இந்தக் காலத்துக்கும் ஏற்ற ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாட்டு!

56-ம் ஆண்டில் ‘பாமா விஜயம்’
பாமா விஜயம் படத்தில்...
பாமா விஜயம் படத்தில்...

ஜிகினாக்கள் உலகம் என்று சொல்லப்படும் திரைப்படத் துறையில் உள்ள முக்கியமான நடிகை, பக்கத்து வீட்டுக்குக் குடிவந்தால், அடுத்த வீட்டுப்பெண்கள் எப்படி பரபரப்பார்கள்? அவர்களின் கணவன்மார்கள் எப்படி படபடப்பார்கள்? அந்த வீட்டுப் பெரியவர், எப்படியான சிந்தனையில் இருப்பார்? இப்படியான விஷயத்தை வைத்துக் கொண்டு, சினிமா மோகத்தையும் சினிமாக் கலைஞர்களின் மீதும் ஆடம்பரங்களின் மீதும் ஆசை கொண்டு அவதிப்படுகிற குடும்பங்களின் துன்பியல் சம்பவங்களை, இனிக்க இனிக்க காமெடியாகச் சொன்னதுதான் ‘பாமா விஜயம்.’

ஓய்வுபெற்ற பள்ளி தலைமை எத்திராஜுக்கு மூன்று மகன்கள். மூவருமே திருமணமானவர்கள். அந்த வீட்டில் பிள்ளைகளுக்கும் பஞ்சமில்லை. மகேஸ்வரன் - பார்வதி, ராமன் - சீதா, கிருஷ்ணன் - ருக்மிணி. இவர்கள் மட்டுமின்றி, இரண்டாவது மருமகளான சீதாவின் தங்கை சுமதியும் அந்த வீட்டில் இருந்து படிக்கிறாள்.

மகேஸ்வரன் - பார்வதி, மேஜர் சுந்தர்ராஜன் - செளகார் ஜானகி. ராமன் - சீதா, முத்துராமன் - காஞ்சனா. கிருஷ்ணன் - ருக்மிணி, நாகேஷ் - ஜெயந்தி. பெரியவர் எத்திராஜ், டி.எஸ்.பாலையா. காஞ்சனாவின் தங்கை சச்சு. மேஜர், கல்லூரியில் இந்தி பண்டிட். முத்துராமன், உயர் நீதிமன்றத்தில் கிளார்க். நாகேஷ், மருந்து விற்பனைப் பிரதிநிதி.

முதல் தேதியானால், சம்பளப் பணத்தை அப்பாவிடம் தருகிற சமர்த்துப் பிள்ளைகள்தான். அதை ஆமோதித்து வரவேற்கிற கெட்டிக்கார மருமகள்கள்தான். மூன்று குடும்பங்களையும் பள்ளியைப் போலவே செக்‌ஷன் செக்‌ஷனாகப் பிரித்து, தனிச் சமையல் வைத்து, முறையும் வைத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டில் சாப்பிடுகிறார் பெரியவர்.

இப்படி, கலகலப்பும், கண்டிப்புமாக, அப்பாவுக்குக் கட்டுப்பட்டு, அழகாக வாழ்ந்துகொண்டிருக்கிறது அந்த வீடு. ஒருநாள்... இவர்களின் பக்கத்துவீடு பரபரப்பாகிறது. புதிதாக யாரோ பெரும்புள்ளி குடிவருவது தெரிகிறது. பார்த்தால்... பிரபல நடிகை பாமா பக்கத்துவீட்டுக்கு குடியமர்கிறார்.

அவ்வளவுதான்... வீட்டு மொட்டைமாடியில் இருந்தபடியே மருமகள்கள் எல்லோரும் பாமாவிடம் பேச, நட்பு உருவாகிறது. அந்த நடிகை பாமாதான், ராஜஸ்ரீ. நட்புக்கு அடையாளமாக வீட்டுக்கு அழைக்க, ராஜஸ்ரீயும் வருவதாகச் சம்மதிக்கிறார்.

