பாலு மகேந்திரா பறக்கவிட்ட ‘ரெட்டைவால் குருவி’க்கு வயது 36!

பாலுமகேந்திரா
பாலுமகேந்திரா

ஒரு பக்கம் முறையாகத் திருமணம் செய்துகொண்ட மனைவி, இன்னொரு பக்கம் எவருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக திருமணம் செய்துகொண்டு பொய்க்கு மேல் பொய்யாகச் சொல்லி, வாலுத்தனம் செய்யும் இளைஞனின் சேட்டைகளை, குறும்பும் காமெடியுமாக, ரசனையும் ரகளையுமாகச் சொன்னதுதான் ‘ரெட்டைவால் குருவி’.

பொதுவாகவே, காமெடிப் படங்களென்றால், உடல்மொழியால் நம்மைச் சிரிக்கவைப்பார்கள். வசனங்களால் கலகலக்க வைப்பார்கள். ஆனால், காட்சிகளாலேயே காமெடி பண்ணுவது என்பதும் நம்மைச் சிரிக்கவைப்பது என்பதும் லேசுப்பட்ட காரியமல்ல. அப்படி, காட்சிகள் மூலமே காமெடி செய்து இயக்குநர் பாலு மகேந்திரா நமக்காகப் பறக்கவிட்ட படம் தான் ‘ரெட்டைவால் குருவி’.

டிவி ஸ்டேஷனில் வேலை செய்பவர் மோகன். அவரின் மனைவி அர்ச்சனா. தன் பெரியப்பா கம்பெனியில் வேலை செய்வார் அவர். குழந்தைகள் என்றாலே கொள்ளைப்பிரியம் கொண்ட மோகன், ‘குழந்தைக்கு’ ஏங்குவார். கெஞ்சுவார். “இன்னும் ரெண்டு வருஷமாகட்டும்’’ என்பார் அர்ச்சனா. இந்தநிலையில், பெரியப்பா, வேலூரில் கிளைநிறுவனத்தைத் தொடங்கி, அதற்கு முக்கியப் பொறுப்பாளராக பதவி உயர்வும் சம்பள உயர்வும் கொடுத்து அர்ச்சனாவை அனுப்பிவைப்பார். வேலூரில் வேலைக்குச் சேரும் அர்ச்சனா, சனிக்கிழமை மதியத்துக்கு மேல் புறப்பட்டு, சென்னைக்கு வந்துவிட்டு, திங்கட்கிழமை காலையில் வேலூருக்குக் கிளம்பிச் செல்வார்.

இப்படியிருக்க, மேடைப்பாடகி ராதிகாவை பேட்டி எடுப்பார் மோகன். அவர்களுக்குள் நட்பு மலரும். ஒருகட்டத்தில் அந்த நட்பு, நெருக்கத்தைக் கொடுக்கும். தனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, ராதிகாவின் காதலில் உருகுவார் மோகன். ஒருகட்டத்தில் கல்யாணத்துக்கு முன்னமே கர்ப்பமாவார் ராதிகா. அவரின் அப்பாவோ, குஸ்தி பயில்வான். மாமிச மலை. பார்த்ததும் கிடுகிடுத்துப் போவார் மோகன். இதேபோல், அதுவரை குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த அர்ச்சனாவும் கர்ப்பமாவார். வேறுவழியில்லாமல், இங்கேயும் அங்கேயுமாக ‘ரெண்டு பொண்டாட்டிக்கார’ அவஸ்தைகளை சமாளித்துக் கொண்டிருப்பார் மோகன்.

மோகன் - ராதிகா திருமணமும் நடக்கும். இரண்டு மனைவிகளும் கர்ப்பம். இருவரும் ஒரே மருத்துவமனையில் செக்கப் செய்துகொண்டு, ட்ரீட்மென்ட் எடுப்பார்கள். ஆனால் என்ன... டாக்டர்கள் தான் வேறுவேறு. ராதிகாவின் டாக்டர், இயற்கை முறையிலேயே பிரசவம் நடத்தலாம் என்றும் அதற்கு சில பயிற்சிகள் செய்கிறேன் என்றும் சொல்லுவார். அர்ச்சனாவுக்கோ, ஆபரேஷன் செய்துதான் குழந்தையை எடுக்கும்படியாக இருக்கும் என அவரின் மருத்துவர் சொல்லுவார்.

