ஏவி.எம்மின் ’அன்பே வா’: எம்ஜிஆரின் ‘புதிய வானம் புதிய பூமி!’

ஏவி.எம்மின் ’அன்பே வா’: எம்ஜிஆரின் ‘புதிய வானம் புதிய பூமி!’

காதல் கதை என்பது, தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதில்லை. எத்தனையோ காதல் படங்கள், மறக்க முடியாத காவியங்களாக நம் மனதில் பதிந்திருக்கின்றன. எம்ஜிஆரின் படங்களும் நம் மனதில் ஆழப்பதிந்து, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், எம்ஜிஆரின் உணர்வுபூர்வமான காதல் படம் என்றால், அது ‘அன்பே வா’ காவியமாகத்தான் இருக்கும்!

அறுபதுகளில் இருந்தே வசூல் சக்கரவர்த்தி என்று பேரும்புகழும் கொண்டார் எம்ஜிஆர். ஆக்‌ஷனிலும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரங்களிலும், ‘நல்லவன் வாழ்வான்’ என்கிற கான்செப்ட்டிலுமாக பீடுநடை போட்டார். வாளெடுத்து சுழற்றினால் கரவொலியில் தியேட்டரே குலுங்கும். அனல் வசனங்களைப் பேசினால், மொத்த ரசிகர்களும் ஆர்ப்பரிப்பார்கள். வில்லன்களின் கூடாரத்துக்குள் சென்று, அனைவரையும் வீழ்த்தும் போது, ‘’தலைவா, உன்னை அடிச்சிக்க ஆளே இல்ல வாத்யாரே’’ என்று கொண்டாடியது தமிழ் சினிமா.

தனக்கென ஒரு கதை சொல்லும் பாணியை வைத்துக் கொண்டார் எம்ஜிஆர். இதனை பின்னாளில், எம்ஜிஆர் ஃபார்முலா என்றே சொன்னார்கள். ஆனால், அவரின் சினிமா பாணியில் இல்லாமல், வேறொரு சினிமாவைத் தந்ததுதான் ‘அன்பே வா’.

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த எல்லா தயாரிப்பு நிறுவனங்களிலும் நடித்த எம்ஜிஆருக்கு, மனதில் ஒரேயொரு குறை இருந்தது. ஏவி.எம். தயாரிப்பில் இதுவரை நடிக்கவில்லையே என்பதுதான் அது! ‘’இவ்வளவு ஹிட்டுகளைக் கொடுத்த பிறகு, நாமே சென்று வாய்ப்புக் கேட்டால் நன்றாக இருக்காது’’ என்று நண்பர்களிடம் சொல்லி ஏங்கியதும் உண்டு.

இந்தச் சமயத்தில்தான், விஜயா வாஹினியின் நாகிரெட்டி - சக்ரபாணி தயாரிப்பில், 1965-ம் ஆண்டு ‘எங்க வீட்டு பிள்ளை’ வந்தது. இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் நடித்த இந்தப் படம் அடைந்த வெற்றி, தமிழ் சினிமாவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

விஜயா வாஹினி ஸ்டூடியோ அதிபரான நாகிரெட்டியார் இந்தப் படத்தை வெளியிட்ட வேளையில், ‘’நாம் இதுவரை எம்ஜிஆரை வைத்துப் படமே பண்ணியதில்லையே..’’ என்கிற எண்ணம் ஏவி.எம்.செட்டியாருக்கு வந்தது. ‘’ஏவி.எம். கம்பெனியில் நடிக்கவில்லையே...’’ எனும் எம்ஜிஆரின் ஆதங்கமும், ‘’எம்ஜிஆரை வைத்து படம் எடுக்கவே இல்லையே..." எனும் மெய்யப்பச் செட்டியாரின் ஆதங்கமும் ஒரே அலைவரிசையில் இணைந்தது. அந்த தருணம்... எம்ஜிஆரைச் சந்தித்து, கால்ஷீட் கேட்கப்பட்டது. எம்ஜிஆரும் சம்மதித்தார்.

