’சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று சொல்லி அடித்த பாலசந்தர்!

- சிவகுமார், கமல் இணைந்த வெற்றிப் படம்

’சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று சொல்லி அடித்த பாலசந்தர்!

’’சொல்லணும்னு தோணுது. ஆனா சொல்லமுடியலை’’ என்ற வார்த்தையை இங்கே சொல்லாதவர்கள் இருக்கிறார்களா என்ன? ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் மனதால் காதலிப்பதை சொல்லிக்கொள்ளாமலே இருக்கிற படங்களை நிறையவே சொல்லியிருக்கிறார்கள், தமிழ்ப்படத்தில்!

இரண்டு பெண்கள் ஒருவனை விரும்புகிற விஷயத்தையோ, இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணை விரும்புகிற காரியத்தையோ சொல்லி அதை ‘முக்கோணக்காதல்’ என்று சொல்லிவைத்தார்கள். இப்படியான ‘முக்கோணக் காதல்’ கதைகளின் மன்னன் என்றே இயக்குநர் ஸ்ரீதர் அழைக்கப்பட்டார். ஆனால், மூன்று பெண்கள் காதலிக்கிறார்கள்... அதுவும் ஒருவனைக் காதலிக்கிறார்கள்... அவனும் அந்தப் பெண்களில் ஒருத்தியை விரும்புகிறான் என்றால் எப்படியிருக்கும்? ஆக, இந்த நான்குபேரில் காதலைச் சொன்னவர்கள் யார்? எல்லோருமே ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று சொல்லாமலேயே விட்டவர்கள். அந்த சொல்லாதவர்களை நமக்குச் சொல்லினார் கே.பாலசந்தர். அதுதான் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்.’

அந்த அலுவலகத்துக்கு புதிய மேனேஜராக வருகிறார் ராகவன். அங்கு, சாதாரண பணியில் இருந்துவிட்டு, வேலையை விட்டுச் சென்ற சிவராமனுக்கு, தான் மேனேஜராகியிருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு. அதனால் அவருக்கு மனநிலை லேசாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்பாட்டுக்கு அலுவலகம் வருவார். மேனேஜர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எல்லோரையும் வேலை வாங்குவார். அவருக்கு மூன்று மகள்கள். யாருக்காவது சொல்லி அனுப்புவார்கள். மகள் வந்து அப்பாவை அழைத்துச் செல்வார். மறுநாள், “இப்படிலாமா நடந்துக்கிட்டேன்” என்பார். அப்படியொரு குணச்சித்திரம் அவர்.

புது மேனேஜர் ராகவன் வந்திருக்கும் போதும் இப்படித்தான். அவரிடம் அன்பாக நடந்துகொண்டு அனுப்பிவைப்பார் ராகவன். பிறகு, ‘’ஒவ்வொரு வருஷப் பிறப்புக்கும் மேனேஜரைக் கூப்பிட்டு எங்க வீட்ல விருந்து வைக்கறது என் வழக்கம். அவசியம் வரணும்’’ என்று சிவராமன் அழைப்பார். ராகவனும் செல்வார்.

அந்த வீட்டில் சிவராமனின் மூன்று மகள்களையும் பார்ப்பார். மூத்தவள் மஞ்சு, டீச்சர். கொஞ்சம் திக்கும். அடுத்தவள் கமலாவுக்கு, அடுப்படியே உலகம். சமைப்பதில் கெட்டிக்காரி. மூன்றாவது மகளான புஷ்பா துடுக்குப் பேச்சும் துறுதுறு வேகமுமாக வலம் வருகிற மாணவி. இந்த மூன்று பேரின் குணாதிசயங்களும் சிவராமனின் குணமும் பிடித்துப் போகிறது ராகவனுக்கு. மேலும், அவர்கள் குடியிருக்கும் வீட்டைப் பார்க்கவே சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது ராகவனுக்கு!

அந்த ஊரில் நல்ல பங்களா ராகவனுக்கு உண்டு. அப்பாவும் அம்மாவும் வெளியூரில் இருக்க, ‘ஆனாரூனா’ என்கிற சமையல்காரர் இருக்கிறார். வீடு பெரிது. ஆட்கள் குறைவு. ‘’கீழ் போர்ஷனில் நீங்க குடியிருங்க. உங்களால என்ன முடியுதோ அதைக் கொடுங்க’’ என்கிறார் ராகவன். எல்லோரும் சம்மதிக்கிறார்கள். ராகவனின் பங்களாவுக்கு வருகிறார்கள்.