அவர் சம்மதித்ததில் இருந்து தொடங்குகிறது, வீட்டுக்குள் அதகளம். வீட்டுக்கு சோபா, பெயிண்டிங் ஒர்க், நல்ல புடவை, இரவல் நெக்லஸ் என்று ஆளாளுக்கு வீட்டையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில்தான் மூன்று மருமகள்களுக்கு நடுவே போட்டியும் பொறாமையும் ஏற்படுகிறது. இங்கிலீஷ் வார்த்தையிலும் இரண்டே குழந்தைகள் என்று சொல்லியும் மாட்டிக்கொள்கிறார் செளகார். கண்ணாடி இல்லாமல் எதுவும் தெரியாது என்பதால் அசடு வழிகிறார் காஞ்சனா. பாமா வந்த களேபரத்தில், கைகால் தெரியாமல் லூசுத்தனம் பண்ணி பேந்தப் பேந்த முழிக்கிறார் ஜெயந்தி. இதிலொரு சுவாரஸ்யம்... செளகார் இரவலாக வாங்கிய நெக்லஸ், ஒவ்வொருவர் கழுத்துக்கும் தடக்தடக்கென பயணிக்கிறது.

மருந்து விற்பனைப் பிரதிநிதி நாகேஷ், எப்படியாவது ராஜஸ்ரீயை தலைவலி மாத்திரைக்கு மாடலாக்கி பேரெடுக்க நினைக்கிறார். ராஜஸ்ரீயின் மேனேஜர் சுரேஷ், ஒவ்வொரு முறையும் முட்டுக்கட்டை போடுகிறார். சுரேஷாக ஸ்ரீகாந்த். வார்த்தைக்கு வார்த்தை, “எனக்கு நோ மதர், நோ சிஸ்டர், நோ வைஃப்” என்று சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பார். முத்துராமனுக்கு, நடிப்பதில் விருப்பம்.

’பாமா விஜயம்’ படத்தில்...
’பாமா விஜயம்’ படத்தில்...

எனவே, நடிக்க சான்ஸ் கேட்டு, ராஜஸ்ரீ வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். மேஜர் சுந்தர்ராஜன், இந்தி பண்டிட் என்பதால், அவரிடம் இந்தி கற்றுக்கொடுக்கக் கேட்பார் ராஜஸ்ரீ. ‘’இந்தி கத்துக்கொடுக்க போகும் போதுதான், எம் மனைவி பார்வதியை நான் லவ் பண்ணினேன். அதனால எம் மேல அவளுக்கு நம்பிக்கையே இல்ல. எந்தப் பொண்ணுக்கும் இந்தி கத்துக்கொடுக்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டா’’ என்று சொல்லும் மேஜர், யாருக்கும் தெரியாமல், கற்றுக் கொடுப்பார்.

இப்படியான களேபரங்கள் நடக்க, “நோ மதர், நோ சிஸ்டர், நோ வைஃப்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த், சச்சுவை விரும்புவார். சச்சுவும்தான். ஆடம்பரத்துக்காக, படப்பிடிப்பைப் பார்க்கச் செல்வதற்காக, டெலிபோன் பில்லுக்காக, வாடகை சோபாவுக்காக, வெள்ளிப்பாத்திர பண்டங்களெல்லாம் அடகுக்கு வைப்பார்கள். வேலையாளிடம் அவற்றை மடக்கி, தான் பத்திரமாக வைத்துக்கொண்டு, பணம் கொடுப்பார் பாலையா. முன்பெல்லாம், சம்பளப் பணத்தை அப்படியே தருகிற சகோதரர்கள், இப்போது வட்டி, செலவு, தவணை என்று செலவழித்துவிட, மகன்களின் நிலை கண்டு கலங்குவார் பாலையா.