அதன்படி, ஏவி.எம். படங்களை பீம்சிங் இயக்குவார். அல்லது கிருஷ்ணன் பஞ்சு இயக்குவார்கள். இல்லையெனில், ஏ.சி.திருலோகசந்தர் இயக்குவார். எம்ஜிஆரை வைத்து இயக்கும் படத்துக்கு ஏ.சி.திருலோகசந்தர் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, எம்ஜிஆருக்கு கதையும் சொல்லப்பட்டது.

‘’முதன் முதலாக நம் கம்பெனியில் எம்ஜிஆர் நடிக்கிறார். எனவே வழக்கமான படமாக இல்லாமல், வேறொரு எம்ஜிஆரைக் காட்டவேண்டும்’’ என முடிவு செய்தார் மெய்யப்பச் செட்டியார். அப்படி, எம்ஜிஆர் பாணி என்று எதுவுமே இல்லாமல், எம்ஜிஆரின் படமாக உருவாகி வந்ததுதான் ‘அன்பே வா’.

ஜே.பி. எனும் மிகப்பெரிய தொழிலதிபர். செல்வச் சீமான். பணத்துக்கும் அவரின் எக்கச்சக்க கம்பெனிகளுக்கும் அளவே இல்லை. ஒற்றை ஆளாக உழைத்துக்கொண்டே இருக்கும், சகலத்தையும் நிர்வகித்துக் கொண்டே இருக்கும், உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவையாக இருந்தது. மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்த ஜே.பி., தன் உதவியாளர்கள் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சிம்லாவில் உள்ள தனது பங்களாவுக்கு ஓய்வெடுக்க வருகிறார். ஜே.பி. எனும் தொழிலதிபர்தான் எம்ஜிஆர்.

அங்கே வேலைக்காரராக இருக்கும் நாகேஷ், எம்ஜிஆரை அதற்கு முன்பு, பார்த்ததே இல்லை. ‘’இங்கெல்லாம் தங்கணும்னா அதிகக் காசு செலவாகும்’’ என்று சொல்ல, கடும் கோபமாகும் எம்ஜிஆர், அதனை அடக்கிக் கொண்டு, தன் பங்களாவிலேயே வாடகைக்கு தங்குகிறார். அங்கே சரோஜாதேவியும் தன் பெற்றோருடன் வாடகைக்கு வந்து தங்குகிறார். அதிலிருந்து தொடங்குகிறது கதையும். கூடவே, மோதலும், காதலும்!

எம்ஜிஆர் படத்தில் ஏழெட்டு வில்லன்கள் இருப்பார்கள். இங்கே ஈகோதான் வில்லன். வறட்டுப் பிடிவாதமும் சந்தேகமும்தான் வில்லன். எம்ஜிஆரும் சரோஜாதேவியும் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதுதான் வில்லத்தனம். அவரை இவரும் இவரை அவரும் என காதலித்தாலும் உள்ளுக்குள் காதலில் திளைத்து, ஆனால் வெளியே சொல்லாமல் விழுங்கி, மறைத்துக் கொள்கிறார்கள். பார்க்கிறபோதெல்லாம் முட்டிக்கொள்கிறார்கள். ஆனால், இந்த முட்டல்மோதலை ரசிக்கும் வகையில் எடுத்திருப்பதுதான் திரைக்கதையின் ஜால விளையாட்டு.

ஒவ்வொரு நடிகருக்கும் பாடி லாங்வேஜ் என்று உண்டு. அதுவரை எம்ஜிஆருக்கென இருந்துவந்த பாடிலாங்வேஜ் விஷயத்தை இந்தப் படத்தில் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவே இல்லை இயக்குநர். மாறாக, புதுமாதிரியான உடல் மொழியைக் கொண்டு, எம்ஜிஆர் நடித்தார். அந்த வகையில் ‘அன்பே வா’, எம்ஜிஆர் படங்களில் மறக்க முடியாத படமாக, தனித்துவம் மிக்க படமாக இன்றைக்கும் இருக்கிறது.