ராகவனுக்கு கமல் எனும் நண்பன். காசுபணத்துக்கு குறைவில்லை அவனுக்கு. ஆனால், குடிப்பான். பெண்களைக் கவிழ்ப்பான். கட்டுப்பாடுகளே இல்லாமல், கலாச்சார எல்லைகளை மீறுகிறவன். கமலுக்கு அம்மா. கொஞ்சிக் கெஞ்சி அதட்டி உருட்டி, அவரைப் பணியவைத்துவிடுவான் கமல். ஒரேயொரு தம்பி. மாணவன். அவனுடைய தப்புக்கெல்லாம் சாட்சியாக இருப்பவன்.

ராகவனுக்கு மூன்றாவது பெண் மீது விருப்பம். ஆனால், மூன்று சகோதரிகளுக்குமே ராகவனின் மீது காதல். ஆனால், எவரும் சொல்லிக்கொள்ளவில்லை. இருந்தாலும் மூத்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார் ராகவன். ஆனால், அவர் திக்கிப் பேசுகிறார் என்பதால், மாப்பிள்ளை வீடு, அவரின் தங்கையைக் கேட்கிறது. கொதித்துப் போகிறது வீடு. அடுத்த முறையும் இப்படித்தான் நடக்கிறது.

ராகவனிடம் வீட்டு வாடகை கொடுக்கிற சாக்கில் மூத்தவள் சந்தித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள். அவனுக்குப் பிடித்த பாகற்காய் கறி செய்து காதலை வெளிப்படுத்த முனைகிறாள் கமலா. எல்லோரிடமும் கலகலவனெப் பேசும் கடைசிப் பெண்ணான புஷ்பாவோ, அவனிடம் ஜாலி கேலியாகப் பேசுகிறாள். ராகவனும் புஷ்பாவை விரும்புகிறான். அவளை ஓவியமாகக் கொஞ்சம்கொஞ்சமாகத் தீட்டும் முனைவில் இருக்கிறான்.

வேலைக்காரர் ‘ஆனாரூனா’ காலத்தின்பால் ஓடக்கூடியவர். ‘எல்லாம் டைம் பிரகாரம்’ நடந்துவிடவேண்டும் அவருக்கு. “மனைவி எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்” என்பார். “என் மனைவி எனக்காகச் சமைத்து வைத்திருப்பாள்” என்றெல்லாம் சொல்லி வேலை நேரம் முடிந்ததும் கிளம்பிச் சென்றுவிடுவார்.

புஷ்பாவுக்கு ஒரு தோழி உண்டு. அவளை விட அதிக வயதுகொண்ட மனிதருக்கு அவளைத் திருமணம் செய்துவைப்பார்கள். இந்தக் கலக்கத்தில் இருப்பாள் அவள். அந்த மனிதர் கார்களின் மீது பைத்தியமாக இருப்பவர்.

சமையலில் சிறந்துவிளங்கும் இரண்டாவது பெண்ணான கமலா, அடிக்கடி ஒரு கடிதத்தை ராகவனிடம் கொடுத்து, அதைக் கவர் வாங்கி போஸ்ட் செய்யச் சொல்லி முகவரியும் கொடுப்பார். ஆனால், அந்தக் கடிதங்களில்தான் தன் காதலை வெளிப்படுத்தியிருப்பாள். ஒவ்வொரு முறையும் கடிதத்தை ஒட்டி போஸ்ட் செய்துவிடுவார் ராகவன்.

பெண்களை வளைத்துப் போகிற காமாந்தகன் கமலுக்கு, புஷ்பாவின் மீதும் ஒரு கண். அவனின் பட்டியலில் அவளும் உண்டு. ஒருகட்டத்தில், மூத்த பெண் மஞ்சு மழையில் நனைந்து மரத்தடியில் ஒதுங்கியிருப்பாள். குடையுடன் வரும் சிறுமி, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். அப்போதுதான் ஆனாரூனாவின் உண்மைகள் தெரியவரும். இறந்துவிட்ட மனைவி இன்னமும் உயிருடன் இருப்பதாகவே நினைத்து அவர் வாழ்ந்து வருவதை மஞ்சு புரிந்துகொள்வார். ‘’எத்தனையோ முறை கடிதம் கொடுத்தேனே. அதைப் படிக்கவே இல்லையா?’’ என்று ராகவனிடம் கேட்பார் கமலா. இல்லையென பதில் சொல்வார்.