டிவி ஸ்டேஷனில், மோகனுக்கு மேலதிகாரியாக இருக்கும் வி.கே.ராமசாமி, திருமணமே ஆகாதவர். ’மன்மதலீலை’யில் தனக்குக் கீழ் உள்ள பணியாளிடம், கமல் தன் அந்தரங்க விஷயங்களையெல்லாம் சொல்வது போல, மோகன், தன் ‘ரெண்டு பொண்டாட்டி’ விஷயத்தை, மேலதிகாரி வி.கே.ராமசாமியிடம் சொல்லி, ஆறுதல் பட்டுக்கொள்வார். அட்வைஸ் கேட்டு நடப்பார். தன் ஐடியாக்கள் சரியா என ஒப்புதல் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

அர்ச்சனாவுக்கும் ராதிகாவுக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி வர, இருவரும் அதே ஆஸ்பத்திரியில் சேர, இந்த அறைக்கும் அந்த அறைக்குமாக அலையோஅலையென திரிந்து, நாடகமாடி, ஒருகட்டத்தில் இரண்டு மனைவியருக்குமே மோகனின் குட்டு வெளிப்பட... அவர்கள் இருவரும் என்ன செய்தார்கள் என்பதுதான் ‘ரெட்டைவால் குருவி’யின் கலாட்டாப் பயணம்!

படத்தில் மொத்தம் பத்துபேர்தான் நடித்திருப்பார்கள். அதில் பெரும்பங்கு, மோகன், ராதிகா, அர்ச்சனா, வி.கே.ராமசாமிக்குத்தான்! படத்தின் முதல் பலம், காட்சி அமைப்புகள்தான். ஒவ்வொரு காட்சியுமே நம்மை வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும். அதன் பிறகுதான் வசனங்களும் நடிப்புகளும் நம்மை ஈர்த்து இன்னும் கலகலக்கவைக்கும்!

அர்ச்சனா, அக்மார்க் கிராமத்துப் பேச்சும் வெள்ளந்தி குணமும் கொண்ட யதார்த்தப் பெண். ராதிகாவோ, அப்படியே நேரெதிர். மாடல் உடையும் மாடலிங் தரமும் கொண்டு, மேடைகளில் ஸ்டைலிஷாகப் பாடுகிற மேற்கத்திய பாணி பெண். இவர்களுக்கு நடுவே, மனைவி மீது அன்பும், குழந்தைகள் மீது பேரன்பும் வேலையில் முழு ஈடுபாடும் கொண்டவராக மோகன். இத்தனைக்கும் சபலமோ சலனமோ இல்லாத நல்ல கேரக்டர்தான் மோகனுக்கு. ஆனால் ‘சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லோரும் நல்லவரே’ என்ற தத்துவத்துக்கு ஏற்ப, சந்தர்ப்பம் கிடைப்பதற்கு முன்பு வரை நல்ல குணங்களுடனும் ராதிகாவின் சம்மதம் கிடைத்ததும் ‘ஸ்லிப்’ ஆவதும் அசடு வழிவதும் பொய்களைச் சொல்லி தப்பிக்கப்பார்ப்பதுமாக மோகன் மாறிவிடுவார்.

இப்படியாக, கதை மாந்தர்களை, தனக்கே உரிய பாணியில், வெகு இயல்பாகவும் மெல்லிய உணர்வுகளுடனும் படைத்த அதேநேரத்தில், முழுக்க முழுக்க காமெடியாகவும் சொன்னதுதான் ‘ரெட்டைவால் குருவி’. இதையே மிக மிக சீரியஸாகச் சொன்னதுதான் ‘மறுபடியும்’.

மோகனும் ராதிகாவும் பல படங்களில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இதிலும் அட்டகாசமான ஜோடியாக இருவரும் அசத்திவிடுவார்கள். அதேசமயம், மோகன் - அர்ச்சனா ஜோடி அவ்வளவு பாந்தமாகவும் யதார்த்தமாகவும் இருப்பதையும் குறிப்பிடவேண்டும். அர்ச்சனாவும் கர்ப்பம். ராதிகாவும் கர்ப்பம். இரண்டுபேரும் கர்ப்பிணி நடையையும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுவதையும் தைரியத்தையும் பயத்தையும் என முழுக்க முழுக்க மாறுபடுத்தி வெளிப்படுத்தி, நடிப்பில் பிரமிக்கவைத்திருந்தார்கள்.

