ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் பரிசு: பாபா ரீ-ரிலிஸ்

ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் பரிசு: பாபா ரீ-ரிலிஸ்

20 ஆண்டுகள் கழித்து மேம்பட்ட வடிவத்தில் மறு வெளியீடு காணும் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்தின் ரிலீஸ் விபரம் அறிவிப்பாகி உள்ளது.

2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ’பாபா’. அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியின் வெற்றிக்கணக்கில் முத்திரை பதித்த திரைப்படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா பாபா திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இது தவிர ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உட்பட திரையிலும், திரையின் பின்னாலும் ஏராளமான முன்னணி கலைஞர்கள் பாபாவுக்காக அணி திரண்டிருந்தனர்.

ஆனால் பாபா எதிர்பார்த்த வெற்றியை தராததோடு ரஜினியின் தோல்வி படங்களில் சேர்ந்தது. படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு மட்டுமன்றி காட்சிக்கு காட்சி ரஜினியின் தலையீடு அதிகம் இருந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பாபா பூர்த்தி செய்ய முடியாது போனது. வணிக வெற்றியைவிட தான் வணங்கும் பாபா குறித்த படம் எடுபடாது போனதில் ரஜினிக்கு ஆழ்ந்த வருத்தம் இருந்தது.

20 ஆண்டுகள் கழித்து அதற்கு பிராயசித்தம் தேட முயற்சித்திருக்கிறார்கள். இசை, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, வண்ணக்கலவை என 20 ஆண்டுகளில் நவீனம் கண்ட தொழில்நுட்பத்தை ஒட்டுமொத்தமாய் இறக்கி டிஜிட்டல் பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸை தீர்மானித்திருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் தீவிரமாக மெனக்கிட்டு புதிய வடிவில் டிஜிட்டல் பாபாவை மெருகேற்றி உள்ளனர். ரஜினியும் உற்சாகத்தோடு புதிய வசனங்களுக்காக பின்னணி குரல் தந்திருக்கிறார்.

2002 பாபா, ரஜினியின் பிறந்த நாளன்று வெளியானது. எனவே பாபா ரீ-ரிலீஸும் ரஜினி பிறந்தநாளில் வெளியாக வேண்டும் என்பது ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக இருந்தது. அவற்றை நிறைவு செய்யும் வகையில், ரஜினியின் 72வது பிறந்தநாளினை(டிச.12) முன்னிட்டு டிச.10 அன்று பாபா வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரஜினியின் பிறந்தநாளையும், பாபா புதிய வெளியீட்டையும் ரஜினி ரசிகர்கள் ஒரு சேர கொண்டாட இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in