தான் ஒரு ஏழை என சரோஜாதேவியிடம் சொல்லிக் காதலிக்கும் எம்ஜிஆர், பிறகு மிகப்பெரிய செல்வந்தர் என்பதைச் சொன்னாரா, அதை சரோஜாதேவி எவ்விதம் எடுத்துக் கொண்டார் என்பதுதான் படத்தின் நிறைவு!

’புதிய வானம் புதிய பூமி’ என்கிற பாடல், குளுகுளு சிம்லாவில் எம்ஜிஆர் பாடும்போதே, படம் நம்மையும் ஈர்த்து குளுகுளுவென ஆக்கிவிடும். அந்த கருப்பு சிவப்பு கோடு போட்ட கோட்டும், சூட்கேஸூம் தொப்பியும் நம் நினைவுகளில் அகலாதது.

’உதயசூரியனின் பார்வையிலே... உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே’ என்ற வரியை சென்சார் அனுமதிக்கவில்லை. ஆனால், ‘உதயசூரியனின் பார்வையிலே’ என்று எம்ஜிஆர் வாயசைத்துப் பாடலை படமாக்கிவிட்டார்கள். பிறகு, டி.எம்.எஸ்.ஸை அழைத்து, ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று பாடவைத்து, படத்தில் இணைத்தார்கள். ‘புதிய’ என்று டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும். ‘உதய’ என்று எம்ஜிஆர் வாயசைப்பதை, இன்றைக்கும் பார்க்கலாம்.

மேலும், படம் முழுக்கவே அவரின் காஸ்ட்யூம்கள், மிகுந்த அழகுடன், புதுமையாகவும் மிகச்சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே எம்ஜிஆர். ஓர் அழகன். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எம்ஜிஆர், பேரழகனாக ஜொலிப்பார். அதேபோல, சரோஜாதேவியின் காஸ்ட்யூம்களும் அவரின் அழகும் இன்னும் இந்த ஜோடியை வெற்றி ஜோடியாகக் கொண்டாடச் செய்தன. முக்கியமாக, ‘லவ் பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ்’ பாடலும் அதற்கு சரோஜாதேவியின் அபிநயங்களும், பின்னே இருந்துகொண்டு எம்ஜிஆரின் சேஷ்டைகளும் என எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; ரசிக்கலாம்; மயங்கலாம்!

ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்பட்ட படம். முழுக்க முழுக்க சிம்லா லொகேஷனில் கண்ணைக் குளிர வைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருந்தன. சரோஜாதேவி. நாகேஷ், மனோரமா, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன் என்று அருமையான நடிகர்கள். பழைய டிரெண்டில் இருந்து சற்றே விலகி, புதுமையான இசைச் சேர்க்கையில் கூடுதல் ஜாலம் காட்டினார் எம்.எஸ்.விஸ்வநாதன். எல்லாப் பாடல்களையும் வாலி எழுத, அனைத்தையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் மெல்லிசை மன்னர்.

படத்தின் மிகப்பெரிய பலம். திரைக்கதை. கதையை விட்டு மீறாத காட்சிகள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மிகச்சிறந்த முறையில் இயக்கினார்.

எம்ஜிஆரும் சரோஜாதேவியும் இருந்தாலும் படத்தை தடதடவென, கலகலப்பாக்கி, நகர்த்திச் செல்லும் பொறுப்பை நாகேஷூம் மனோரமாவும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அதிலும் நாகேஷ் காமெடி, தனி ரகம். நாகேஷின் டாப்டென் காமெடிகளில் ’அன்பே வா’ படத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

'குடியிருந்த கோயில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாட்டுக்கு ஆடவே முடியாது என்று எம்ஜிஆர் சொன்னதாகச் குறிப்பிடுவார்கள். ’’அதுவும் எல்.விஜயலட்சுமி பிரமாதமான டான்ஸர். அவங்க கூட நான் ஆடினா நல்லாவே இருக்காது’’ என்று மறுத்துவிட்டாராம். ஆனாலும் இயக்குநர் கே.சங்கர் வற்புறுத்தி ஆடவைத்தாராம். அந்தப் பாட்டுக்கு எம்ஜிஆரும் கலக்கியிருந்தார். அதற்கும் முன்னதாக, இந்தப் படத்தில், ‘ஏய் நாடோடி... போகவேண்டும் ஒடோடி...’ என்ற பாடல் தொடங்கி முடியும் வரைக்கும், எம்ஜிஆரின் ஒவ்வொரு அசைவுக்கும், ஆட்டத்துக்கும் கைதட்டல், விசில்கள் பறந்தன.