இந்த நிலையில் ஓவியத்தைக் கொடுத்து தன் காதலைப் புஷ்பாவிடம் சொல்ல நினைத்திருப்பார் ராகவன். கார்களின் மீது காதல் கொண்டவரின் இளம்பெண்ணை மடக்கி, மயக்கிவிடுவார் கமல். ஊரைவிட்டு ஓடிப்போக முடிவு செய்வார்கள். இது தெரிந்த வயதான கணவர், புஷ்பாவைச் சந்தித்து உண்மைகளையெல்லாம் சொல்லுவார்.

விமானநிலையத்தில் அந்தப் பெண் காத்திருப்பாள். இங்கே கிளம்பிக் கொண்டிருக்கும் கமலை, புஷ்பா சந்திப்பாள். அவனைப் போகவிடாமல் ஏதேதோ பேசி நேரத்தை விரயமாக்குவாள். ஒருகட்டத்தில், தன்னையே கொடுத்து தோழியைக் காப்பது எனும் முடிவுக்கு வருவாள். அப்படியே நடந்துவிடும்.

ஓவியம் முழுமையடைந்த வேளையில், ஓவியத்தில் மை கவிழ்ந்திருக்கும். ராகவனின் நண்பர், எப்போதோ வந்து பார்த்த மாப்பிள்ளைக்கும் கமலாவுக்கும் கல்யாணம். மஞ்சுவுக்கும் சமையற்காரருக்கும் கல்யாணம். காத்திருக்கும் ராகவனுக்கு, கமலிடம் தன்னையே இழந்ததைச் சொல்ல, மனம் திருந்திய கமலுக்கும் புஷ்பாவுக்கும் திருமணம் என மூன்று பெண்களுக்கும் திருமணம் நடக்கும். கதையின் நாயகனான ராகவன், நாயகியரான மூவரில் ஒருவரைக் கூட திருமணம் செய்யாமல் இருப்பதுடன், முடிவுக்கு வரும் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’.

ராகவனாக சிவகுமார். தன் இயல்பான நடிப்பால் அசத்தியிருந்தார். கமலாக கமல்ஹாசன். புஷ்பாவாக ஜெயசித்ரா. மஞ்சுவாக சுபா, கமலாவாக ஸ்ரீவித்யா, ஆனாரூனாவாக ஏ.வீரப்பன், கார் விரும்பியாக பூர்ணம் விஸ்வநாதன், அவரைத் திருமணம் செய்து கொள்ளும் புஷ்பாவின் தோழி சுதாவாக, ஜெயசுதா, கமலின் தம்பியாக மாஸ்டர் சேகர், மூன்று பெண்களின் அப்பாவாக எஸ்.வி.சுப்பையா முதலானோர் நடித்திருந்தனர். நடித்திருந்தார்கள் என்று சொல்வதை விட, வாழ்ந்திருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இதயம் பேசுகிறது மணியன், விகடனில், ‘இலவு காத்த கிளி’ என்றொரு நாவலை எழுதினார். அந்தக் கதையை பாலசந்தரிடம் சொல்ல, அதற்கு திரைக்கதை வசனம் எழுதி, இயக்கினார் கே.பாலசந்தர். உதயம் புரொடக்‌ஷன்ஸ் பேனரில், இதயம் பேசுகிறது மணியனும் வித்வான் வே.லட்சுமணனும் தயாரித்தார்கள்.

பெண் பார்க்க வந்த இடத்தில் அக்கா பாடும்போது திக்கிவிடும். உடனே, அடுத்தவள் பாடுவாள். அக்காவின் தயக்கத்தையும் கூச்சத்தையும் சமாளிப்பாள். அப்பா ஏதாவது சொல்லி உளறிக் கொட்டி திருமணம் நடக்காமல் செய்துவிடுவார் என்று அறையில் வைத்து சார்த்திவிடுவார்கள். அங்கிருந்தபடியே “நான் இங்கே இருக்கேன்” என்று வெளியே வந்து மாப்பிள்ளை வீட்டாரிடம் கறார் பேசும் த்வனி அத்தனை அழகாக இருக்கும்.

