ஃபீஸ்ட் அல்ல... பிரட் டோஸ்ட்!

பீஸ்ட் திரை விமர்சனம்
ஃபீஸ்ட் அல்ல... பிரட் டோஸ்ட்!

ஒரு ஷாப்பிங் மாலைக் கைப்பற்றிவிட்ட தீவிரவாதிகளை அழித்து பொதுமக்களைக் காக்க ஒற்றை வீரன் நிகழ்த்தும் சாகசங்களின் தொகுப்புதான் ‘பீஸ்ட்’.

இந்தியா உள்பட பல நாடுகளின் தீவிரவாத தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்ட ஐஎஸ்எஸ் தீவிரவாத குழுவின் தலைவன் உமர் ஃபாரூக். அவனைக் கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார் ரா உளவுப் பிரிவு அதிகாரியும், போர் விமானியுமான வீரராகவன் (விஜய்). இந்த நடவடிக்கையின்போது நிகழும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் ஒரு சிறுமி இறந்துவிட, அதனால் பணியிலிருந்து விலகி மன அழுத்தத்துக்கான மருத்துவ சிகிச்சை பெறுகிறார் வீரராகவன். அந்த மருத்துவருடன் செல்லும் ஒரு திருமண வரவேற்பில் அர்ச்சனாவை (பூஜா ஹெக்டே) சந்திக்கிறார். இருவரும் முதல் சந்திப்பிலேயே காதலர்களாகிறார்கள்.

அர்ச்சனா பணியாற்றும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வீரராகவனும் இணைகிறார். அந்தப் பணி நிமித்தமாக ஒரு ஷாப்பிங் மாலுக்குச் சென்றிருக்கும்போது அந்த மால் தீவிரவாதிகளால் கைப்பற்றப்படுகிறது (‘ஹைஜாக்’). தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாலில் மத்திய உள்துறை அமைச்சரின் மனைவி, மகள் உட்பட நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சிக்கிக்கொள்கிறார்கள். மாலில் சிக்கியவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் உமர் ஃபாரூக்கை விடுவித்து தங்களுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு கெடு விதிக்கிறது தீவிரவாதிகள் குழு.

இந்த தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் உளவுத்துறை அதிகாரியான அல்தாஃப் ஹுசைன் (செல்வராகவன்) அங்கு எதிர்பாராதவிதமாக சிக்கிவிட்ட தனது முன்னாள் சகாவான வீரராகவனை வைத்து தீவிரவாதிகளின் திட்டத்தை தகர்க்க முயற்சிக்கிறார். தொடக்கத்தில் தயங்கினாலும் உமர் ஃபாருக்கை விடுவிப்பதால் விளையக்கூடிய பேரழிவுகளை உணர்ந்து வீரராகவனும் மக்களையும் அரசின் நற்பெயரையும் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்கிறார். மாலுக்குள் இருந்தபடியே தீவிரவாதிகளின் கண்களில் சிக்காமல் அவர்களின் திட்டத்தை வீரராகவன் எப்படி முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

விஜய் போன்ற ஒரு மிகப் பெரிய நட்சத்திர நடிகர் நடிக்கும் படம் என்னும்போதே மனித சாத்தியத்துக்கு அப்பாற்பட்ட சாகசங்களை ஏற்றுக்கொள்ள ஓரளவுக்கு மனம் தயாராகிவிடுகிறது. அதுவும் அவர் பல நாடுகளுக்கு ஒற்றை ஆளாக போர் விமானத்தை ஓட்டிச் சென்று எதிரிகளை வீழ்த்திவிட்டு வந்த மிகப் பெரிய போர் வீரர் என்று கூறப்பட்டுவிடுகிறது. எனவே, சர்வதேச உயர்ரக துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் ஒற்றை ஆளாகக் கையாள்வது, ஒரு மனிதனை மூட்டைப் போல் கட்டி ஒற்றைக் கையால் கீழ்நோக்கிப் பிடித்தபடி தூக்கிக்கொண்டே நடந்துவருவது உள்பட அவர் செய்யும் பல விஷயங்கள் திரைக்கதையின் தர்க்கத்துக்கு பொருத்தமாகவே இருக்கின்றன.

ஆனால், இந்த மனரீதியான தயாரிப்பையும் தாண்டி படத்தின் லாஜிக் மீறல்கள் தொந்தரவு தருகின்றன. குறிப்பாக, வெடிகுண்டு வைத்து தரையைத் தகர்ப்பது, அவர் ஓட்டிச் செல்லும் கார் காற்றில் பறப்பது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாத தலைவனை ஒற்றை ஆளாக நாயகன் மீட்டுவருவது, இந்திய விமானப்படை போர்வீரர் அபினந்தன் வர்த்தமானன் பாகிஸ்தானுக்கு ஒற்றை ஆளாக விமானத்தை ஓட்டிச் சென்று மீண்டுவந்த நிகழ்வை அப்படியே எடுத்தாண்டிருக்கும் க்ளைமேக்ஸ் உள்ளிட்ட காட்சிகள் காதில் பூக்கூடையைத் தொங்கவிட்டது போன்ற உணர்வைத் தருகின்றன.

