
தியேட்டருக்குள் புகுந்த கும்பல் ஒன்று, ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திவிட்டு ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை திரையிடுமாறு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியானது. பல பகுதிகளில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அக்ஷய்குமார், கீர்த்தி சனான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், அர்ஷத் வர்ஷி நடிப்பில் ’பச்சன் பாண்டே’ என்ற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இது தமிழில் வெளியான ’ஜிகிர்தண்டா’ படத்தின் ரீமேக்.
ஒடிஷாவின் சம்பல்பூரில் உள்ள ஐலெக்ஸ் சினிமாஸ் (Eylex) என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரசிகர்கள் படம் பார்த்துக்கொண்டிருந்த போது, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடி, தியேட்டருக்குள் புகுந்த ஒரு கும்பல், படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களை கட்டாயப்படுத்தி வெளியேறும்படி கூறினர். பின்னர் நேராக மானேஜர் அறைக்குச் சென்றவர்கள் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைத் திரையிடும்படி மிரட்டினர். வேறு வழியில்லாமல் அவர்கள் ’பச்சன் பாண்டே’ படத்தை நிறுத்திவிட்டு, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை திரையிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பற்றி அந்த தியேட்டருக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, ‘எல்லாமே நடக்கிற உலகத்தில்தான் வாழ்கிறோம். ரஷ்யா, உக்ரனை ஆக்கிரமிக்கிறது. உலகம் எதையும் செய்யாமல் வேடிக்கைப் பார்க்கிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருப்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். அவ்வளவுதான். வேறு என்ன சொல்ல?’ என்று கூறியுள்ளனர்.
மேலும் சில திரையரங்கு உரிமையாளர்கள், ’படத்தின் முக்கியமான காட்சிகளை வெட்டிவிட்டதாக சிலர் புகார் கூறுகின்றனர். இதென்ன ஃபிலிமா, வெட்டுவதற்கு?. அதற்கான வாய்ப்பே இல்லை என்பதை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளனர்.