ஒருபக்கம், அர்ச்சனாவை ஏமாற்றுவது, இன்னொரு பக்கம் ராதிகாவை ஏமாற்றுவது, முக்கியமாக அர்ச்சனாவுடன் தி.நகரில் பழக்கடைக்கு வந்திருக்கும் மோகன் காரில் ஏறுவதை குஸ்தி பயில்வான் மாமனார் பார்த்துவிட்டு ராதிகாவிடம் சொல்லுவார். அப்போது வரும் மோகன், “மாமாவை பாரீஸ்கார்னரில் பார்த்தேன்” என்பார். ‘’நான் அந்தப் பக்கம் போகவே இல்லியே’’ என்பார். உடனே மோகன், ‘’ஒரேமாதிரி உருவம் கொண்டவங்க இருப்பாங்கன்னு சொல்றது உண்மைதான் போல இருக்கு’’ என்று அசடு வழிந்தபடி சொல்லுவார். தியேட்டரில் இந்தக் காட்சிக்கெல்லாம், எகிறி எகிறிச் சிரித்தார்கள் ரசிகர்கள்.

ஒளிப்பதிவைச் சொல்லணுமா என்ன? வெளிப்புறக் காட்சிகளும் வீட்டையும் வீட்டுக்குள் இருக்கிற அமைப்பையும் நமக்குக் கடத்துகிற காட்சிகளும் அத்தனை அழகுடனும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருப்பார் பாலு மகேந்திரா. போதாக்குறைக்கு அவரே எடிட்டிங் பணியையும் சேர்த்துப் பார்த்ததால், இன்னும் மெருகேற்றியதை உணரமுடிந்தது நம்மால்!

கவிஞர் மு.மேத்தாவின் ’ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்தேசம் நீதான்’ என்ற பாடல், கவிதை மாதிரி பண்ணப்பட்டிருக்கும். ‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்’ என்ற பாடலில், மைக்கை ஸ்டைலாகப் பிடித்துக் கொண்டு, ரொம்ப ஸ்டைலாக ஆடிக்கொண்டு, தலைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டே ராதிகா பாடுகிற அந்தக் காட்சி, ராதிகாவின் எத்தனையோ நடிப்புச் சோறுபதங்களுக்கு இதுவும் ஒருசோறுபத சாட்சி! பிரமாதம் பண்ணியிருப்பார்.

பாலு மகேந்திராவின் படங்களில், தேவையில்லாமல் பாடலுக்கு வாயசைப்பதெல்லாம் இருக்காது. ‘ராஜராஜ சோழன்’ பாட்டு ஒலித்தபடி இருக்கும். மோகனும் அர்ச்சனாவும் மோகனும் ராதிகாவுமாக ஏதேதோ பேசியபடி, சிரித்தபடி, குத்துவிட்டு சீண்டியபடி, வியப்பைக் காட்டியபடி, வெட்கத்தை உணர்த்தும்படி அவர்கள்பாட்டுக்கு பேசிக்கொண்டே, நடந்துகொண்டே போவார்கள். இவற்றையெல்லாம் நம்மால் மிஸ் பண்ணவே முடியாது.

’மிஸஸ் கோபி’ என்கிற ஒற்றைவார்த்தையை வைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் நடக்கிற களேபரம், அதகளம் பண்ணும். இளையராஜாவின் இசை, படத்தின் மற்றொரு கவிதை. காமெடிப் படத்துக்கே உண்டான பிஜிஎம்மை வழங்கியிருப்பார். பாடல்களில் வழக்கம்போல் பிரமிப்பூட்டி ஹிட்டாக்கியிருப்பார். படத்திலும் ஒருகாட்சியில் இளையராஜா வருவார்.

”இந்தக் கேரக்டரை இவரைத் தவிர வேற யாரும் பண்ணமுடியாது’’ என்று சில படங்களைப் பார்த்துவிட்டுச் சொல்வோம். அப்படித்தான் வி.கே.ராமசாமி ஏற்றிருந்த பாத்திரத்தை அவரை விட சிறப்பாக யாருமே செய்யமுடியாது என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்னார்கள்.

1987-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகி, திரையிட்ட திரை அரங்குகளில், 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது ரெட்டைவால் குருவி. 36 வருடங்களாகிவிட்டன. ‘ராஜராஜ சோழன் நான்’ பாடலை இன்றைக்கும் காலர் டியூனாகவும் டயலர் டியூனாகவும் ஏகப்பட்டபேர் செல்போன்களில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாலு மகேந்திராவின் படைப்புகளில், சற்றே மாறுபட்ட படமாக ‘ரெட்டைவால் குருவி’ இன்னும் களைப்பின்றி கலர்ஃபுல்லாகப் பறந்து கொண்டிருக்கிறது ‘ரெட்டைவால் குருவி!’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in