இந்த சமயத்தில், பக்கத்து வீட்டு பாமாவுடன் உங்கள் வீட்டு ஆணுக்கு தொடர்பு, காதல் என்று மொட்டைக்கடுதாசி. மூன்று மருமகளுக்கும் வந்திருக்கும். அப்படி பாமாவுடன் தொடர்பில் இருப்பவர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்க, வீட்டுக்கு வந்த திருடன், நெக்லஸை எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குச் செல்வான். அங்கே பாமாவைப் பார்த்ததும் பரவசமாவான். ‘’நான் உங்க ரசிகன்’’ என்று சொல்லி, நெக்லஸைப் பரிசளிப்பான். அருமையான பேனாவும் ராஜஸ்ரீயின் கைக்கு வந்துசேரும். நாகேஷின் மருந்துப்பையில் பெண்ணின் செருப்பு இருக்கும். மேஜரின் சட்டையில் சிவப்பு மையால், லிப்ஸ்டிக் போல் உதடுச் சின்னம் பொறித்து மாட்டிக்கொள்ளச் செய்வார் நாகேஷ்.

நாகேஷின் கோட் பைக்குள் கண்ணாடி வளையல்களைப் போட்டு அவரை ஜெயந்தியிடம் மாட்டவைப்பார்கள். இப்படியாக, களேபரங்களும், பாமாவிடம் தொடர்பில் இருப்பவர் யார் என்பது குறித்த கேள்விகளும் நீண்டுகொண்டே இருக்க... இறுதியில் பாமா விஜயம் என்னென்ன களேபரங்களைக் கொடுத்தது? மருமகள்கள் திருந்தினார்களா? மகன்கள் பழைய நிலைக்கு வந்தார்களா? அந்த மொட்டைக்கடுதாசி போட்டவர் யார்? என்பதற்கெல்லாம் சிரிக்கச் சிரிக்க விடைகளைச் சொன்னார் ‘பாமா விஜயம்’ மூலமாக... கே.பாலசந்தர்!

படத்தில் செளகார் ஜானகி முதலிடம் பிடித்திருப்பார். அடுத்து நாகேஷின் ராஜாங்கம். ராஜஸ்ரீயின் பண்பட்ட நடிப்பும், கண்ணியம் மிக்க கதாபாத்திரமும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும். மூக்குக்கண்ணாடியை சரிசெய்துகொண்டு, தோள் குலுக்கிக் கொண்டு, ஸ்ரீகாந்த் செய்யும் மேனரிஸமும் “எனக்கு நோ மதர், நோ சிஸ்டர், நோ் வைஃப்” என்று அடிக்கடி கழிவிரக்கத்துடன் சொல்லும் தொனியாகட்டும், அவரை “சுரேஷா... சுரேஷா...” என்று நாகேஷ் அழைக்கிற ஸ்டைலாகட்டும்... காட்சிகள் ஒவ்வொன்றுமே நகைச்சுவை கலந்த திரைக்கதையும் வசனங்களுமாக பிணைக்கப்பட்டிருக்கும்.

’பாமா விஜயம்’ விளம்பரம்
’பாமா விஜயம்’ விளம்பரம்

நாகேஷுக்கு ஜோடியாக ஜெயந்தியும் காமெடியில் அமர்க்களப்படுத்தியிருப்பார். ராஜஸ்ரீ, அவர்களின் போர்ஷனுக்கு வந்திருக்கும்போது, “ஏதோ ஒரு படம்... நல்லா நடிச்சிருந்தீங்க. ஒரேயொரு படம்... படம் முடிஞ்சதும் எல்லாரும் சந்தோஷமா வெளியே வருவாங்க” என்று நாகேஷ், நக்கலைக் கூட உணர்ச்சிபூர்வமாகச் சொல்வதாகட்டும், ஜெயந்தியின் சமாளிப்புகளாட்டும்... தூள் கிளப்புவார்கள். வைர, வைடூரிய, தங்க நகைகள்தான் பெரிது என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, மிகப்பெரிய நடிகையான பாமா கதாபாத்திரம், கண்ணாடி வளையல்கள்தான் பிடிக்கும் என்று சொல்வதிலேயே, அவரின் கேரக்டரை நமக்கு உணர்த்திவிடுவார் கே.பாலசந்தர்.

