
கரூர் மாநகரத்தில் நாளை `பீஸ்ட்' படம் வெளியாகாது என்ற செய்திகளால் விஜய் ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் எட்டு திரையரங்குகள் உள்ளன. இவற்றில் கரூர்சினிமாஸ் உள்ளிட்ட 3 திரையரங்குகளில் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' திரைப்படம் நாளை வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இத்திரைப்படம் மாநகர பகுதியில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படாது என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இன்றுவரை ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத காரணத்தால் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இப்படம் நாளை திரையிடப்படாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
மாநகர பகுதிகளில் வெளியாகவில்லை என்றாலும் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் அங்குள்ள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.