ஆணாதிக்க கணவனைப் பிரதிபலிக்க கூடிய அந்த கதாபாத்திரம் நடிகர் தனுஷூற்காக எழுதப்பட்டது தான்!: மனம் திறந்த பகத் பாசில்

ஆணாதிக்க கணவனைப் பிரதிபலிக்க கூடிய அந்த கதாபாத்திரம் நடிகர் தனுஷூற்காக எழுதப்பட்டது தான்!: மனம் திறந்த பகத் பாசில்

நடிகர் பகத் பாசிலின் பிரபலமான கதாபாத்திரம் முதலில் நடிகர் தனுஷை மனதில் வைத்து தான் எழுதப்பட்டது என பகத் பாசில் தெரிவித்து இருக்கிறார்.

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுக இயக்குநர் மது சி நாராயணன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கும்பளங்கி நைட்ஸ்’. இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் ஷாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அன்னாபென், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொதுச்சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான ஆணாதிக்க கணவனைப் பிரதிபலிக்க கூடிய கதாபாத்திரம் தான் ஷாமி. கிட்டத்தட்ட எதிர்மறை கதாபாத்திரமாக இந்த படத்தில் பகத் சித்திரிக்கப்பட்டு இருப்பார். இந்த நிலையில், சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார் பகத்.

அந்த பேட்டியில் தன்னுடைய ஷாமி கதாபாத்திரம் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், ‘’ 'கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் ஷாமி கதாபாத்திரம் நடிகர் தனுஷை மனதில் வைத்து தான் எழுதினோம். அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அவரது பட்ஜெட் மற்றும் தேதி பிரச்சினைகள் காரணமாக அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. ஏனெனில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நான் என்பதால் என்னுடைய பட்ஜெட் குறித்தும் யோசிக்க வேண்டி இருந்தது" என அந்த பேட்டியில் கூறியுள்ளார் பகத் பாசில்.

மேலும், கடந்த ஆண்டு இறுதியில் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பலர் நடித்து வெற்றி பெற்ற படம் ‘புஷ்பா’. படத்தின் இரண்டாம் பாகமும் இந்த ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், இரண்டு பாகங்கள் மட்டுமல்லாது மூன்றாம் பாகமும் இருக்கிறது என பகத் தெரிவித்துள்ளார். இயக்குநர் சுகுமார் தன்னிடம் கதை சொல்லும் போது இரண்டு பாகங்கள் மட்டுமல்லாது, மூன்றாம் பாகத்திற்கும் சேர்த்தே கதை சொன்னார் எனவும், அதனால் மூன்றாம் பாகம் நிச்சயம் இருக்கிறது எனவும் பகத் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in