மொத்தப் பாடல்களும் வாலி எழுதியிருப்பார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என்ற பாடல் திரும்பத்திரும்பக் கேட்க வைக்கும் அட்டகாசமான பாடல். ‘உள்ளம் என்றொரு கோயிலிலே...’ என்று வித்தியாசமான காதல் உணர்வை, காதலின் அடர்த்தியைச் சொல்லியது பாடல். முக்கியமாக... ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எம்ஜிஆர், சரோஜாதேவி இருவரின் உடையழகும், அந்த சாரட் வண்டியும் முக்கியமாய் அந்தக் குதிரையுமாக.. மொத்தப் பாடலும் கவிதை. பாடல் காட்சிகள் அனைத்தும் பேரழகு!

ஏவிஎம் படம் என்றாலே நடிகர் அசோகன் இருப்பார். இதிலும் அசோகன் நடித்தார். ஆனால், வில்லன் இல்லை. சிறப்பான, ஜென்டில்மேன் கதாபாத்திரம். அமர்க்களமாக நடித்தார். அப்படியெனில்... வில்லன்? எம்ஜிஆரின் ‘அன்பே வா’ படத்தில் வில்லன் என்று எவருமே இல்லை. ஒருகட்டத்தில், உறவுக்கார சரோஜாதேவியின் காதலையும் நண்பர் எம்ஜிஆரின் காதலையும் அறிந்து புரிந்து, அசோகன் விட்டுக்கொடுக்கும் இடம் அற்புதமான காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆர் படமென்றாலே ஏழெட்டு சண்டைக் காட்சிகளும் சாகசங்களும் இருக்கும்தானே. இதில், ஒரேயொரு சண்டைக்காட்சிதான். அதுவும் படத்துடன் இயல்பாக வந்திருக்கும்.

‘பணத்துக்காகத்தான் காதலா, சாதாரண ஆள் என்றால் காதல் இல்லையா’ என்பது போன்ற சின்னச்சின்ன சந்தேகங்களும், அதனால் ஏற்படும் சண்டைகளும் படத்துக்கு இன்னும் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்தன. எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.

மாருதிராவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். எம்எஸ்வியின் இசை, பேரானந்தம். ஆரூர்தாஸின் ஜிலீர் வசனங்கள், காட்சியின் அழகை இன்னும் சுவாரஸ்யமாக்கின. எம்ஜிஆர், சரோஜாதேவி ஜோடியின் நடிப்பும் நாகேஷ் சரவெடி காமெடியும் பிரமாதம். எல்லாவற்றையும் விட, சிம்லா காட்சிகளும் இன்னும் நம்மை குளிரச்செய்யும். டி.ஆர்.ராமச்சந்திரனும் அவர் மனைவியாக நடிக்கும் டி.பி.முத்துலட்சுமியும் காமெடியில் கவனம் ஈர்ப்பார்கள்.

1966-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் நன்னாளில் வந்தது ‘அன்பே வா’. ஏவி.எம். - எம்ஜிஆர் கூட்டணியில் வந்த இந்தப் படம், வசூலில் மகத்தான சாதனையைப் படைத்தது.

‘’என் திரை வாழ்வில் ‘அன்பே வா’, என் பாணியில் இல்லாமல் புது பாணியில் அமைந்த படம். எனக்கு வித்தியாசமான படம். என்னால் மறக்கவே முடியாத படம்’’ என்று எம்ஜிஆர் பல தருணங்களில் ‘அன்பே வா’ படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். 57 வருடங்களாகி விட்டன; ‘அன்பே வா’ திரைப்படத்தை எவரால் மறக்க முடிகிறது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in