சர்ச்சைக்கு மத்தியில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விருது

உலக அரிமா சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
சர்ச்சைக்கு மத்தியில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விருது

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், உலக அரிமா சங்கங்களின் சார்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தநிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர் மிதார் மொய்தீன் என்பவர் கொடுத்த புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளத்தில் தன்னுடைய பதிவை நீக்கிவிட்டதாகவும், மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும், அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எஸ்.வி.சேகர் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக ஒருமுறைகூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில். ஏப்ரல் 2-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டதோடு, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் கூறி வழக்கு விசாரணையை 2ரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

இப்படி சர்ச்சைக்குள் சிக்கியுள்ள நடிகர் எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை உலக அரிமா சங்கங்களின் சென்னை அரிமா சங்கங்களின் சென்னை மாவட்டம் வழங்கியுள்ளது. இந்த விருதை அரிமா கவர்னர் எஸ்.வி.மாணிக்கம், அரிமா நிர்வாகி கணேஷ் ஷெனாய், முன்னாள் அரிமா கவர்னர் டி.ஜெ.ஜார்ஜ் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வில் அரிமா பிரகாஷ் குமார், மொகமத் நவீன், எம் ஶ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in