிக்கரம்பை சண்முகம்.

பாக்யராஜைப் போலவே அவரின் சிஷ்யரான பாண்டியராஜனும் தன் படங்களில் குருவிக்கரம்பை சண்முகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினார். இதன் பின்னர், மற்ற இயக்குநர்களின் படங்களிலும் பாடல்களை தந்து ஹிட்டாக்கினார்.

அதே காலகட்டத்தில், தன் கவிதைப் புத்தகங்களையும் வெளியிட்டுக் கொண்டே இருந்தார் குருவிக்கரம்பை சண்முகம். ’ஒரு குயிலின் குரல்’ புத்தகம் வெகுவாகப் பாராட்டப்பட்டது. ‘செந்நெல் வயல்’, ’விரல் விளக்குகள்’ அனைவராலும் ரசிக்கப்பட்டன. விருதுகளும் கிடைத்தன. ‘கவிதை அரங்கேறும் நேரம்’ எனும் தலைப்பில் வெளியிட்ட நூல், அடுத்தடுத்த பதிப்புக்குச் சென்று, அமோக விற்பனையாகின.

‘’குருவிக்கரம்பை சண்முகம் சாரோட கவிதைகள் எனக்குப் பரிச்சயமாகி இருந்துச்சு. ஆனா, அவர் யார்னு தெரியல எனக்கு. கோயம்புத்தூர்ல ஒரு கவியரங்கம். அதுக்கு என்னை தலைமையேற்க கூப்பிட்டிருந்தாங்க. அதுல குருவிக்கரம்பை சண்முகம் சார், கவிதை வாசிச்சார். பிடிச்சுப் போச்சு. சென்னைக்கு வந்ததும் சந்திச்சோம். ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்கு பாட்டெழுதினார். அதுதான் ‘கவிதை அரங்கேறும் நேரம்’னு செம ஹிட்டாச்சு. எம்.எஸ்.வி. அண்ணன், அப்படியே இவரைக் கட்டிப்புடிச்சிக்கிட்டு பாராட்டினார்’’ என குருவிக்கரம்பை சண்முகம் குறித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கே.பாக்யராஜ்.

தன் கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்பதையே, தன் திரையுலக அறிமுகப் பாடலுக்கும் பயன்படுத்திய திறமையும் உணர்வும்தான் குருவிக்கரம்பையாரின் தனித்துவம்!

பாண்டியராஜனின், ‘கன்னிராசி’யில், சிதம்பரம் ஜெயராமன் போல் மலேசியா வாசுதேவன் பாடியிருக்கும் ‘சுகராகமே சுகபோகமே’ என்ற பாடலும் இவர் எழுதியதுதான். ‘ஆண்பாவம்’ படத்தில் அதே மலேசியா வாசுதேவன், அட்டகாசமாகப் பாடிய ‘குயிலே குயிலே பூங்குயிலே’ என்று இன்றைக்கும் ஹிட் வரிசையில் இருக்கிற அழகான காதல் பாட்டுக்குச் சொந்தக்காரரும் குருவிக்கரம்பையார்தான்!

எல்லோருக்கும் வருவது போல், படம் தயாரிக்கும் ஆசை, குருவிக்கரம்பை சண்முகத்துக்கும் வந்தது. பாண்டியராஜனையும் யுவராணியையும் வைத்து, கதை, வசனமெல்லாம் எழுதி, ‘மாப்பிள்ளை மனசு பூப்போல’ என்ற படத்தைத் தயாரித்தார். படத்தின் படுதோல்வியை, ஏகப்பட்ட நஷ்டத்தை, பூ மாதிரி மனம் கொண்ட குருவிக்கரம்பையாரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அன்றைக்கு அந்தத் தவறைச் செய்யாமல் இருந்திருந்தால், 2006-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி குருவிக்கரம்பை சண்முகம், மறைந்திருக்கமாட்டார். இன்னும் சந்த லயமும் தாள லயமும் தமிழ் நயமும் குழைத்து எண்ணற்ற பாடல்களைக் கொடுத்திருப்பார்.

‘ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை’ என்கிற வரிகளை எழுதியவருக்கு நேர்ந்த சோகமே, நம்மிடம் இருந்து அவரைப் பிரித்துக்கொண்டு சென்றுவிட்டது.

குருவிக்கரம்பையாரின் நினைவைப் போற்றுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in