சமையற்கட்டே உலகம் என்றிருக்கும் ஸ்ரீவித்யா, கையில் இருக்கும் கரண்டியை ‘டொக்டொக்’ என்று அடிப்பார். சிவகுமார் திரும்பிப் பார்ப்பார். இதைக் கொண்டுதான் சிவகுமாருக்கு ‘சிக்னல்’ கொடுப்பார் ஸ்ரீவித்யா. அழகான கவிதை எபிசோடுகள் இவை! தவிர, மிகுந்த ஏக்கத்துடன், ‘’உங்ககிட்ட போஸ்ட் செய்யச் சொல்லிக் கொடுத்த கடிதத்தை ஒருதடவைகூட படிக்கலியா?’’ என்று கேட்பார் பரிதாப முகத்துடன். ‘’அதெப்படிங்க’’ என்பார் சிவகுமார். ‘’உண்மையிலேயே நீங்க ஜென்டில்மேன்தாங்க!’’என்று கண்ணீருடன் சொல்லுவார். நம் கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வோம். ஸ்ரீவித்யாவின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் முக்கியமான படம்.

‘’கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியை இழந்து நீங்க இப்படி இருக்கறீங்க. கல்யாணம் பண்ணிக்காமலேயே நான் விதவைக் கோலத்துல இருக்கேன்’’ என்று மூத்தவள் சொல்லுவாள். ஆனாரூனா நெகிழ்ந்து போவார். நாமும்தான்!

வார்த்தைக்கு வார்த்தை ‘ஹீரோ ஹீரோ’ என்று ஜெயசித்ரா, சிவகுமாரை அழைத்துக் கொண்டே இருப்பார். அவரிடம் ஜோக்குகள் சொல்லி விளையாடிக் கொண்டே இருப்பார். அதேசமயம், கமலிடம் வீரமாகவும் கோபமாகவும் மோதுவார். ‘டொண்டொடய்ங்’ என்று அடிக்கடி சொல்லும் ஜெயசித்ராவின் ஸ்டைலும் பாலசந்தர் படங்களுக்கே உண்டான மேனரிஸம்.

அடுப்பில் பால் பொங்குவதையும் பிறகு அமைதியாவதையும் காட்சிகளாக்கி, அவர்களின் உணர்வுகளைக் கவிதையாக்கியிருப்பார் பாலசந்தர். நடையில் அலட்டல், பேச்சில் திமிர், கண்களில் காமம், கழுத்தில் ‘ஐ லவ்யூ’ டாலர், முகத்தில் எப்போதும் ஏதேனும் பெண்ணை அடையத் துடிக்கிற ஆவேசம் என்று கமல் புது ஸ்டைலுடன் கதைக்கு கனம் சேர்த்திருப்பர்.

எஸ்.வி.சுப்பையாவின் நடிப்பு அமர்க்களப்படும். நல்லவனாக, காதலைச் சொல்லாமல் தவிக்கிற தவிப்பு, சிவகுமாரின் இயல்பான முகத்துக்கு அப்படியே அழகு சேர்த்து அப்படியே நகாசு காட்டியது.

படத்தில் ஜெயசித்ராவும் கமலும் போட்டிக் கொண்டு நடித்தார்கள். ஒரு கண்ணை மூடியபடி, உதட்டுக்கு வெளியே நாக்கைச் சுழற்றியபடி, ஜெயசித்ரா செய்த சேட்டைகளெல்லாம் ரசிக்கவைத்தன.

கவிஞர் வாலியின் பாடல்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்தார். ’பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி/ அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேரச் சொல்லடி/ பாடுவேனடி என்றும் பாடுவேனடி/ சரணம் என்று நானும் வந்தேன் ஏற்கச் சொல்லடி/ அவன் சன்னதியில் எந்தன் நிலையை எடுத்துச் சொல்லடி’️

’மீரா பாடிய பாடலைக் கேட்க கண்ணன் வரவில்லையோ ?/ அந்த மங்கையின் பாடல் மன்னனுக்கு ஏதோ மயக்கம் தரவில்லையோ ?/ தஞ்சம் என்று நெஞ்சம் ஒன்று பாடுகின்றது/ அது தன்னை காக்கும் தலைவன் நிழலை தேடுகின்றது/ பாடுவேனடி என்றும் பாடுவேனடி/ பாடுவேனடி என்றும் பாடுவேனடி’ என்று பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருப்பார்கள்.

’கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே/ வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு/ take it easy

’கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே/ வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு/ ஹ... வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு don't be crazy’ என்று பாடும் பாடல் அமர்க்களம்.

’கோவில் காளை போலே திரிந்தால் கல்யாணம் புரியாது/ அது காவல் தாண்டி மேயும் அங்கே கால்கட்டு கிடையாது’

’நாள்தோறும் நாம் காணும் கல்யாணம் என்பது இந்நாளில் தெருவோரம் தீர்மானம் செய்வது/ now a days you know marriages are made in street corner’

’தெய்வம் சொல்லும் தீர்ப்பைக் கொண்டே திருமணம் முடிகிறது/ அதன் இச்சைப்படியே சொர்க்கம் தனிலே நிச்சயம் ஆகிறது/ கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு’ என்ற பாடலை, எஸ்பிபி-யும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடினார்கள். கமலுக்கும் ஜெயசித்ராவுக்குமான பாடல் இது! கதையை இந்தப் பாடல் அப்படியே சொல்லிவிடும்.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ மட்டும் என்னவாம்?

’சொல்லத்தான் நினைக்கிறேன்/ உள்ளத்தால் துடிக்கிறேன்/ வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்/

’காற்றில் மிதக்கும் புகை போலே/ அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே/ காற்றில் மிதக்கும் புகை போலே/ அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே/ மன வீடு அவன் தனி வீடு/ அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே/ என்ற வரிகளில் வாணி ஜெயராம் அழகு காட்டியிருப்பார்.

’காதல் என்பது மழையானால்/ அவள் கண்கள் தானே கார்மேகம்/ காதல் என்பது மழையானால்/ அவள் கண்கள் தானே கார்மேகம்/ நீராட்ட நான் பாராட்ட/ அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ/ அவள் வருவாளே சுகம் தருவாளே’ என்று எம்.எஸ்.வி. இசையமைத்ததுடன் பாடவும் செய்திருந்தார்.

’ஆசை பொங்குது பால் போலே/ அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே.../ ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே/ கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்/ அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ/ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே’ என்ற வரிகள் பெண்ணுக்கானவை.

’நேரில் நின்றாள் ஓவியமாய்/ என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்/

நேரில் நின்றாள் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்/ நான் பாதி அவள் தான் பாதி/ எனக் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ/ நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே... ஆஹா... சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற பாடலைக் கேட்டால், அடுத்த பத்து இருபது நாட்களுக்கு இந்தப் பாடலை முணுமுணுத்தபடி, இந்தப் பாடலுடனே பயணிப்போம்.

படம் வெளியான போது பார்த்துவிட்டு, அதையடுத்து பத்துப் பன்னிரெண்டு வருடங்கள் கழித்து, திருச்சி பால்பண்ணைக்கு அருகில் உள்ள கனி எனும் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, வீட்டில் இருக்கும் போது, சைக்கிளில் செல்லும்போது, நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ‘காதல் என்பது மழையானால் அவள் கண்கள்தானே கார்மேகம்’ என்று எம்.எஸ்.வி. மாதிரியே பாடுகிறேன் பேர்வழி என்று உரக்கப்பாடி மகிழ்ந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.

ஒரு நாவலை ‘நாவல்டி’யாக படைத்துக் கொடுத்திருந்தார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். படத்தின் இறுதிக்காட்சியில், ‘ஹீரோ சார்’ என்று எஸ்.வி.சுப்பையா சொல்லுவார். ‘’நான் ஹீரோவெல்லாம் இல்லீங்க. உங்க மூணு பெண்கள்ல யாரு ஹீரோயின்’’ என்று சிவகுமார் கேட்பார். ”மூணு பேரும்தான்’’ என்று பெருமையாக சுப்பையா சொல்ல, ‘’மூணு ஹீரோயின்ல ஒரு ஹீரோயினைக் கூட என்னால கல்யாணம் பண்ணிக்க முடியலியே... நான் எப்படி ஹீரோவா இருக்கமுடியும்?’’ என்று சொல்லிச் சிரிப்பார் சிவகுமார். அந்த இடமும் கே.பி. டைரக்‌ஷன் டச்!

1973-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி வெளியானது ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’. படம் வெளியாகி, 49 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் சொல்ல நினைத்ததை சிறப்பாகச் சொன்னதால், கே.பாலசந்தரின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ இன்னமும் மனதில் அப்படியே நிற்கிறது. ஏதோ இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in