ரஜினிக்கு தாதா சாகேப் விருது; ரசிகர்கள் கொண்டாட மறந்தது ஏன்?

ரஜினிக்கு தாதா சாகேப் விருது; ரசிகர்கள் கொண்டாட மறந்தது ஏன்?

திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்ற ரஜினிகாந்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், படத்துக்குப் படம் பாலாபிஷேகம் நடத்தும் அவரது ரசிகர்கள் அமைதியாக ஒதுங்கிவிட்டார்கள்.

ஒரு போஸ்டர் இல்லை; சுவர் விளம்பரம், மீடியா விளம்பரம் இல்லை; கோயில் வழிபாடு, ஸ்வீட் கொண்டாட்டங்கள் எதுவுமே இல்லையே ஏன்?

இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன கோவையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் முபாரக், “பிரதமர் மோடி நல்லவர். அவரது நண்பர் ரஜினிகாந்த். அவரின் உழைப்புக்கும், நடிப்புக்கும், அரசியல் செல்வாக்குக்கும் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது குடுத்துருக்காங்க; மகிழ்ச்சி’’ என்று முடித்துக் கொண்டார்.

கோவையில் ரஜினிக்கு எந்த ஒரு படமென்றாலும் போஸ்டர் அச்சடித்துக் கொண்டாடும் ரசிகர் அபுவிடம் கேட்டபோது, ‘‘உண்மையிலேயே பெரிய விருது. எல்லோரும் கொண்டாடப்பட வேண்டியது. இதுவே தலைவரின் அரசியல் துறவற அறிவிப்புக்கு முந்தைய நிலை என்றால், பக்கம் பக்கமா விளம்பரம் குடுத்துருப்பாங்க. திரும்பின பக்கமெல்லாம் ஸ்வீட் கொடுத்துக் கொண்டாட்டம், அன்னதானம், கோயில் வழிபாடு எல்லாம் நடத்திருப்பாங்க. அரசியலுக்கு வரமாட்டேன்னு தலைவர் ஒதுங்கிப் போனதும், இனி இதெல்லாம் வேஸ்ட்னு நினைச்சு கம்முனு இருந்துட்டாங்க” என்றார்.

இதுகுறித்து கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சில ரஜினி ரசிகர்களிடம் பேசினோம். ‘‘நியாயமா பார்த்தா ரஜினியை விடவும் சிறந்த நடிகர் கமல்ஹாசன்தான். அவருக்குத்தான் முதலில் இந்த விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். ரஜினிகாந்த் அப்படியல்ல. டெல்லியை ஆமோதித்து அவர்கள் சொல்கிறபடி நடந்தார். நடிப்புக்கு என்று சொல்வதைவிட பாஜக ஆதரவாளர் என்ற முத்திரைதான் ரஜினிக்கு இந்த விருதை வழங்க அழுத்தம் தந்திருக்கிறது. அதனால் இந்த விருது எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு இனிக்கவில்லை!’’ என்று ஒதுங்கிக் கொண்டனர்.

போஸ்டர்கள், மீடியா விளம்பரங்கள், கொண்டாட்டங்கள் ஏன் இல்லை என்று கேட்டபோது, கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ரசிகர் சொன்னது:

ஒவ்வொரு முறையும் ரஜினியின் அறிவிப்பை வேதவாக்காக எடுத்துக்கொண்டு இதே ஆர்.எஸ்.புரம் டவுனில் ஓர் அலுவலகம் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ரஜினி மக்கள் மன்றத்தை நடத்தினோம். ஆளாளுக்கு உறுப்பினர் சேர்ப்பிலும் ஈடுபட்டோம். இதற்காகவெல்லாம் கைக்காசை லட்சக்கணக்கில் இழந்திருப்போம். எல்லாம் எதற்காக? எப்படியும் தலைவர் அரசியலுக்கு வருவார். அவரை முதல்வராக்கி பார்ப்போம் என்றுதானே? இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் மன்றத்தைக் கலைத்தார் ரஜினி. அத்தனை பேரும் காணாமல் போய்விட்டனர். இவரால் தமிழகமெங்கும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? அடுத்ததா, அண்ணாத்தே படம் ரிலீஸ் ஆகப் போகிறது. அதையும் பெருவாரியான ரசிகர்கள் கண்டும் காணாமல்தான் இருக்கப் போகிறார்கள். இதுதான் யதார்த்தம்” என்றார் அந்த ரசிகர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in