படத்தில் வில்லன் தரப்பாக காண்பிக்கப்படும் சர்வதேச தீவிரவாதிகள் சோப்ளாங்கிகளாக இருக்கிறார்கள். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாலுக்குள் இருந்தபடியே நாயகன் தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக்கொண்டிருக்கும் போதிலும், அவர்கள் ஒரு முதிய பெண்மணியை சுட்டுக் கொல்வதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. அதோடு நாயகன், தான் வங்கதேசத்தைச் சேர்ந்த போராளி என்று தமிழில் சொல்வதைக்கூட எந்தக் கேள்வியும் இன்றி நம்பிவிடுகிறார்கள். தீவிரவாதிகள் இவ்வளவு அப்பாவிகளாக இருந்துவிட்டால் உலகமே அமைதிப் பூங்கா ஆகிவிடும்.

இந்தக் குறைகளை எல்லாம் தாண்டி, மாலுக்குள் இருந்தபடி தீவிரவாதிகளுடன் நாயகன் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் திரையில் விரியும் விதத்தில் இருக்கும் சுவாரசியம், அங்காங்கே வெளிப்படும் நகைச்சுவை, குழந்தைகள் மீது நாயகனுக்கு இருக்கும் அன்பினால் அவனுக்கு ஏற்படும் புதிய சிக்கல்கள் ஆகியவை படத்தை அலுப்பின்றி கடத்த உதவுகின்றன.

இந்தப் படம் முழுக்க முழுக்க விஜய்யையும், அவருடைய நட்சத்திர மதிப்பையும் நம்பியே எடுக்கப்பட்டுள்ளது. அதை மறைக்கும் பாவனைகளைக்கூட நெல்சன் வெளிப்படுத்தவில்லை. கதைக்குள் வீரராகவன் கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தோள்களில் சுமக்கும் ஒன்மேன் ஆர்மியாகவே செயல்பட்டிருக்கிறார் விஜய். அதற்கு அவருடைய கட்டுக்கோப்பான உடல்வாகும், கச்சிதமான உடல்மொழியும் அபாரமாக துணைபுரிந்திருக்கின்றன.

‘தளபதி’ ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்கான பஞ்ச் வசனங்கள் அளவாக வைக்கப்பட்டுள்ளன. அதிகம் பேசாத, அலட்டிக்கொள்ளாத, கண்ணும் கருத்துமாக இருந்து காரியம் சாதிக்கும் ஆளுமையாக விஜய்யை முழுமையாக ரசிக்க முடிகிறது நாயகியாக பூஜா ஹெக்டேவுக்கு நாயகனைக் காதலிப்பதையும் பாடல்களில் அவருடன் நடனமாடுவதைத் தாண்டி ஒரு சில காட்சிகளில் மட்டும் சற்றே நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. படத்தில் உள்ள நகைச்சுவைக் பட்டாளத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளராக விடிவி கணேஷும், அர்ச்சனாவுக்கு காதல் டார்ச்சர் கொடுக்கும் வாலிபராக சதீஷும் அதிகமாக சிரிக்க வைத்திருக்கிறார்கள். யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ்லி, சுனில் ரெட்டி, சிவா அரவிந்த் என ‘டாக்டர்’ படத்திலிருந்து அப்படியே இறக்குமதி செய்யப்பட்ட நகைச்சுவைப் பட்டாளம் ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது.

நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன் தனது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பைச் சரியாகத் தந்திருக்கிறார். மற்றபடி அவருடைய கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக்குவதற்கு அவரிடமே கொஞ்சம் ஆலோசனை கேட்டிருக்கலாம் நெல்சன். பிரதான வில்லனாக உருவெடுத்திருக்க வேண்டிய உள்துறை அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாஜியும் எதையும் ஊகிக்கக்கூட தேவையில்லாத ஒற்றைத்தன்மை மிக்க கதாபாத்திர வார்ப்பில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறார்.

’ஹலமதி’, ‘ஜாலிலோ ஜிம்கானா’ என ஏற்கெனவே வெற்றிபெற்றுவிட்ட இரண்டு பாடல்களும் திரையிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. பின்னணி இசையில் விஜய்க்கு பில்டப் ஏற்றும் வேலையை மட்டும் சரியாகச் செய்திருக்கிறார் அனிருத். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு ஆகியவை இயக்குநரின் நோக்கங்களுக்கும் திரைக்கதையின் தேவைக்கும் சரியாகத் துணைபுரிந்திருக்கின்றன. அன்பறிவ் இரட்டையரின் சண்டைக் காட்சிகள் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விருந்து.

இயக்குநர் நெல்சன் இதற்கு முன் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் சாதாரண மனிதர்கள் அசாதாரணமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளும்போது அதிலிருந்து மீள அவர்கள் தீட்டும் திட்டங்கள், அவற்றில் நேரும் சொதப்பல்கள் அவற்றைத் தாண்டி அவர்கள் பிரச்சினைகளிலிருந்து மீளும் நாயகர்களாக பேர்கொள்ளும்போது எதிர்தரப்புக்கு கிடைக்கும் அதிர்ச்சி வைத்தியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சூழ்நிலைசார்ந்த நகைச்சுவையை அள்ளிக் கொடுத்தன. அதுபோல இந்தப் படத்திலும் நகைச்சுவை, மாஸ் காட்சிகள் ஆகிய இரண்டு ஏரியாக்களிலும் பட்டையைக் கிளப்பும் படையலை எதிர்பார்த்து திரையரங்குக்குப் படையெடுத்தார்கள் ரசிகர்கள். ஆனால் வலுவற்ற வில்லன்கள், அளவுகடந்த லாஜிக் மீறல்கள் ஆகியவற்றால் ஃபீஸ்டாக இருந்திருக்க வேண்டிய ’பீஸ்ட்’ அளவாகப் பசியாற்றும் பிரட் டோஸ்ட்டாக சுருங்கிவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in