மூக்குக்கண்ணாடி இல்லாமல் எதிரில் இருப்பது மங்கலாகத் தெரிகிற கதாபாத்திரத்தில் காஞ்சனாவும் அவரின் ஜோடியாக முத்துராமனும் கலகலக்க வைத்திருப்பார்கள். ஷேவ் பண்ணிக்கொண்டிருக்கும் முத்துராமனை வெடுக்கெனத் திருப்ப, பாதி மீசை இல்லாமல் முத்துராமன் இருக்க, அது கூட தெரியாமல் காஞ்சனா பேச, நாம்தான் வாயை ஒரு கையிலும் வயிற்றை மறு கையிலும் பிடித்துக் கொண்டு சிரித்தோம். மேஜர், கெத்துக் காட்டியே காமெடி பண்ணியிருப்பார். பாலையா தன் சிறந்த நடிப்பால், வெகு அழகாகச் செய்திருப்பார்.

ஸ்ரீகாந்த் - சச்சுவின் காதலும் சுவையாக கையாளப்பட்டிருக்கும். சச்சு இதில் காமெடியே செய்திருக்கமாட்டார். ஆனால் செளகார், நாகேஷ், முத்துராமன், காஞ்சனா, ஜெயந்தி, ஸ்ரீகாந்த் முதலானோரின் காமெடிகளே ‘பாமா விஜயம்’ முழுமையான நகைச்சுவைப்படம் என்பதைப் பறைசாற்றும் வகையில் இருந்தது.

’பாமா விஜயம்’ டைட்டில்
’பாமா விஜயம்’ டைட்டில்

கவியரசு கண்ணதாசன் எல்லாப் பாடல்களையும் எழுதினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். படத்தின் கதையைச் சொல்லும் பாடலாகவும் ஹைலைட் பாடலாகவும் அமைந்தது ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்கிற பாடல், இந்தப் பாடலில் வரும் அனைத்து வரிகளுமே எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான கல்வெட்டு வரிகள்! அதனால் தான் இந்தப் பாடல் இன்றைக்கும் மிகப்பெரிய ஹிட் வரிசைப் பாடலாக, தத்துவப் பாடலாக, காமெடிப் பாடலாக, குடும்பம் காக்கும் பாடலாக அமைந்திருக்கிறது.

’பாமா விஜயம்’ டைட்டில்
’பாமா விஜயம்’ டைட்டில்

1967-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வெளியானது ‘பாமா விஜயம்’. தெலுங்கிற்குத் தகுந்தது போல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ’பலே கொடல்லு’ என ரீமேக்கும் செய்யப்பட்டது. இந்தியில், ‘டீன் பஹுரானியன்’ என்றும் மலையாளத்தில் பல வருடங்கள் கழித்து, ‘ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நட்சத்திர திலகம்’ என்றும் ரீமேக் செய்யப்பட்டு, அங்கெல்லாமும் வெற்றிபெற்றது பாமா விஜயம்.

இந்தப் படம் வெளியாகி, 56 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் ஏதோவொரு சோகத்தில், இனம் புரியாத துக்கத்தில், நம் வீட்டு ஹாலின் தொலைக்காட்சியில் பாமா விஜயமாகிவிட்டால், நம் சோகமெல்லாம் காணாமல் போய்விடும். நம் வீட்டில் சிரிப்புக்குப் பஞ்சமே இருக்காது.

கண்ணாடி வளையல்களைப் போல், கலகலவென சிரிப்புச் சத்தமும் கே.பாலசந்தரின் நகைச்சுவை தோய்ந்த வசனங்களும் நம்மைக் குதூகலமாக்கிவிடும். அணாக்களெல்லாம் போய், ஜி.பே.யும், பே.டி.எம்.மும் வந்துவிட்ட இந்தக் காலத்திலும்... ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடலும் கேலியும் அர்த்தங்களும் எல்லோருக்கும் புரிந்து சிரித்துக்கொண்டுதான் இருக்கிறோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in